ஷிரூர் மலைச்சரிவு: 23 நாட்களுக்குப் பிறகு கடலில் மிதந்தது கேரளா ஓட்டுநர் சடலமா?


ஹொன்னாவர் கடலில் அடையாளம் தெரியாத சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது ஷிரூர் மலைச்சரிவில் காணாமல் போன கேரளா லாரி ஓட்டுநர் அர்ஜூனின் சடலமா என டிஎன்ஏ பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

கர்நாடகா மாநிலம், உத்தர கன்னடா மாவட்டம் அங்கோலா தாலுகாவில் ஷிரூர் கிராமம் உள்ளது. கடந்த ஜூலை16-ம் தேதி பெய்த கனமழை காரணமாக, ஷிரூர் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். 8 பேரின் உடல்களுடன் மேலும் மூவரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது ஷிரூர் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் இருந்து 25 கி.மீ தொலைவில் உள்ள ஹொன்னாவர் கடலில் அடையாளம் தெரியாத சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சடலம், கங்காவலி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட கேரளா லாரி ஓட்டுநர் அர்ஜூன் (30) என்பவருடையது என சந்தேகிக்கப்படுகிறது. ஆனால், அவர் தானா என்று இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

இந்த சடலத்தை கரைக்கு கொண்டு வந்து டிஎன்ஏ பரிசோதனைக்கு போலீஸார் அனுப்பி வைத்துள்ளனர். இதற்காக அர்ஜூனின் சகோதரர் அபிஜித்தின் மாதிரிகள் டிஎன்ஏ பரிசோதனைக்காக எடுக்கப்பட்டுள்ளன. கேரளா மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த லாரி ஓட்டுநர் அர்ஜூன் ஜூலை 16-ம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் காணாமல் போனார். அவர் லாரியுடன் கங்காவலி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. தொடர்ந்து தேடியும் அர்ஜூன் பற்றிய எந்த தடயமும் கிடைக்கவில்லை. சீரற்ற காலநிலை காரணமாக தேடுதல் பணி இடைநிறுத்தப்பட்டது.

நிலச்சரிவு காரணமாக ஆற்றில் தேங்கிய சேற்றில் புதைந்திருந்த லாரிக்குள் அர்ஜூன் சிக்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதற்கிடையில், பல்வேறு கருவிகளைப் பயன்படுத்தி தேடுதலுக்குப் பிறகு ஆற்றங்கரையில் எந்த சடலமும் கிடைக்கவில்லை. கங்காவலி ஆற்றில் அதிக நீரோட்டம் மற்றும் ஆற்றின் ஆழம் ஆகியவை மீட்புக் குழுக்களுக்கு பெரும் சவாலாக உள்ளது. நிலச்சரிவில் சிக்கி காணாமல் போனவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக உயர் நீதிமன்றத்தில் கேரளா மாநில அரசு தெரிவித்துள்ளது.

x