சிறகை விரி உலகை அறி -97; காதல் மன்னன் அழைக்கிறான்!


கோளத்திற்குள் கோளம்

இருள் சூழ்ந்த மாலை வேளை. கடுங்குளிர். மனித நடமாட்டம் அதிகமில்லாத இடம். பேருந்து நிறுத்தத்திற்கு யாரிடம் வழி கேட்பது? நடக்க நடக்க உடலில் வெப்பம் உருவாகும்; அது தாக்குப் பிடிக்கும் என்கிற நம்பிக்கையில் நடக்கத் தொடங்கினேன்.

பனியன், உடல் சூட்டைத் தக்க வைக்கும் முழுநீள சட்டை, குளிராடை, அதன் மீது கம்பளி ஆடை, தலையையும் காதுகளையும் மூடும் குல்லா, கழுத்தைச் சுற்றி மறைக்கும் துணி, மற்றும் கையுறை அணிந்து குளிரில் நெளிந்து கைகள் இரண்டையும் தாடையுடன் சேர்த்து அணைத்தபடி நடந்தேன்.

உதடு துடித்தாலும், பற்கள் இடித்தாலும் நடக்க நடக்க ஒருவித உற்சாகம். நெஞ்சாங்கூட்டை முட்டி வெளியேறும் மூச்சுக் காற்றின் சத்தம் என் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியது. ஏதேதோ பாடல்களை முணுமுணுத்தபடி, பையின் சுமையை மறந்து, 3 கிலோ மீட்டருக்கும் அதிகமாக நடந்து, தங்கும் விடுதிக்குச் சென்றேன். களைப்பை நீரால் கழுவினேன். இரவு உணவுக்கு கடை தேடினேன். வங்கதேசத்தவர் நடத்திய கடையைக் கண்டேன். குறைந்த விலையில், நிறைய சாப்பிட வேண்டுமென்று பிரியாணி சாப்பிட்டேன். திரும்பி வரும்போது, வழியை மறந்தாலும், ஆங்காங்கு சுற்றி விடுதிக்குச் சென்றேன். நிம்மதியான உறக்கம்.

விடுதியின் முன்பதிவில் காலை உணவும் இருந்ததால் பிரட், ஜாம், முட்டை சாப்பிட்டேன். மாலையில் லண்டன் திரும்ப வேண்டும் என்பதால், காலையிலேயே விடுதி கணக்கை நேர் செய்தேன். சூரியன் இன்னும் முகங்காட்டவில்லை. விரல் சுண்டும் குளிர் குறையவேயில்லை. காலை 7 மணிக்கு வேறு சுற்றுலாத்தளங்கள் திறந்திருக்காது என்பதால், புனித வாலண்டைன் கோவிலுக்குச் சென்றேன்.

காதல் மன்னன் அழைக்கிறான்

கத்தோலிக்க அருள்தந்தையும் மருத்துவருமான வாலண்டைன், பேரரசர் இரண்டாம் கிளாடியுஸ் ஆட்சி காலத்தில் ரோம் நகரில் வாழ்ந்தார். கொடுங்கோலன் கிளாடியுசால் கி.பி. 269, 270 அல்லது 273-ம் ஆண்டுகளில் இவர் கொல்லப்பட்டிருக்கலாம். வாலண்டைனின் வாழ்வு மற்றும் இறப்பு குறித்து பல்வேறு கதைகள் உலாவுகின்றன.

கதை 1

அந்நாட்களில், ‘திருமணமான ஆண்கள் ஓராண்டு வீட்டில் இருக்கலாம், போர்க்களம் செல்லத் தேவையில்லை’ என்னும் வழக்கம் இருந்தது. போதுமான வீரர்கள் கிடைக்காததாலும், திருமணம் ஆகாத இளைஞர்களே வலுவுடன் இருப்பதாக நினைத்ததாலும் வீரர்கள் திருமணம் செய்வதை பேரரசர் தடை செய்தார். தடையை மீறி திருமணம் செய்த வாலண்டைனை கைது செய்தார். சிறையில் அடைத்தார். சிறையில் இருந்தாலும், அரசரின் மனம் கவர்ந்த வீரராக விளங்கினார் வாலண்டைன். ஒரு கட்டத்தில், வாலண்டைன் கிறிஸ்தவ மதத்திற்கு தன்னை மாற்ற நினைக்கிறாரோ? என்று பேரரசருக்கு சந்தேகம் வந்தது. வாலண்டினை கொன்றார்.

