பிரதமர் கோடி தலைமையில் கடந்த 27-ம் தேதி நடைபெற்ற நிதி ஆயோக் எட்டாவது ஆட்சிக்குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்கள் புறக்கணித்திருக்கின்றன. ‘’மாநிலங்கள் வளரும் போது இந்தியா வளரும். 140 கோடி இந்தியர்களின் கனவை நனவாக்க ஒரே பாதையில் இணைந்து செயல்படுவோம்’’ என பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருக்கும் நிலையில், அவரின் எண்ணங்களுக்கு எதிர்திசையில் பயணிப்பதாக இந்த 10 மாநிலங்கள் மீதும் விமர்சனங்களை வீசுகிறது பாஜக.
மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்தே மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை உரு மாற்றியும் பெயர் மாற்றியும் நடைமுறைபடுத்தி வருகிறது. அப்படி உருமாறியதில் ஒன்று திட்டக் கமிஷன். சுதந்திரத்திற்குப் பிறகு, தேசத்தின் அனைத்துப் பகுதிகளும் சம அளவில் வளர்ச்சி பெறுவதற்காக ஏற்படுத்தப்பட்ட அமைப்பு இதை, ‘நிதி ஆயோக்’ என மாற்றம் செய்தது பாஜக அரசு. மாநிலங்களுக்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்யும் இதன் நிர்வாக கவுன்சில் தலைவராக பிரதமரும், அனைத்து மாநில முதல்வர்கள், ஆளுநர்கள், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் இதன் அங்கத்தினர்களாகவும் இருக்கிறார்கள்.
கடந்த வாரம், ‘2047-ல் வளர்ந்த இந்தியா’ என்ற கருப்பொருளில் பிரதமர் மோடி தலைமையில் கூடிய நிதி ஆயோக் ஆட்சிமன்றக் கூட்டத்தில், பாஜக மற்றும் அதற்கு தோழமையாக உள்ள கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களின் முதல்வர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். தமிழக முதல்வர் ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன், பீகார் முதல்வர் நிதீஷ்குமார், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், கர்நாடக முதல்வர் சித்தராமையா ஆகிய 10 மாநில முதல்வர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
“மாநிலங்களுக்கு நிதியைப் பெற்றுத்தரக் கூடிய நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ளாததன் மூலம் மாநில மக்களுக்கு நன்மைகள் கிடைக்கவிடாமல் முட்டுக்கட்டை போடுவதாக” எதிர் கட்சிகள் மீது பாய்ந்திருக்கிறார் முன்னாள் மத்திய அமைச்சரான ரவிசங்கர் பிரசாத். “நிதி ஆயோக் ஆட்சிக் குழு கூட்டத்தை சில மாநில முதல்வர்கள் புறக்கணித்தது மக்களுக்கு விரோதமான செயலாகும்” எனவும் கூறியுள்ள அவர், “நூற்றுக்கும் மேற்பட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்ட இது போன்ற முக்கியத்துவம் வாய்ந்த கூட்டத்தை சில மாநில முதல்வர்கள் புறக்கணித்தது எந்த வகையில் நியாயம்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
“இவர்களின் புறக்கணிப்பால் பாதிக்கப்படப் போவது இவர்களை நம்பி வாக்களித்த அந்தந்த மாநில மக்கள்தான். பிரதமர் மோடியை எதிர்ப்பதாக எண்ணிக்கொண்டு தங்கள் மாநில மக்களுக்கு கிடைக்க வேண்டிய நன்மைகளை கிடைக்க விடாமல் செய்கிறார்கள்” எனவும் கடுமையாக சாடியிருக்கிறார் ரவிசங்கர்.
இந்தக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ‘’மத்திய - மாநில அரசுகள் 140 கோடி மக்களின் கனவை நனவாக்க ஒரே பாதையில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். 2047-ம் ஆண்டுக்கான வளர்ந்த இந்தியா என்ற இலக்கை அடையும் நோக்கில் செயல்பட வேண்டும். அடுத்த 25 ஆண்டுகளுக்கு தேவையான உத்திகளை மாநிலங்கள் உருவாக்கி அதனை தேசிய வளர்ச்சி திட்டத்துடன் இணைப்பதில் நிதி ஆயோக் முக்கிய அமைப்பாக பங்காற்றும்’’ எனச் சொன்னார்.
