தமிழக, கேரள எல்லையில் கோயிலுக்குச் சாமி கும்பிட வந்த இரு கும்பல், போலீஸார் முன்னிலையில் விறகு கட்டைகளால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
தென்காசி மாவட்டம், தமிழக- கேரளா எல்லைப் பகுதியில் உள்ள கோட்டைவாசல் கருப்பசாமி கோயிலுக்கு தூத்துக்குடி பகுதியைச் சேர்ந்த சில நபர்கள் சாமி கும்பிடுவதற்காக வருகை தந்துள்ளனர். அதேபோல், தமிழக - கேரள எல்லை பகுதியை ஒட்டி அமைந்துள்ள தெற்கு மேடு என்கிற கிராமப் பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினரும் கோட்டைவாசல் கருப்பசாமி கோயிலுக்கு சாமி கும்பிடுவதற்காக சென்றுள்ளனர்.
அப்போது தூத்துக்குடி பகுதியைச் சேர்ந்த சில வாலிபர்கள், அவர்களது காரில் சத்தமாக பாடல் ஒலித்தபடி தமிழக- கேரளா எல்லையில் ஆட்டம் போட்டுள்ளனர். அதனால், அந்தப் பகுதியில் பெரும் இரைச்சல் ஏற்பட்ட நிலையில், தெற்கு மேடு பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சென்று சத்தத்தை குறைத்து பாட்டு கேட்கும் படி கூறியுள்ளனர். அப்போது இரு தரப்பினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்படவே, ஆவேசம் அடைந்த இரு தரப்பினரும் மாறி மாறி கைகளப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், அருகே இருந்த கடைகளில் இருந்த விறகு கட்டைகளை எடுத்து இரு தரப்பினரும் மாறி, மாறி தாக்கிக் கொண்ட நிலையில், தமிழக- கேரளா எல்லை பகுதியான திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு புளியரை காவல் நிலைய காவலர் ஒருவர் சென்றுள்ளார்.
ஆனால், அவர் முன்பே இரண்டு தரப்பினரும் மாறி மாறி தாக்கிக் கொண்ட நிலையில், அந்த பகுதியில் மேலும் பரபரப்பானது தொற்றிக் கொண்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, விரைந்து வந்த கேரளா போலீஸார் மாறி, மாறி தாக்கி கொண்ட கும்பலை தடுத்து நிறுத்தி இருவரையும் புளியரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து ஒப்படைத்தனர்.இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து புளியரை போலீஸார், தற்போது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், தமிழக- கேரளா எல்லைப் பகுதியான திருமங்கலம்- கொல்லம் தேசிய நெடுஞ்சாலையின் முக்கிய பகுதியில் நடைபெற்ற இந்த பிரச்சனையில் போலீஸார் முன்பே விறகு கட்டையால் ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கிக் கொண்டுள்ள சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.