சிறகை விரி உலகை அறி - 99; ஷேக்ஸ்பியரின் நாடக கொட்டகை!


ஷேக்ஸ்பியர் குளோப் தியேட்டர் உட்புறம்

பள்ளியில் நாடகம் நடித்திருக்கிறீர்களா? மாவட்ட ஆட்சித்தலைவராகவும், சாலமோன் அரசராகவும் நான் நடித்திருக்கிறேன். நாடகங்களுக்கு தேர்வானது, பழகும்போது ஆசிரியருடன் ஏற்பட்ட உரசல்கள், அரங்கேற்றத்துக்குப் பிறகு கிடைத்த பாராட்டுகள் அனைத்தும் அப்படியே நினைவில் உள்ளன. பள்ளிக்கூட நினைவுகளை மறக்கத்தான் கூடுமோ? லண்டனில் உள்ள ஷேக்ஸ்பியர்’ஸ் குளோப் தியேட்டர் (Shakespeare’s Globe Theatre) பள்ளி நாடக நினைவுகளை இன்று கிளறிவிட்டது.

டப்ளினில் இருந்து லண்டன் திரும்பி, ஏற்கெனவே தங்கியிருந்த Airbnb விடுதிக்குச் சென்றேன். இரண்டு நாட்களுக்கு முன்பு அறையை செக் அவுட் செய்திருந்ததால், பெட்டியை வேறோர் அறையில் வைத்திருந்தேன். மறுபடியும் செக் இன் செய்தேன். தூங்கி களைப்பின்றி எழுந்தேன். தொடர்வண்டியில் பயணித்து, டவர் பாலத்தில் நடந்து, தேம்ஸ் நதியைக் கடந்து தென்கரையில் கால் வைத்தேன். வலது புறம் சிறிது நடந்து, ஷேக்ஸ்பியர்’ஸ் குளோப் தியேட்டர் சென்றேன். முன்பதிவு செய்திருந்தவர்கள் வந்ததும் சுற்றுலா தொடங்கியது. 4-வது வாயில் வழியாக நுழைந்தோம். மேடைக்கு முன்பாக நின்றோம்.

ஷேக்ஸ்பியர்’ஸ் குளோப் தியேட்டரில்

இரண்டு நகரங்கள் ஒன்றாகின

“ஏழைகளும் எளியவர்களும் வாழ்ந்த நகரத்தில் நீங்கள் நிற்கிறீர்கள்” என தொடங்கினார் வழிகாட்டி. புரியாமல் பார்த்தபோது, “தற்போது நீங்கள் பார்ப்பதுபோல, லண்டன் என்பது ஒரே நகரமாக முன்பு இருக்கவில்லை. தேம்ஸ் நதியின் வடகரையில் இருப்பது வெஸ்ட்மின்ஸ்டர் நகரம். அறிஞர்கள், செல்வந்தர்கள், பிரபுக்கள், அரசர்கள், பெரும் வணிகர்கள் அங்கே இருந்தார்கள். பக்கிங்காம் அரண்மனை, பிரிட்டிஷ் அருங்காட்சியகம், லண்டன் டவர் அனைத்தும் வடகரையில் அமைந்திருக்கிறது. நாம் தென்கரையில் நிற்கிறோம், இதுதான் அசல், லண்டன் நகரம். இங்குதான் புளோரன்ஸ் நைட்டிங்கேல் அருங்காட்சியகமும் இருக்கிறது” என்றார்.

என் நினைவுகள் உலகின் பல்வேறு நகரங்களுக்குப் பறந்தது. அமெரிக்காவில் அருகருகே அமைந்துள்ள மின்யாபோலிஸ் மற்றும் செய்ண்ட் பால் நகரங்கள், மினசோட்டா என்றும், ஹங்கேரியில், புடா மற்றும் பெஸ்ட் நரகங்கள் புடாபெஸ்ட் என்றும் ஒரே பெயரில் அழைக்கப்படுகின்றன. திருநெல்வேலி என பொதுவாக அழைத்தாலும், ஆற்றுக்கு அந்தப்பக்கம் திருநெல்வேலி இந்தப்பக்கம் பாளையங்கோட்டை எனும் இரண்டு நகரங்கள் உள்ளன. தாமரை ஊருணியின் வடகரையில் வடக்கு ஆண்டாவூரணி தென்கரையில் தெற்கு ஆண்டாவூரணி என தனித்தனி நிர்வாக அலகுகளுடன் அமைந்த, சண்டை – சமாதான வரலாறுகள் நிறைந்த ‘ஒரே ஊர்’ நான் பிறந்த ஆண்டாவூரணி.

