புதுடெல்லி: வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள வங்கதேசத்தின் தலைநகர் டாக்காவுக்கு ஏர் இந்தியா, இண்டிகோ விமான நிறுவனங்கள் சிறப்பு விமானங்கள் இயக்கி 400-க்கும் அதிகமானோரை இந்தியாவுக்கு அழைத்து வந்தன.
டாக்காவுக்கு சிறப்பு விமானம் ஒன்றினை இயக்கிய ஏர் இந்தியா அங்கிருந்து 6 குழந்தைகள் உட்பட 205 பேரை இன்று காலை டெல்லி அழைத்து வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதேபோல் இண்டிகோ நிறுவனம் டாக்காவிலிருந்து கொல்கத்தாவுக்கு சிறப்பு விமானம் ஒன்றினை இயக்கி வங்கதேசத்தில் இருந்து இந்தியர்களை செவ்வாய்க்கிழமை அழைத்து வந்தது.
செவ்வாய்க்கிழமை பிற்பகுதியில் டெல்லியில் இருந்து வங்கதேச தலைநகர் டாக்காவுக்குச் சென்ற ஏர் இந்தியாவின் சார்ட்டர்ட் விமானம், அங்கிருந்து, ஆறு குழந்தைகள், 199 பெரியவர்கள் என 205 பேரை இந்தியாவுக்கு அழைத்து வந்தது.
டாக்கா விமானநிலையம் தற்காலிகமாக மூடப்பட்ட நிலையில் ஆக.6ம் தேதி செவ்வாய்க்கிழமை டாக்காவில் இருந்து கொல்கத்தாவுக்கு இண்டிகோ நிறுவனம் சிறப்பு விமானம் ஒன்றினை இயக்கியது இந்த விமானம் வங்கதேசத்தில் உள்ள இந்தியர்களை தாயகம் அழைத்து வருவதற்காக இயக்கப்பட்டது. இந்த விமானம் மூலம் 200க்கும் அதிகமான பயணிகளை இண்டிகோ நிறுவனம் அழைத்து வந்ததாக தகவல் அறிந்தவர்கள் தெரிவித்தனர்.
இண்டிகோ நிறுவனம், டெல்லி, மும்பை மற்றும் சென்னையில் இருந்து தினமும் ஒரு விமானமும் கொல்கத்தாவில் இருந்து இரண்டு விமானங்களையும் டாக்காவுக்கு இயக்குகின்றன.
ஏர் இண்டியா நிறுவனம் தலைநகர் டெல்லியில் இருந்து டாக்காவுக்கு இரண்டு விமானங்களை இயக்குகிறது. ஏர் இந்தியா நிறுவனம் செவ்வாய்க்கிழமை காலை விமான சேவையை ரத்து செய்த நிலையில் மாலையில் விமானத்தினை இயக்கியது. இந்தநிலையில் புதன்கிழமை முதல் திட்டமிட்ட படி அதன் விமான சேவை தொடங்கும் என்று அறிவித்துள்ளது.
அண்டை நாடான வங்கதேசத்தில் அரசு வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு தொடர்பான மாணவர் போராட்டம் வன்முறையாக மாறியதைத் தொடர்ந்து அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சமடைந்தார். அங்கு இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது என்றாலும் அந்நாட்டில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.