101 உடல்கள் அடையாளம் காணப்படவில்லை - அழுகும் நிலையில் சடலங்கள்: ஒடிசா ரயில் விபத்தில் தொடரும் சோகம்


ஒடிசா ரயில் விபத்து சடலங்கள்

ஒடிசாவின் பாலாசோரில் நடந்த பயங்கர ரயில் விபத்தில் 278 பேர் உயிரிழந்தனர், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்தியாவின் மிக மோசமான இந்த ரயில் விபத்து நடந்து நான்கு நாட்களுக்குப் பிறகும் நூற்றுக்கும் மேற்பட்ட உடல்களை அடையாளம் காணமுடியாமல் உறவினர்கள் தவித்து வருகின்றனர்.

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல் புவனேஸ்வரில் உள்ள எய்ம்ஸ் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. அங்கே இறந்து போனவர்களின் உடல்களை அடையாளம் காண முடியாமல் உறவினர்கள் பலரும் திணறிக்கொண்டிருக்கிறார்கள். உயிரிழந்த உடல்களின் படங்கள் திரையில் காண்பிக்கப்படுகிறது. ஆனால் அந்த படங்களின் மூலம் உடல்களை அடையாளம் காண முடியவில்லை என்று பலரும் விரக்தியடைந்தனர். பயங்கரமான இந்த விபத்தில் முகம், கைகால்கள் கடுமையாக சிதைக்கப்பட்டுள்ளது. மேலும், உயர்-அழுத்த மின்சாரத்தால் சில உடல்கள் அடையாளம் காண முடியாத அளவிற்கு எரிந்துள்ளது. இதனால் உடல்களை அடையாளம் காண முடியாமல் உறவினர்கள் தவிக்கின்றனர்.

இது தொடர்பாகப் பேசிய கிழக்கு மத்திய ரயில்வேயின் கோட்ட ரயில்வே மேலாளர் ரிங்கேஷ் ராய், " இந்த விபத்தில் சுமார் 1,100 பேர் காயமடைந்தனர், அவர்களில் சுமார் 900 பேர் சிகிச்சைக்குப் பிறகு வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். சுமார் 200 பேர் மாநிலத்தில் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்தில் இறந்த 278 பேரில் 101 உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை" என்று கூறினார்.

புவனேஸ்வர் மாநகராட்சி ஆணையர் விஜய் அம்ரித், "புவனேஸ்வரில் வைக்கப்பட்டுள்ள மொத்தம் 193 உடல்களில் 80 உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில் 55 உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன" என்று தெரிவித்தார். அதிக வெப்பம் காரணமாக உடல்கள் விரைவில் அழுகும் நிலையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே விரைவில் உடல்களை அடையாளம் கண்டு உறவினர்களிடம் ஒப்படைக்க அரசாங்கம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

x