ஷேக்ஸ்பியர் குளோப் தியேட்டர்

மதிக்கப்படாத லண்டன் மக்கள்

“அசல் லண்டன் நகரமான தென்கரையில் கூலிகளும், ஏழைகளும், எளியவர்களும் வாழ்ந்தார்கள். சுகாதாரமற்ற தெருக்கள், தொற்று நோய்கள், அடிக்கடி வெள்ளம் சூழ்தல், மது, சூதாட்டம், விபச்சாரம் என இப்பகுதி தத்தளித்தது. வடகரையில் வாழ்ந்தவர்கள், தென்கரையில் இருந்தவர்களை தீண்டத்தகாதவர்கள்போல பார்த்தார்கள். இதில் நகை முரண் என்னவென்றால், இன்றைய ஒட்டுமொத்த லண்டன் மாநகரத்தின் தொடக்கம் இந்த தென்கரையில் இருந்தே தொடங்கியது. கி.பி. 8-ஆம் நூற்றாண்டில் பெனடிக்டைன் துறவிகள் வடகரையில் துறவுமடம் தொடங்கிய பிறகு உருவானதே, வெஸ்ட்மின்ஸ்டர் நகரம்” என்றார் வழிகாட்டி.

தோல்வியில் துவலாத இதயம்

மேடை மீது ஏறினோம்.“வடகரையில், தி லாட் சேம்பர்லின்’ஸ் மென் (The Lord Chamberlain’s Men) நாடக நிறுவனம் இருந்தது. அதன் பங்குதாரர்களில் ஒருவராகவும், முக்கிய நாடக எழுத்தாளராகவும் ஷேக்ஸ்பியர் திகழ்ந்தார். 1598-இல் சில பங்குதாரர்கள் விலகியதாலும், அரசியின் ஆதரவு குறைந்ததாலும் இடத்தின் உரிமையாளர் ஒப்பந்தத்தை (Giles Alleyn) ரத்து செய்தார். கொட்டகையை தரைமட்டமாக்கினார்” என்று தொடர்ந்தார் வழிகாட்டி.

ஷேக்ஸ்பியர் குளோப் தியேட்டர் வாயில்

வழிகாட்டியுடன் நடந்து, பார்வையாளர்கள் மாடத்துக்குச் சென்று அமர்ந்தோம். “நாடகத்தில் பயன்படுத்திய பொருட்களை நடிகர்கள், பங்குதாரர்கள், தன்னார்வலர்கள் இணைந்து சிறிது சிறிதாக எடுத்துக்கொண்டு ஆற்றைக் கடந்து தென்கரைக்கு வந்தார்கள். வேறோர் இடத்தில், நாடக கொட்டகை கட்டத் தொடங்கினார்கள். அடிக்கடி வெள்ளம் வரும் சதுப்பு நிலம்தான், ஆனாலும், ஆழமாக குழிதோண்டி, சுண்ணாம்புக் கல்லால் நிறைத்து, செங்கல் சுவர் எழுப்பி, மர உத்திரங்களால் உருவாக்கினார்கள். கட்டிடத்தில் விழும் மழை நீர், தேம்ஸ் நதிக்குள் செல்லுமாறு அமைத்தார்கள். 3 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும்படி 28 டிசம்பர் 1598-இல் கொட்டகை தயாரானது. உலக உருண்டையுடன் ஹெர்குலஸ் நிற்கும் கொடி பறந்தது. அதில், ’உலகமே ஒரு நாடக மேடை’ என்று லத்தீனில் எழுதியிருந்தது. ஷேக்ஸ்பியரின் ஹாம்லட், ஒத்தெல்லோ, மேக்பெத், அந்தோனியும் கிளியோபட்ராவும் போன்ற நாடகங்கள் அரங்கேறின. வடகரை செல்வந்தர்கள் யாருக்கும் தெரியாமல், இரவோடு இரவாக படகில் வந்து நாடகம் பார்த்து திரும்பினார்கள். தி லாட் சேம்பர்லின்’ஸ் மென் நாடக நிறுவனம் வெற்றி பெற்றது.

