வங்கதேச விவகாரம்: அமைச்சர் ஜெய்சங்கர் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்


புதுடெல்லி: அண்டைநாடான வங்கதேசத்தில் கொந்தளிப்பான சூழல் நிலவிவரும் நிலையில், அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா அரசின் வீழ்ச்சி குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்திருந்தது. கூட்டத்துக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில், வங்கதேசத்தில் நிலவும் வன்முறை குறித்தும், இந்திய அரசு எடுத்த நடவடிக்கை குறித்தும் எம்.பி.களுக்கு அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கினார்.அவரைத் தவிர உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ ஆகியோரும் கலந்து கொண்டனர்.

ஷேக் ஹசீனா திங்கள்கிழமை தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, நாட்டைவிட்டு வெளியேறினார். அவர் ராஜினாமா செய்த சில மணிநேரங்களில் அந்நாட்டு ராணுவத்தளபதி, வாக்கர் - உஸ் - ஜமான், ராணுவம் ஒரு இடைக்கால அரசை அமைக்கும் என்று அறிவித்தார். மேலும் போராட்டத்தை நிறுத்துமாறு போராட்டக்காரர்களை வலியுறுத்தினார்.

உத்தரப் பிரதேசத்தின் காசியாபாத் விமானநிலையத்திற்கு செவ்வாய்க்கிழமை மாலையில் வந்திறங்கிய ஷேக் ஹசீனாவை பாதுக்காப்புத்துறை செயலாளர் அஜித் தோவால் வரவேற்றார்.

இதனிடையே, வங்கதேசத்தில் இதுவரை 300-க்கும் அதிகமானோர் உயிரிழந்த வன்முறை குறித்து பிரதமர் நரேந்திர மோடி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் பேசியுள்ளார். ஆனால் பிரதமர் மோடி, ஷேக் ஹசீனாவைச் சந்திப்பாரா என்பது குறித்து எதுவும் தெரியவில்லை.

வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தனது அரசுக்கு எதிராக அங்கு ஏற்பட்ட வன்முறையைக் கட்டுப்படுத்த முயன்றார். ஆனால் ஞாயிற்றுக்கிழமை அங்கு ஏற்பட்ட புதிய வன்முறையைத் தொடர்ந்து ஷேக் ஹசீனா தனது பதவி விலகினார்.

வங்கதேசத்தில் அரசு வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு தொடர்பாக கடந்த மாதம் தொடங்கிய போராட்டம் தீவிரமடைந்து, ஷேக் ஹசீனாவின் 15 ஆண்டு கால ஆட்சியின் மிகவும் மோசமான அமைதியின்மையாக மாறி அவரை ஆட்சியில் இருந்து இறக்கியுள்ளது.

x