தமிழக மீனவர்களை பாதுகாக்க மத்திய அரசு என்ன செய்தது? - மாநிலங்களவையில் வைகோ கேள்வி


புதுடெல்லி: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று மாநிலங்கள வையில் பேசியதாவது:

தமிழக மீனவர்கள் இலங்கைகடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்படுகின்றனர். நடுக்கடலில்கொடூரமாக கொல்லப்படுகின்றனர். சிறையில் அடைக்கப்படுகின் றனர். தற்போதுகூட 83 தமிழக மீனவர்கள் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

2014-ம் ஆண்டு இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே கிரிக்கெட் போட்டி நடந்தது. அந்தப் போட்டி நடப்பதற்கு முன்பு, இந்திய கடற்படைக்குள் நுழைந்த இலங்கை படையினர் இந்திய மீனவர்களைப் பார்த்து, “இந்தப் போட்டியில் இலங்கை தோற்றால் உங்களை கொன்றுவிடுவோம்” என மிரட்டினர். அந்தப் போட்டியில் இலங்கை தோற்றது. இதையடுத்து அன்றைய தினமே, கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நான்கு தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கொடூரமாக கொலை செய்தது.

கடந்த 40 வருடங்களில் 875 தமிழக மீனவர்கள் இலங்கைகடற்படையினரால் கொல்லப்பட்டி ருக்கிறார்கள். ஆனால், மத்திய அரசு தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கடந்த வாரம் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கினர். இதில் ஒரு மீனவர் கடலில் மூழ்கினார். மற்றொருவருக்கு என்ன ஆனது என்ற தகவலே இல்லை. தவிர, இரண்டு மீனவர்களையும் பிடித்துச் சென்று சிறையில் அடைத்தனர். இதனிடையே புதுக்கோட்டையைச் சேர்ந்த மேலும் 4 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியை சந்தித்து நான் முறையிட்டேன். வெளியுறவுத் துறை அமைச்சரை இருமுறை சந்தித்து பேசினேன். தமிழக மீனவர்கள் இந்தியாவின் குடிமக்களா, இல்லையா? அவர்கள் இந்திய குடிமக்கள் என்றால், அவர்களைப் பாதுகாக்க மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

ஆர்ம் பெல்ட் அணிந்து பேசிய வைகோ: கடந்த மே மாதம், கட்சி நிர்வாகியின் இல்ல திருமண விழாவில் பங்கேற்க வைகோ திருநெல்வேலி சென்றார். அங்கு கால் இடறி கீழே விழுந்ததில் இடது கை தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. ஒருவார சிகிச்சைக்கு பின்னர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய அவர், மருத்துவர்களின் ஆலோசனையின்படி நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் ஓய்வில் இருந்து வந்தார். நேற்று நாடாளுமன்றம் சென்ற வைகோ, மாநிலங்களவையில் உரையாற்றினார். அப்போது, கை மற்றும் தோள்பட்டை அசையாமல் இருக்க, ஆர்ம் ஸ்லிங் பெல்ட் அணிந்து வலியையும் பொருட்படுத்தாமல் அவர் பேசியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது

x