1613, ஜுன் 29-ஆம் தேதி எட்டாம் ஹென்றி நாடகம் தொடங்கியது. திடீரென கூச்சல். எங்கும் தீ பரவியது. உயிரிழப்பு இல்லாவிட்டாலும், கொட்டகை முற்றிலும் சாம்பலானது. ஒரே ஆண்டில் மறுபடியும் கட்டி எழுப்பினார்கள். 1642-இல் லண்டனில் உள்ள நாடக கொட்டகைகளை மூட பாராளுமன்றம் உத்தவிட்டபோது, குளோப் இடிக்கப்பட்டது. இடம் வேறொருவருக்கு விற்கப்பட்டது” என்று வழிகாட்டி நிறுத்தினார். எல்லோரும் அவரையே பார்த்துக் கொண்டிருந்தோம்.

தி ரோஸ் நாடக கொட்டகை

இரண்டாவது மாடத்துக்குச் சென்று அமர்ந்தோம். “இன்னொரு தகவலையும் சொல்லிவிடுகிறேன். அரசி எலிசபெத் காலத்தில், 1594-இல், லண்டன் புறநகரில் செயல்பட இரண்டு நாடக கொட்டகைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஒன்று நகரத்தின் வட பகுதியில் ஷோர்டிச் (Shoreditch) பகுதியில் ‘தியேட்டர்’ எனும் பெயரில் இருந்தது. மற்றொன்று, தென்கரையில் இருந்த தி ரோஸ் நாடக கொட்டகை. 1587-இல் கட்டப்பட்ட ரோஸ், 1592-இல் விரிவுபடுத்தப்பட்டது. ஷேக்ஸ்பியரின் 2 நாடகங்களும். கிறிஸ்டோபர் மார்லோவின் அனைத்து நாடகங்களும் இங்கே நிகழ்த்தப்பட்டன. தி ரோஸின் உரிமையாளர், பிலிப் ஹென்ஸ்லோவ், 1592 முதல் 5 ஆண்டுகளாக எழுதிய குறிப்பேடு கிடைத்துள்ளது. அக்குறிப்பிட்ட காலத்தில், 878 முறை நாடகங்கள் நிகழ்த்தப்பட்டதாகவும், அதில் 119 வெவ்வேறு நாடகங்கள் அரங்கேறியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தி ரோஸ் நாடக கொட்டகையின் உட்புற தோற்றம்

1989-இல் புதிய நிர்வாக கட்டிடம் கட்ட குழி தோண்டியபோதுதான், ரோஸ் நாடக கொட்டகையின் அடித்தளம் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பிறகு, கட்டிடத்தின் வரைபடத்தை மாற்றினார்கள். சுற்றுலா பயணிகள் அடித்தளத்தை பார்க்கும் வகையில் கட்டிடம் எழுப்பினார்கள். இங்கிருந்து 100 அடி தூரத்தில்தான் இருக்கிறது. நேரம் இருந்தால் பாருங்கள்” என்றார்.

தி ரோஸ் நாடக கொட்டகையின் வெளிப்புற தோற்றம்

நடிகரின் வாழ்நாள் கனவு

எங்களுடன் அமர்ந்திருந்த ஒருவர், “ஷேக்ஸ்பியர் காலத்து கொட்டகை இடிக்கப்பட்டுவிட்டது என்றால், நாம் பார்த்துக்கொண்டிருக்கும் இக்கொட்டகை எப்போது கட்டப்பட்டது?” என்று வினவினார்.

புன்னகைத்த வழிகாட்டி, “அமெரிக்க நடிகரும் இயக்குநருமான சாமுவேல் (Samuel Wanamaker) ஆரம்பகால குளோப் நாடக கொட்டகையை மறுபடியும் கட்டி எழுப்ப பல ஆண்டுகளாக ஆசைப்பட்டார். 1970-இல் ஷேக்ஸ்பியர் குளோப் டிரஸ்ட் தொடங்கினார். வரலாற்று ஆய்வாளர்கள், அறிஞர்கள், கலைஞர்கள் இணைந்தார்கள். ஏற்கெனவே கொட்டகை இருந்த இடத்திலிருந்து 150 அடி தூரத்தில் இந்த இடத்தை வாங்கினார்கள். நிதி திரட்ட அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளில் முக்கியமானது, Globelink. உலகம் முழுவதும் உள்ள பள்ளி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களை ஒருங்கிணைக்கும் முயற்சி இது.

