சிபிசிஐடி போலீஸார் ஒரு தலைபட்சமாக விசாரணை நடத்தியுள்ளனர். அவர்களது விசாரணையின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை என கள்ளக்குறிச்சி மாணவியின் தாய் செல்வி தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள கனியாமூரில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த மாணவி கடந்த ஆண்டு ஜூலை 13-ம் தேதி பள்ளி வளாகத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். பள்ளி விடுதி கட்டிடத்தின் மாடியில் இருந்து கீழே குதித்து மாணவி தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோரும், உறவினர்களும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். அப்போது நடைபெற்ற போராட்டத்தின்போது பெரும் கலவரம் ஏற்பட்டு தனியார் பள்ளி கட்டிடம் முழுவதும் அடித்து நொறுக்கி சூறையாடப்பட்டு தீ வைத்தும் கொளுத்தப்பட்டது.
இதனையடுத்து தனியார் பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், பள்ளி ஆசிரியைகள் கிருத்திகா, ஹரிப்ரியா உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் குற்றச்சாட்டிற்குள்ளான தனியார் பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், பள்ளி ஆசிரியைகளான கிருத்திகா, ஹரிப்ரியா உள்ளிட்ட 5 பேர் மீது 1200 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிக்கையை கடந்த 15-ம் தேதி விழுப்புரத்தில் உள்ள தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸார் தாக்கல் செய்தனர்.
இந்நிலையில் விழுப்புரத்தில் உள்ள சிபிசிஐடி போலீஸாரின் அலுவலகத்திற்கு இன்று வருகை தந்த மாணவியின் தாய் செல்வி, தனது மகள் மரணம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள் மீது தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப் பத்திரிக்கையின் நகலை தனக்கு வழங்கக்கோரி மனு வழங்கினார்.
விழுப்புரம் சிபிசிஐடி ஏடிஎஸ்பி கோமதியை நேரில் சந்தித்து மாணவியின் தாய் செல்வி மனு வழங்கியிருக்கும் சூழ்நிலையில், அவரிடம் நேரடியாக குற்றப்பத்திரிக்கை நகலை உங்களிடம் வழங்க தங்களுக்கு அதிகாரமில்லை. இது தொடர்பாக விழுப்புரம் நீதிமன்றத்தை அணுகிடுமாறு சிபிசிஐடி போலீஸார் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே மாணவி தாய் செல்வி செய்தியாளர்களிடம் கூறுகையில், "இந்த வழக்கில் இருந்து பள்ளி ஆசிரியைகள் கிருத்திகா, ஹரிப்ரியா ஆகியோரை நீக்கியுள்ளனர். இது தொடர்பாக எங்களுக்கு சிபிசிஐடி போலீஸார் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. இது தொடர்பாக வரும் 5-ம் தேதி எனது கருத்தை தெரிவிக்குமாறு விழுப்புரம் நீதிமன்றம் எனக்கு மனு அனுப்பியுள்ளது. குற்றப் பத்திரிக்கையில் என்ன இருக்கிறது என்று தெரியாமல் நீதிமன்றத்தில் நான் எப்படி கருத்தை தெரிவிக்க முடியும்?
ஒருதலைப்பட்சமாக சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர். சிபிசிஐடி போலீஸாரின் விசாரணை மீது எனக்கு நம்பிக்கை இல்லை. ஒரு நபர் விசாரணை கமிஷன் நியமிக்க அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளோம்" என்றார்.