இந்தக் கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலினோ அல்லது அவரது சார்பில் மூத்த அமைச்சரோ பங்கேற்காதது மாநில வளர்ச்சியில் திமுக அரசுக்கு அக்கறை இல்லை என்பதையே காட்டுகிறது என தமிழக பாஜக புகார் கூறியுள்ளது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய தமிழக பாஜக துணை தலைவர் வி.பி.துரைசாமி, ‘’தமிழக வளர்ச்சிக்கான திட்டங்களை எடுத்து சொல்லி அதற்கான நிதி மற்றும் அனுமதியைப் பெறக்கூடிய இத்தகைய கூட்டத்தை தமிழக முதல்வர் புறக்கணித்தது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. அவர்களுக்கு தமிழக மக்கள் மீது அக்கறை இல்லாத நிலையையே இது எடுத்துக் காட்டுகிறது.
முதல்வர் வெளிநாடு சென்றிருருந்தால் அவரது பிரதிநிதியாக மூத்த அமைச்சர் யாரையாவது இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளச் செய்திருக்க வேண்டும். இது போன்ற கூட்டத்தில் நம் மாநில பிரதிநிதிகள் யாரும் கலந்துகொள்ளாதது இதுவே முதல் முறை. இதுபோன்ற செயல்களால் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கையை முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து செய்து வருகிறார்.
இந்த கூட்டத்தின் பங்கேற்றிருந்தால், நம் மாநிலத்திற்கு வர வேண்டிய நிதி பங்கீடு குறித்து எடுத்துச் சொல்லி நமக்கான ஒதுக்கீட்டை பெற்றிருக்கலாம். திட்டங்களை நிறைவேற்றுவதில் அதிகரித்து வரும் செலவினங்கள் குறித்து விளக்கி கூடுதலான நிதியைப் பெற்றிருக்கலாம். நமக்குத் தேவையான திட்டங்கள், அதற்கான நிதி குறித்து எடுத்துச் சொல்லி அழுத்தம் தந்து வாதாடி உரிய தீர்வு கண்டிருக்கலாம். இவை எதையும் செய்யாமல் கூட்டத்தில் ஆப்சென்ட் ஆகிவிட்டு மத்திய அரசை குறைசொல்ல இவர்களுக்கு தார்மிக உரிமையே கிடையாது” என்றார்.
நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக அரசின் பிரநிதிகள் கலந்துகொள்ளாதது குறித்து விளக்கம் பெற நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவை தொடர்பு கொண்டோம். அவர் நமது அழைப்பை ஏற்கவில்லை. முன்னாள் நிதியமைச்சரும், தற்போதைய தகவல் தொழிநுட்பத் துறை அமைச்சருமான பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனை தொடர்பு கொண்டோம். நமது அழைப்பை எடுத்த அவரது உதவியாளர், ‘’அமைச்சர் மீட்டிங்கில் இருக்கிறார். பின்னர் தொடர்பு கொள்வார்’’ என்றார். இறுதிவரை அவருக்கும் நமக்குப் பதில்சொல்ல லைனில் வரவில்லை.
நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ளாததைக் காரணம் காட்டி தமிழகத்துக்கு ஒதுக்க வேண்டிய நிதியை மத்திய அரசு நிறுத்திவைக்கப் போவதில்லை. என்றாலும் எல்லா விஷயத்திலும் எதிர்க்கட்சி வாதம் செய்து கொண்டிருக்காமல் நமக்கான உரிமையைக் கேட்டுப் பெறுவதற்கு இது போன்ற முக்கியத்துவம் வாய்ந்த கூட்டங்களில் தமிழக அரசு கலந்து கொள்வதுதான் சரியாக இருக்க முடியும். கூட்டத்தில் கலந்து கொண்டு நமக்கான தேவைகளை எடுத்துச் சொல்லி இருக்க வேண்டும். அதற்கு மத்திய அரசு செவிசாய்க்காமல் போயிருந்தால் அதன் பிறகு இந்த விவகாரத்தை மக்கள் மன்றத்துக்குக் கொண்டு சென்றிருக்கலாம். அதைவிடுத்து, கூட்டத்தை புறக்கணித்துவிட்டு பிற்பாடு மத்திய அரசு மீது குறை சொல்வது சரியல்லவே!