லுஃப்தான்சா, எமிரேட்ஸ் உள்ளிட்ட விமானநிறுவனங்கள் ரூ.10,000 கோடி வரி பாக்கி: ஜிஎஸ்டி நோட்டீஸ்!


பிரதிநித்துவப்படம்

புதுடெல்லி: பிரிட்டீஸ் ஏர்வேஸ், லுஃப்தான்சா, எமிரேட்ஸ் உள்ளிட்ட 10 வெளிநாட்டு விமான நிறுவனங்களுக்கு ரூ.10,000 வரி பாக்கி செலுத்தாதது குறித்து விளக்கம் கேட்டு ஜிஎஸ்டி நுண்ணறிவு இயக்குநரகம் (டிஜிஜிஐ) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கடந்த மூன்று நாட்களாக இந்த விமான நிறுனங்களின் இந்திய கிளைகள், தங்களின் தலைமை அலுவலகத்தில் இருந்து பெறும் சேவைகளுக்காக செலுத்தத வரி பாக்கிகள் தொடர்பாக நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. பெறுநர் உள்ளீட்டு கடன் பெறத் தகுதியுள்ள தொடர்புடைய நபரின் வெளிநாட்டு இறக்குமதி சேவைகளின் மதிப்பீடுகள் குறித்த ஜூன் 26-ம் தேதி அறிக்கை இந்த விமான நிறுவனங்களை உள்ளடக்கவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஜிஎஸ்டி நுண்ணறிவு இயக்குநகர அதிகாரிகள் கூறுகையில், "இந்த விமான நிறுவனங்கள் விலக்கு மற்றும் விலக்கு அளிக்கப்படாத சேவைகளை வழங்குகின்றன. அவைகள் அந்த அறிக்கையின் கீழ் இடம்பெறாது" என்று தெரிவித்தனர்.

முன்னதாக ஜிஎஸ்டி நுண்ணறிவு இயக்குநரகம் இந்த விமான நிறுவனங்களின் விலக்கு மற்றும் விலக்களிக்கப்படாத சேவைகளின் பிரிக்கப்பட்ட பட்டியலைக் கோரியிருந்தது. ஆனால் 10 விமான நிறுவனங்களில் நான்கு நிறுவனங்கள் மட்டுமே பட்டியலை அளித்திருந்தன. மற்ற நிறுவனங்கள் வழங்கவில்லை.

தற்போது வரி பாக்கிக்காக அனுப்பப்பட்டுள்ள நோட்டீஸ், ஜிஎஸ்டி வரி அறிமுகப்படுத்தப்பட்ட 2017ம் ஆண்டு முதல் மார்ச் 2024 ஆகியவைகளுக்கு இடைப்பட்ட காலத்தினை உள்ளடக்கியுள்ளது.

இந்த வெளிநாட்டு விமானநிறுவனங்கள், விமானங்களை பராமரிப்பது, பணியாளர்களை வழங்குவது, வாடகைக்கு விடுவது போன்ற சேவைகளை வழங்கி வருகின்றன. ஒரு சட்டப்பூர்வ நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்துக்கு இதுபோன்ற சேவைகள் வழங்கப்படும் போது அது ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு தகுதியானதே. ஆனால் அந்த விமான நிறுவனங்கள் வரி செலுத்தவில்லை என்று டிஜிஜிஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.

x