புனித வாலண்டைன்

கதை 2

வாலண்டைன் சிறையில் இருந்தபோது, அவரின் கல்வியறிவையும் மருத்துவ புலமையையும் பார்த்து சிறை கண்காணிப்பாளர் வியந்தார். பார்வையற்ற தன் மகள் ஜுலியாவுக்கு பார்வை தர வேண்டினார். மகளுக்கு மருத்துவம் செய்ததுடன், கிறிஸ்தவ மதம் குறித்தும் வாலண்டைன் கற்பித்தார். ஒருசில வாரங்களில், தந்தையும் மகளும் இயேசுவின் மீது நம்பிக்கை வைத்தார்கள். வாலண்டைன் பிப்ரவரி 14-ஆம் தேதி கொல்லப்பட்டார். ஏற்கெனவே அன்று காலையில், கடவுள் நம்பிக்கையில் நிலைத்திருக்குமாறு ஜுலியாவுக்கு ஒரு கடிதம் எழுதி கையெழுத்திட்டிருந்தார் வாலண்டைன். மாலையில் கடிதத்தை ஜுலியா திறந்தபோது அவளது கண்ணில் இருந்து குரோகஸ் மலர் விழுந்தது (Crocus). உடனே, பார்வை கிடைத்தது. அயர்லாந்தில் வசந்த காலத்தில் குரோகஸ் மலர் பூக்கும்.

இதன் பின்னணியில், பிப்ரவரி 14 அன்று காதலர்கள் ஒருவருக்கொருவர் வாலண்டைன் வாழ்த்து அட்டை அனுப்பும் வழக்கம் உருவானது. காலிக் (Gaelic) நாட்காட்டியின்படி, வசந்த காலம் பிப்ரவரி மாதம் தொடங்குவதால் அல்லது பிப்ரவரியில் பறவைகளின் இனப்பெருக்க காலம் தொடங்குவதால் காதலர் தினம் பிப்ரவரியில் கொண்டாடப்படுகிறது என்கிற புரிதலும் உண்டு.

கோவிலுக்குள் சென்றேன். வலது பக்க பீடத்தில், இளம் வயது வாலண்டைன் நிற்கிறார். கால்களில் செருப்பு இல்லை. கையில் குரோகஸ் மலர் வைத்திருக்கிறார். சுரூபத்துக்குக் கீழே உள்ள பெட்டியில், அவரின் எலும்புகள் உள்ளன. கோவில் உதவியாளரின் உதவியுடன், சில படங்கள் எடுத்தேன்.

டைட்டஸ் பிரான்ஸ்மா

பத்திரிகை சுதந்திரம்

வெளியில் வந்தபோது, டைட்டஸ் பிரான்ஸ்மா (Titus Brandsma) என்னும் துறவியின் சுரூபம் பார்த்தேன். பேராசிரியராகவும், பத்திரிகையாளராகவும் வாழ்ந்த டைட்டஸ், கத்தோலிக்க மத நம்பிக்கைக்காக மட்டுமல்லாமல், பத்திரிகை சுதந்திரத்துக்காகவும் துணிச்சலுடன் போராடியிருக்கிறார். 2-ஆம் உலகப் போரின்போது, டைட்டஸை கைது செய்து, ஜெர்மனியின் டச்சாவு வதை முகாமில் அடைத்தார்கள். புதிய மருத்துவ ஆய்வுகளை நடத்தினார்கள். 1942, ஜுலை 26 அன்று கொலை செய்தார்கள். எரியூட்டப்பட்ட டைட்டசின் சாம்பல், அதே முகாமில், ’யாருமறியாத வதைமுகாம் கைதிகளின் சாம்பல்’ கல்லறையில் புதைக்கப்பட்டுள்ளது.

பூங்காவைத் தானமாகத் தந்தவர்!

