மகளிர் உரிமைத் தொகை முதலில் வழங்கியது தமிழகமா? புதுச்சேரியா? - சட்டசபையில் வாக்குவாதம்


கோப்புப் படம்

புதுச்சேரி: மகளிர் உரிமைத் தொகையை முதலில் வழங்கியது தமிழகமா அல்லது புதுச்சேரியா என அமைச்சர்களும், திமுக எம்எல்ஏ-க்களும் இன்று புதுச்சேரி சட்டப்பேரவையில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று நடந்தது. அப்போது திமுக எம்எல்ஏ சம்பத் பேசுகையில், "தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி மகளிருக்கு ஆயிரம் வழங்கும் மகளிர் உரிமைத் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. புதுச்சேரியிலும் நிறைவேற்றியதற்கு நன்றி" என்றார்.

அப்போது அமைச்சர் நமச்சிவாயம் குறுக்கிட்டு, "மகளிர் உரிமைத் தொகையை முதலில் வழங்கியது யார்? பல நலத் திட்டங்களுக்கு முன்னோடி மாநிலமாக புதுச்சேரி உள்ளது. புதுவையைப் பின்பற்றித்தான் பிற மாநிலங்கள் செயல்படுகின்றன" என்றார். அவருக்கு ஆதரவாக அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், தேனீ ஜெயக்குமார், சாய் சரவணன் குமார் ஆகியோரும் பேசினர்.

இதையடுத்து திமுக எம்எல்ஏ சம்பத்துக்கு ஆதரவாக எதிர்கட்சித் தலைவர் சிவா, திமுக எம்எல்ஏ-க்கள் நாஜிம், அனிபால் கென்னடி, செந்தில்குமார், நாக தியாகராஜன் ஆகியோரும் பேசினர். இதனால் சபையில் அமைச்சர்களுக்கும், திமுக எம்எல்ஏ-க்களுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

எதிர்க்கட்சித் தலைவர் சிவா பேசுகையில், "தமிழ்நாட்டில்தான் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். வழங்கப்படும் தேதியையும் தெரிவித்தார். அதை பின்பற்றித்தான் புதுச்சேரியில் திட்டம் கொண்டு வந்தார்கள். புதுச்சேரியில் பல திட்டங்கள் அறிவித்தும் செயல்படாமல் உள்ளது. குறிப்பாக, பிங்க் பஸ், ரேஷன் கடை உள்ளிட்ட திட்டங்கள் நடைமுறைக்கு வரவில்லை" என்றார்.

அதற்கு அமைச்சர் லட்சுமி நாராயணன், “சென்டாக் மாணவர்கள் நிதி உதவி, சைக்கிள், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு என பல திட்டங்கள் புதுச்சேரியைப் பின்பற்றித்தான் பிற மாநிலங்கள் செயல்படுத்துகின்றன” என்றார்.

x