கூடுதல் விலை வைத்து விற்க கூடாது; விலைப்பட்டியல் வைக்க வேண்டும்: டாஸ்மாக் அதிரடி உத்தரவு!


டாஸ்மாக்

மதுபானங்களை நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக விற்பனை செய்யக் கூடாது என்றும் விலை பட்டியலை வாடிக்கையாளர்களுக்கு தெரியும் வகையில் கடை முன்புறத்தில் வைக்க வேண்டுமென டாஸ்மாக் நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதலில், ‘’ அனைத்து மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் மதுக்கூடங்கள் நண்பகல் 12.00 மணிக்கு திறக்கப்பட்டு, இரவு 10.00 மணிக்கு மூடப்பட வேண்டும் இதில் எந்தவித விதிமீறல்கள் இருக்ககூடாது என தெளிவாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அனைத்து மதுபான சில்லறை விற்பனைக் கடைகளிலும், அனைத்து பதிவேடுகளையும் தினசரி அடிப்படையில் பராமரிக்க வேண்டும். மாவட்ட மேலாளர்கள் அனைவரும் சிரத்தையுடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் மதுபானங்களின் கூடுதல் விற்பனை விலைப் பட்டியல் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் தெளிவாக தெரியும்படி மதுபானக் கடையின் முன்புறத்தில் வைக்கப்பட வேண்டும். இதனை அனைத்து மாவட்ட மேலாளர்களும் உறுதி செய்ய வேண்டும்.

முதுநிலை மண்டல மேலாளர்கள், மண்டல அளவிலான பறக்கும் படை அலுவலர்கள் மற்றும் மாவட்ட மேலாளர்கள் தத்தம் மாவட்டங்களில் சட்டவிரோதமாக மதுக்கூடங்கள் செயல்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு சட்டவிரோதமாக மதுக்கூடங்கள் ஏதேனும் செயல்படும்பட்சத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அனைத்து மாவட்டங்களிலும் கள்ளச்சாராயம், போலி மதுபானங்கள் விற்கப்படுவதை கண்டறியவும் மதுபான கடைகளை தவிர மற்ற இடங்களில் மதுபானங்கள் விற்கப்படும் இடங்களை கண்டறிந்து, காவல்துறைக்குத் தெரிவித்து, காவல் துறை மூலம் உரிய நடவடிக்கை எடுத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாவட்ட மேலாளர்கள் தினம்தோறும் எந்தவொரு மாவட்டத்திலும் மதுபான வகைகளை நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட, கூடுதல் விலை வைத்து விற்பனை செய்யக்கூடாது. ஏதேனும் விதிமீறல்கள் இருந்தால், அதற்குரிய அபராதம் வசூலிக்கப்பட வேண்டும், அப்பணியாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது ‘’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

x