‘வயநாடு பேரழிவு மிக மோசமானது’ - தேசிய பேரிடராக அறிவிக்க மக்களவையில் ராகுல் காந்தி கோரிக்கை


புதுடெல்லி: வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மக்களவையில் வலியுறுத்தியுள்ளார்.

கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 30ம் தேதி முண்டக்கை, சூரல்மலை உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட கடும் நிலச்சரிவில் சிக்கி 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். வயநாட்டில் நிலச்சரிவு பாதிப்புகளை நேரில் பார்வையிட்ட மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இதனை தேசிய பேரிடர் அறிவிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக இன்று மக்களவையில் பேசிய ராகுல் காந்தி, “சில நாட்களுக்கு முன் நான் எனது சகோதரியுடன் வயநாடு சென்றேன். வயநாடு நிலச்சரிவின் விளைவாக ஏற்பட்ட பேரழிவு, வலி ​​மற்றும் துன்பத்தை நான் என் கண்களால் பார்த்தேன்.

மலையின் ஏறக்குறைய 2 கிலோ மீட்டர் பகுதி சரிந்து, கற்களின் ஆறாகவும், மண் ஆறாகவும் ஓடியது. இதில், 200 க்கும் மேற்பட்டோர் உயரிழிந்துள்ளனர். ஏராளமானோரை காணவில்லை. இறப்பு எண்ணிக்கை 400-ஐ தாண்டலாம்.

இது மிகப் பெரிய பேரழிவு. மத்திய அரசு ஒருங்கிணைந்த மறுவாழ்வுக்கான நிதி உதவியை வழங்க முன்வர வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன். பாதிக்கப்பட்டவர்கள் இடிந்த தங்கள் வீடுகளை கட்டிக்கொள்வது உட்பட அனைத்துவிதமான மறுவாழ்வு உதவிகளையும் மத்திய அரசு வழங்க வேண்டும்.

அதோடு, பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய அரசு இழப்பீடு வழங்க வேண்டும். இன்னும் குறிப்பாக, வயநாடு துயரத்தை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்துகிறேன். பல பேரழிவுகளை நான் பார்த்திருக்கிறேன். பல்வேறு இடங்களில் நிகழ்ந்த பல சம்பவங்களை பார்த்திருக்கிறேன். வயநாடு பேரழிவு மிகவும் மோசமானது' என அவர் தெரிவித்துள்ளார்

x