மக்கள் தாங்கள் உண்ணும் உணவின் தரத்தைச் சரிபார்க்க உணவுப் பரிசோதனை கருவியை வழங்க பெங்களூரு சுகாதாரத்துறை யோசித்து வருகிறது.
சமைத்து சாப்பிடும் வழக்கம் என்பது இந்தியாவில் உள்ள நடுத்தர மக்களின் வீடுகளில் குறைந்து வருகிறது. ஆன்லைனில் ஆர்டர் செய்து விரும்பிய உணவை உண்பவர்கள் ஒருபுறம் என்றால், விதவிதமான உணவைத் தேடு ஓட்டல்களுக்குச் செல்பவர்கள் மறுபுறம். ஆனால், உணவின் சுவையை அறிந்த அளவு அவை சுகாதாரமாக தயாரிக்கப்படுகிறதா என்ற விவரம் மக்களுக்குத் தெரிவதில்லை.
இனி அப்படியான விவரம் தெரியாத மக்களாக பெங்களூருவைச் சேர்ந்தவர்கள் இருக்கமாட்டார்கள் என்பதற்கு சுகாதாரத்துறை எடுத்து வரும் நடவடிக்கை காரணமாக இருக்கிறது. பஞ்சு மிட்டாய், செயற்கை ரசாயனங்கள் மூலம் வண்ணம் பூசப்பட்ட கபாப் தடை செய்யப்பட்ட நிலையில் இனி எதை சாப்பிடலாம், எதை சாப்பிடக்கூடாது என்பதை மக்களே தீர்மானிக்க சுகாதாரத்துறை மாஸ்டர் பிளானை கொண்டு வந்துள்ளது. இதற்கான நடவடிக்கையில் கடந்த ஓரிரு மாதங்களாக உணவுத்துறையும், சுகாதாரத்துறையும் மும்முரம் காட்டி வருகின்றன.
அதன்படி மக்கள் தாங்கள் உண்ணும் உணவின் தரத்தை கண்டறிய கிட் வழங்க உணவு மற்றும் சுகாதாரத்துறை யோசித்து வருகிறது. அசுத்தமான உணவு மற்றும் உணவின் தரம் குறித்து பல குற்றச்சாட்டுகள் எழுந்த பின்னணியில், சுகாதாரத்துறை இந்த மாஸ்டர் பிளானை கொண்டு வந்துள்ளது. உணவு மதிப்பீட்டைக் கண்டறிய இப்படியான ஏற்பாட்டை மக்களுக்கு அறிமுகப்படுத்துவது இதுவே முதல் முறை என சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ஹர்ஷா குப்தா தகவல் தெரிவித்துள்ளார்.
இது ஒரு நல்ல முன்னேற்றம் என ஓட்டல் அமைப்பு உட்பட பல அமைப்புகள் தெரிவித்துள்ளன. இதனால் மக்கள் அசுத்தமான உணவை உட்கொள்வது தடுக்கப்படும் என பெங்களூரு நகர ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் பி.சி.ராவ் தெரிவித்துள்ளார். இது தவிர, சுகாதாரத் துறை, நகரில் நான்கு பரிசோதனை ஆய்வகங்களையும் அமைத்துள்ளது.
உணவுக்கு பயன்படுத்தப்படும் பொருட்களின் தரம் சரியாக உள்ளதா என்பதை பொதுமக்கள் அந்த இடத்திற்கு ரேட்டிங் ஏஜென்சியை அழைத்துச் சென்று உணவின் தரத்தை பரிசோதிக்கலாம். இதன் மூலம், மக்கள் ஸ்பாட் ஃபுட் டெஸ்ட் செய்ய வாய்ப்பு கிடைக்கும். விரைவான உணவுப் பரிசோதனைக் கருவியைப் பயன்படுத்துவதன் மூலம் உணவின் தரத்தை அந்த இடத்திலேயே அறிந்துகொள்ள முடியும் என்பது குறிப்பித்தக்கது.