வினேஷ் போகத் விவகாரம் தொடர்பாக அமளி: மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு


புதுடெல்லி: பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்டது குறித்து மாநிலங்களவையில் விவாதிக்க அனுமதிக்க மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து இண்டியா கூட்டணி எம்.பி.கள் வெளிநடப்புச் செய்தனர்.

மாநிலங்களவையில் இந்த விவகாரத்தை எழுப்பிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, "பாரிஸ் ஒலிம்பிக்கில் 50 கிலோ எடைப் பிரிவு மல்யுத்தப் போட்டியின் இறுதிப் போட்டிக்கு முன்பாக, 100 கிராம் எடை அதிகமாக இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டு, வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை கண்டறிவது மிகவும் முக்கியமானது. வினேஷ் போகத்தின் விவகாரம் மிகவும் முக்கியமானது. இதன் பின்னணியில் இருப்பது யாரென்று தெரிய வேண்டும்" என்றார்.

இதற்கு பதில் அளித்த மாநிலங்களவைத் தலைவர் ஜக்தீப் தன்கர், "இந்த விவாகரத்தில் வேதனையால் அவர்களின் (எதிர்க்கட்சிகள்) இதயங்களில் மட்டுமே ரத்தம் வடிவதாக அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். குடியரசுத்தலைவர், பிரதமர், நான் உட்பட ஒட்டுமொத்த தேசமும் வேதனையின் வலியை உணர்கிறது. இந்த விஷயத்தை அரசியலாக்குவது அந்தப் பெண்ணுக்கு (வினேஷ் போகத்) மிகப்பெரிய அவமரியாதையாகும். அவர் கடந்து செல்ல வேண்டிய தூரம் மிகவும் அதிகம்.

ஹரியாணா அரசு உடனடியாக அவருக்கு தேவையான நிதியுதவிகளை அறிவித்து, அவரை பதக்கம் வென்றவராக அங்கீகரித்திருப்பது தனக்கு மகிழ்ச்சியளிக்கிறது" என்று தெரிவித்தார்.

என்றாலும் இந்த விவாகாரம் குறித்து தொடர்ந்து விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரினர். இதனால் அவையில் அமளி ஏற்பட்டது. அப்போது, அவைத் தலைவரை நோக்கி சத்தம் போட்டதற்காக திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையனை ஜக்தீப் தன்கர் கண்டித்தார்.

அவர், "உங்கள் நடத்தை சபையை அவமானப்படுத்துகிறது. உங்களின் நடத்தைக்காக நான் உங்களைக் கண்டிக்கிறேன். அடுத்தமுறை நான் உங்களை வெளியேற்றி விடுவேன். தலைவரை நோக்கி நீங்கள் சத்தமிட முடியாது" என்று கடிந்துகொண்டார்.

x