நள்ளிரவில் பாலம் இடிந்து ஆற்றுக்குள் விழுந்த தமிழக லாரி: கர்நாடகாவில் பரபரப்பு


உத்தர கன்னடா மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் கட்டப்பட்ட பாலம் நள்ளிரவில் இடிந்து விழுந்தது. அப்போது அவ்வழியே சென்ற தமிழ்நாடு லாரி ஆற்றிற்குள் விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், உத்தர கன்னடா மாவட்டத்தில் கோடிபாக் அருகே கார்வார் மற்றும் கோவா இடையே தேசிய நெடுஞ்சாலையில் புதிய பாலம் கட்டப்பட்டுள்ளது. அதற்கு அருகே பழைய பாலம் வேறு பாதைக்குப் பயன்படுத்தப்பட்டது. 41 ஆண்டுகளாக இந்த பாலம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பாலத்தின் வழியே நேற்று நள்ளிரவில் கோவாவில் இருந்து ஹூப்ளிக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த எஸ்எஸ்எம் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தின் லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென பாலம் இடிந்து விழுந்தது.

இதனால் லாரியோடு அதை ஓட்டி வந்த பாலமுருகன் ஆற்றிற்குள் விழுந்தார். அப்போது ஆற்றில் விழுந்த லாரியின் முன்பக்க கண்ணாடி உடைந்ததால் ஓட்டுநர் பாலமுருகன், கேபினில் நின்று உதவி கோரி சத்தம் போட்டார். அப்போது அவ்வழியே ரோந்து வந்த எஸ்.பி நாராயணா மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அத்துடன் உள்ளூர் மீனவர்களின் உதவியுடன் லாரி ஓட்டுநர் பாலமுருகனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அத்துடன் ஆற்றின் மேல் கட்டப்பட்டுள்ள மற்றொரு பாலத்தில் போக்குவரத்துக்கு அனுமதி அளித்தனர். பாலம் இடிந்து விழுந்ததில் ஆற்றிற்குள் அதிக வாகனங்கள் விழுந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதால் போலீஸார் தேடுதல் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கார்வார் நகர் காவல் நிலையத்தில் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் மற்றும் பாலம் கட்டிய ஐஆர் நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நள்ளிரவில் பாலம் இடிந்து ஆற்றுக்குள் லாரி விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

x