‘அரசியலமைப்புக்கு எதிரானது’: வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு


புதுடெல்லி: வக்ஃப் வாரியங்களை நிர்வகிக்கும் சட்டத் திருத்தத்தை மக்களவையில் தாக்கல் செய்ய காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவிக்கும் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற வளாகத்தில், ராகுல் காந்தியின் தலைமையில் நடந்த காங்கிரஸ் கட்சியின் மக்களவை எம்.பி.கள் கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்தச் சட்டத்திருத்த மசோதாவை காங்கிரஸ் எம்.பி-க்கள் எதிர்க்கப் போவதாக கூட்டத்துக்குப் பின்பு அக்கட்சியைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்தார்.

இதனிடையே, காங்கிரஸ் கட்சி எம்.பி-க்கள் கே.சி.வேணுகோபால் மற்றும் ஹிபி ஈடன் ஆகியோர் மக்களவையில் இந்த மசோதா தாக்கல் செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நோட்டீஸ் கொடுத்துள்ளனர். இதுகுறித்து கே.சி. வேணுகோபால் கூறுகையில், "இந்த மசோதாவை காங்கிரஸ் எதிர்க்கும். அந்த விவகாரம் தொடர்பாக நான் நோட்டீஸ் கொடுத்துள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.

இந்த மசோதா அரசியலமைப்புக்கு எதிரானது என்பதால் அதனை எதிர்க்கிறேன் என்றும், அது சொத்துரிமைக்கு முரணாக (பிரிவு 300 ஏ) இருப்பதாகவும் ஈடன் தனது நோட்டீஸில் தெரிவித்துள்ளதாக தகவல் அறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் அவர் தனது நோட்டீஸில், இந்த மசோதா போதுமான சட்டப்பாதுகாப்பு இல்லாமல் தனிநபர் மற்றும் மத நிறுவனங்களின் சொத்துரிமைகளை மீறும் சாத்தியங்கள் உள்ளன. இந்த மசோதா சட்டப்பிரிவு 25ன் கீழ் வழங்கப்பட்டுள்ள மத சுதந்திரத்தை மீறுவதாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

புதிய சட்டத்திருத்தம், வக்ஃப் வாரியங்களை நிர்வகிக்கும் தற்போதைய சட்டத்தில் வாரியத்தில் முஸ்லிம் பெண்கள் மற்றும் முஸ்லிம் அல்லாதவர்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வது உட்பட பெரிய அளவிலான மாற்றங்களை முன்வைக்கிறது. மேலும் வக்ஃப் வாரியச் சட்டம் 1995-ஐ, ஒருங்கிணைந்த வக்ஃப் மேலாண்மை, அதிகாரமளித்தல் மற்றும் மேம்பாட்டுச் சட்டம் 1995 என பெயர் மாற்ற முயல்கிறது.

மக்களவையில் இச்சட்டம் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பாக, செவ்வாய்க்கிழமை இரவு மக்களவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது.

x