சூரியன் இன்னும் முகங்காட்டாத அப்பொழுதில், அப்படியே நடந்து செயிண்ட் ஸ்டீபன் பூங்காவுக்குச் சென்றேன் (St. Stephen’s Green Park). குளிரில் உதிர்ந்த இலைகளால் மரங்கள் வருத்தத்தில் நின்றன.

செயிண்ட் ஸ்டீபன் பூங்கா ஏரி

பூங்கா இருக்கும் இடத்தினருகில் 13-ம் நூற்றாண்டில் புனித ஸ்டீபன் ஆலயமும், அதன் அருகிலேயே, தொழுநோய் மருத்துவமனையும் இருந்துள்ளன. 1663-ல் நகரத்துக்கு வருமானம் தரும் திட்டங்கள் குறித்து சிந்தித்த டப்ளின் நகரசபை உறுப்பினர்கள், 27 ஏக்கரை பூங்காவுக்காக தேர்வு செய்தார்கள். பூங்காவைச் சுற்றி இருந்த இடங்களை 90 மனைகளாகப் பிரித்தார்கள். வாடகை வருமானத்தில், பூங்காவுக்கு சுற்றுச் சுவர் எழுப்பினார்கள். மனையைப் பயன்படுத்துகிறவர் சுற்றுச்சுவருக்கு அருகே, 6 சிக்கமோர் மரங்கள் நடவேண்டும் என்றார்கள். ‘பூங்கா பொதுமக்கள் அனைவருக்குமானது’ என்று சட்டம் இயற்றினார்கள். பூங்கா பூத்தது.

காலம் கடந்தது. பராமரிப்பு இல்லாமல் மரங்கள் பட்டுப்போயின, சுவர்கள் சிதிலமடைந்தன. 19-ஆம் நூற்றாண்டில், வசதிமிக்க உள்ளூர்வாசிகள் சிலர் சுற்றுச் சுவரை புதுப்பித்தனர். புதிதாக செடிகள் நட்டு பூங்காவை வசந்தமாக்கினர். ஆனால், நுழைவு வாயிலின் சாவி வைத்திருப்பவர்கள் மட்டுமே உள்ளே செல்ல முடியும் என்னும் நிலை உருவானது.

இந்நிலையில், தாராள நன்கொடைக்கு பெயர்பெற்ற ஆர்த்தர் கின்னஸ் 1877-ல் பூங்காவை விலைக்கு வாங்கினார். 3 ஏக்கரில் புதிய ஏரியும், பாறைகளைக் கொண்டுவந்து சிறிய அருவியும் உருவாக்கினார். நீரூற்று, பாலம், மலர் வனம் என ஏறக்குறைய 20 ஆயிரம் பவுன்ட் செலவழித்து 3 ஆண்டுகளாகப் புதுப்பித்தார். பூங்காவை பொதுமக்களுக்கு நன்கொடையாக வழங்கினார். திறப்புவிழா ஏதுமின்றி, 1880, ஜுலை 27 அன்று பயன்பாட்டுக்கு வந்தது பூங்கா.

பஞ்சம்

பச்சை மரமே பசுங்கிளியே!

பூங்காவின் பின் வாயில் வழியாக நுழைந்தேன். இரண்டாம் உலகப்போரின்போது அகதிகளாக வந்த ஜெர்மன் குழந்தைகளை அயர்லாந்து ஏற்றுக்கொண்டதற்கு நன்றியாக, ஜெர்மன் வழங்கிய சிற்பத்தைக கண்டேன். பஞ்சத்தை நினைவூட்டும்படி எட்வர்ட் டிலானி (Edward Delaney) செதுக்கிய சிற்பத்தையும் பார்த்தேன்.

ஏரி நீர் உறைந்திருந்தது. நீர் உறைந்த ஏரியை அப்போதுதான் முதன் முதலில் பார்த்தேன். பறந்து வந்த பறவைகள் கால் வைத்த அடுத்த நொடியில் சர்ரென்று வழுக்கிக்கொண்டு போவதை மெய்மறந்து ரசித்தேன். கண்ணாடிபோல் உறைந்திருந்த நீரில் தன் முகங்களைப் பார்த்து சில பறவைகள் கொத்தின. தன் அழகில் மயங்கிய பறவைகளைப் பார்க்கவே பிரமிப்பாக இருந்தது. ஆங்காங்கே உறைபனி விலகிய சிறிய இடத்திலிருந்த நீரை பறவைகள் அருந்துவதையும், அவை எழும்பி பறக்கத் தடுமாறி சறுக்குவதையும் பார்த்து மனம் லயித்தேன்.