இதன்படி, ‘ஒவ்வொரு 200 பவுண்ட் நன்கொடைக்கும் 1 குப்பி (Capsule) தரப்படும். கல்வி நிறுவனங்களும், மாணவர்களும் தாங்கள் முக்கியமாக நினைக்கும் பொருட்களை குப்பியில் அடைத்து தர வேண்டும். அவைகள் காலப் பெட்டகத்தில் (Time Capsule) வைத்து புதைக்கப்படும். 50 ஆண்டுகளுக்குப் பிறகு மறுபடியும் வெளியில் எடுக்கப்படும்’ என்றார்கள்.

323 Globelink பள்ளி மற்றும் கல்லூரிகள் இணைந்து 30 ஆயிரம் பவுண்ட் சேகரித்தார்கள். அகழாய்வில் கிடைத்த ரோஸ் தியேட்டரின் ஆவனங்களின் உதவியுடன், தி லாட் சேம்பர்லின்’ஸ் மென் கால கொட்டகைபோல உருவாக்கினார்கள். 1997 ஜுன் 8 அன்று புதிய குளோப் தியேட்டர் திறக்கப்பட்டது. குளோப் தியேட்டரின் மையத்தில் காலப் பெட்டகம் புதைக்கப்பட்டது. 2047, ஜுன் 8-ஆம் தேதி மீண்டும் திறக்கப்படும்.

ஷேக்ஸ்பியர் குளோப் தியேட்டர் மேடை

நாடக மேடையைப் பார்த்தீர்களல்லவா! தூண்களில் உண்மையான மார்பிள்போல வண்ணம் பூசியிருக்கிறார்கள். நடிகர்களையும், ஒப்பனை ஆடைகளையும் மழையிலிருந்து பாதுகாக்கும் கூரையை விண்ணகம் அல்லது சொர்க்கம் என அழைக்கிறார்கள். சொர்க்கத்தை சூரியன், நிலா, நட்சத்திரங்கள் மற்றும் 12 இராசிகளின் குறியீடுகளுடன் நீலம் மற்றும் தங்க நிறங்களால் அழகுபடுத்தியுள்ளார்கள்.

அழிவை நினைவூட்டும் ஆக்கம்

காலப்பெட்டக மூடியில், பேரரசர் எட்டாம் ஹென்றியின், ‘நம் குழந்தைகளின் குழந்தைகள் இதைப் பார்ப்பார்கள், மூதாதையர்களை ஆசிர்வதிப்பார்கள்’ என்கிற வாக்கியம் பொறிக்கப்பட்டுள்ளது. நகை முரண் என்னவென்றால், வாக்கியத்தை வாசிக்கும் ஒவ்வொருவருக்கும், எட்டாம் ஹென்றி எனும் நாடக நிகழ்த்துதலின் போதுதான் 1613-இல் குளோப் கொட்டகை தீயில் சாம்பலானது என்பதை இது நினைவூட்டிக்கொண்டே இருக்கிறது” என்றார்.

ஷேக்ஸ்பியர் குளோப் தியேட்டரில் உள்ள நாடக பொருட்கள்

ஒப்பனைப் பொருட்கள்

சுற்றி பார்க்கும்போது, நாடகங்களில் பயன்படுத்தப்பட்ட பொருட்களைப் பார்த்தோம். ஆடைகள், மேசைகள், பொம்மைகள், கப்பல் மாதிரிகள், கிரீடம், வாள், விளக்கு தண்டுகள், மார்பு கவசம், தொப்பிகள், முகமூடிகள் என நிறைய உள்ளன.

ஷேக்ஸ்பியர் குளோப் தியேட்டரில் உள்ள நாடக பொருட்கள்

குளோப் நாடக கொட்டகையில் இப்போதும் நாடகங்கள் நிகழ்த்தப்படுகின்றன. ஒரு நாடகமாகவது பார்த்துவிட விரும்பினேன். அன்று மாலையில் நாடகம் ஏதும் இல்லை என்பதால், பார்க்கும் ஆசையை அங்கேயே விட்டுவிட்டு நதிக்கரையில் நடக்கத் தொடங்கினேன்.

(பாதை விரியும்)

x