நள்ளிரவு 1 மணி வரை மது விற்பனைக்கு அனுமதி: கர்நாடகா அரசு தாராளம்


கர்நாடகாவில் கலால் துறையில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சமீபத்தில் ஸ்காட்ச் விலையில் பெரும் குறைப்பு குறித்த அறிவிப்பை கலால் துறை வெளியிடடது. தற்போது மது பிரியர்களுக்கு மற்றுமொரு மகிழ்ச்சியான செய்தி கிட்டியுள்ளது. பெங்களூரு மகாநகர பலிகே (பிபிஎம்பி) கீழ் உள்ள பார்கள், ஓட்டல்கள், கிளப்புகள், நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் போர்டிங் ஹவுஸ்களில் நள்ளிரவு 1 மணி வரை மது விற்பனை செய்ய மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.

வர்த்தகத்தை மேம்படுத்தும் வகையில், பிபிஎம்பியின் கீழ் உள்ள பார், கிளப் மற்றும் பிற வணிக நிறுவனங்கள் அதிகாலை 1 மணி வரை திறந்திருக்க அனுமதிக்கப்பட்டுள்ளது என்று அரசு கூறியுள்ளது. கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற 2024-25-ம் ஆண்டுக்கான பட்ஜெட் உரையில் முதல்வர் சித்தராமையா இதனை அறிவித்திருந்தார்.

அதன்படி, இந்த முன்மொழிவுக்கு நிதித்துறை ஒப்புதல் அளித்ததை கருத்தில் கொண்டு, , நகர்ப்புற வளர்ச்சித் துறை கடந்த ஜூலை 29-ம் தேதி ,இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு பிபிஎம்பி வரம்புகளுக்கு உட்பட்ட மதுபான வர்த்தக நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும். இந்த முடிவு மாநில அரசின் வருவாயை மேம்படுத்த உதவும். நகரில் உள்ள ஓட்டல்கள் மற்றும் உணவகங்களை 24 மணி நேரமும் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று கோரி வரும் பிக் பெங்களூரு ஹோட்டல் சங்கம் (பிபிஹெச்ஏ), அரசின் இந்த முடிவை வரவேற்றுள்ளது.

இதுகுறித்து அதன் தலைவர் பி.சி.ராவ் கூறுகையில்," மது விற்பனையை நள்ளிரவு 1 மணி வரை நீட்டித்தது வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும். இதனால் பெங்களூரு மக்கள் பெரிதும் பயனடைவார்கள். இந்த முடிவு அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் வழிவகுக்கும். அனைத்து பார்கள் மற்றும் உணவகங்கள் பிபிஎம்பி அதிகார வரம்பில் நள்ளிரவு 1 மணி வரை மட்டுமே திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன" என்றார். ஆனால், இந்த முடிவுக்கு பொதுமக்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் நகரில் அமைதியும், நல்லிணக்கமும் சீர்குலைந்துவிடும் என்று அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

x