வயநாடு நிலச்சரிவில் சிக்கி வீடு இழந்த 100 பேருக்கு வீடு கட்டிக் கொள்வதற்காக ஆயிரம் ஏக்கர் நிலத்தை இலவசமாகக் கொடுக்க இருப்பதாக தொழிலதிபர் பாபி செம்மனூர் அறிவித்துள்ளது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 30-ம் தேதி அதிகாலை கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு நாட்டையே உலுக்கியது. இதையடுத்து அடுத்தடுத்து ஏற்பட்ட 2 நிலச்சரிவுகளில் சூரல்மலை, முண்டக்கை, மேப்பாடி ஆகிய கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த 221 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக கேரள அரசு அறிவித்துள்ளது. இவை தவிர 166 உடல் பாகங்களும் கிடைத்துள்ளது. மேலும் முண்டக்கை மற்றும் சூரல்மலா, அட்டமலா ஆகிய மூன்று பகுதிகளில் மொத்தம் 4,833 பேர் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், வயநாடு மலைப் பகுதிகளான சூரல்மலா, முண்டக்கை, பூஞ்சேரி உள்ளிட்ட இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் 360-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்றும், 200 பேருக்கும் மேற்பட்டோர் நிலைமை என்னவானது என்பது இதுவரை தெரியவில்லை என்றும் ஊடகங்கள் கூறிவருகின்றன. இந்த நிலையில் கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபர் பாபி செம்மனூர், வயநாடு நிலச்சரிவில் வீடு இழந்த 100 குடும்பங்களுக்கு வீடு கட்டிக் கொள்ள நிலத்தை இலவசமாகத் தர உள்ளதாக அறிவித்துள்ளார்.
ஜமீன் குடும்பத்தைச் சேர்ந்த பாபி செம்மனூர் தங்க வியாபாரம் செய்து வருகிறார். மேலும் வயநாட்டில் 1,000 ஏக்கர் மலைப்பகுதியில் தேயிலைத் தோட்டம் வைத்துள்ளார். இந்தியாவிலேயே பெரிய ரெஸ்ட்டாரண்ட், தீம் பார்க் ஆகியவற்றையும் நடத்தி வருகிறார். பல்வேறு சேவைகளைச் செய்து வரும் பாபி செம்மனூர், வயநாடு நிலச்சரிவில் சிக்கி வீடு இழந்த 100 பேருக்கு வீடு கட்டிக் கொள்வதற்காக இடத்தை இலவசமாகக் கொடுக்க இருப்பதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், " 100 குடும்பங்களுக்கு வீடு கட்டிக் கொள்வதற்காக நிலங்களைக் கொடுக்க முடிவு செய்துள்ளேன். இங்கே எனக்கு 1.000 ஏக்கர் நிலம் உள்ளது. அதை ஒட்டிதான் இந்த நிலங்களைக் கொடுக்க உள்ளேன். அந்த நிலத்தில் ஒரு சிறு பகுதிதான் இது. அதையே கொடுக்க தீர்மானித்திருக்கிறேன். நிலச்சரிவில் சிக்கிய மக்களின் அழுகுரல் தான் கேட்கிறது. அவர்களுக்கு தங்குவதற்கு வீடு இல்லை. எனவே, போச்சே ஃபேன்ஸ் என்ற எனது அறக்கட்டளை மூலம் அவர்களுக்கு வீடுகள் வழங்க உள்ளோம். அவர்கள் வீடுகளைக் கட்டிக் கொள்ளப் பணம் இல்லை. எனவே. கட்டுமானச் செலவுக்கும் உதவ உள்ளோம். இது பற்றி அமைச்சரிடம் விவாதித்துள்ளேன். அவர் சில யோசனைகளை வழங்கியுள்ளார். அத்துடன் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களின் பட்டியலையும் கொடுப்பதாக கூறியுள்ளனர்.
நாம் உதவி செய்வது முக்கியமல்ல, செய்யும் உதவி சரியான நபருக்குப் போய்ச் சேரவேண்டும். அதுதான் முக்கியம். இந்த 100 வீடுகளைக் கட்ட 10 முதல் 15 ஏக்கர் நிலம் தேவைப்படும் எனக் கணக்கிட்டுள்ளோம். ஒருவேளை அதைத்தாண்டிச் சென்றால் கூடுதல் நிலத்தையும் தர இருக்கிறோம்" என்று தொழிலதிபர் பாபி செம்மனூர் கூறியுள்ளார். அவரது அறிவிப்புக்கு வயநாடு மக்கள் உள்பட பலர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.