உறைந்த ஏரி; தன் அழகில் மயங்குதோ!

இரண்டாம் போவர் (Boer War, 1899-1902ல்) போரில் பங்கேற்று உயிர்நீத்த வீரர்களின் நினைவாக எழுப்பப்பட்ட நுழைவாயில் வழியாக வெளியேறி, பேருந்தில் ஏறினேன். அயர்லாந்தின் மிகவும் புகழ்பெற்ற டிரினிட்டி கல்லூரிக்குச் செல்லும் வழியில் இறங்கி கல்லூரியின் வாசல் தேடினேன்.

2020-ல், ‘என் பெயர் நுஜுத் வயது 10 விவாகரத்து ஆகிவிட்டது’ புத்தகத்தை நான் மொழிபெயர்த்தபோது, நுஜுத் வாடகை வாகனத்தில் சென்று இறங்கி நீதிமன்றத்துக்குள் போகும் வரிகளை வாசிக்கையில், நான் தற்போது பேருந்திலிருந்து இறங்கி, டிரினிட்டி கல்லூரிக்குள் சென்ற காட்சியின் பிரதியாகவே மனத்திரையில் விரிந்தது.

டிரினிட்டி கல்லூரி வளாகத்தில்

டிரினிட்டி கல்லூரி

டிரினிட்டி கல்லூரி, 1592-ல் அரசி எலிசபெத்தால் தொடங்கப்பட்டது. அயர்லாந்தின் முதல் பல்கலைக்கழகமும் இதுதான். தொடக்கத்தில், புராடெஸ்டான்ட் மாணவர்களை மட்டுமே அனுமதித்தார்கள். 1793-ல் கத்தோலிக்க மாணவர்களுக்கு அனுமதி கிடைத்தது. 1904-ல் மாணவிகளை அனுமதித்தார்கள். கல்லூரியின் அழகையும், கட்டிடங்களின் வனப்பையும் பார்க்க ஒவ்வோர் ஆண்டும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் பல்கலைக்கழக வளாகத்துக்குள் வருகிறார்கள்.

நூலகம் திறப்பதற்கு நேரம் இருந்ததால், கல்லூரியைச் சுற்றினேன். டகாலோ மொழி கேட்டு திரும்பினேன். ஆறு மாத படிப்புக்காக பிலிப்பைன்சில் இருந்து டப்ளின் வந்துள்ள மாணவர்களைப் பார்த்தேன். விடுமுறை நாளென்பதால் இக்கல்லூரியைப் பார்க்க வந்திருந்தார்கள். அறிமுகமானோம். படமெடுத்துக்கொண்டோம். மழை தூறிக்கொண்டே இருந்தது. மகிழ்ச்சி மட்டுமே அனைவரின் முகங்களிலும் ஒளிர்ந்தது.

கோளத்திற்குள் கோளம்

அடுத்து, பெர்க்லே நூலகத்தின் முன்பு, வெண்கலத்தால் செய்யப்பட்ட மிகப்பெரிய உலக உருண்டை பார்த்தேன். பூமியின் இன்றைய நிலையைச் சொல்லும்விதமாக அமைந்துள்ளது. கோளத்திற்குள் கோளம் (Sphere within Sphere) என்பது அதன் பெயர். இத்தாலி நாட்டு சிற்பி, அர்னால்டோ பொமொடோரோ 1982-இல் செதுக்கி, கல்லூரிக்கு பரிசாக வழங்கியுள்ளார்.

நூலகத்தின் நுழைவாயிலில், ’நல்ல கல்வி வாழ்வை மாற்றும்; சிறந்த கல்வி உலகை மாற்றும்’ என்று எழுதியிருந்தது.

(பாதை விரியும்)

x