பெங்களூருவில் அடுத்தடுத்து பரபரப்பு: எஸ்-ஐயைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் தற்கொலை


கர்நாடகாவில் எஸ்.ஐ பரசுராம் தற்கொலை செய்த சம்பவம் ஏற்படுத்திய அதிர்ச்சி விலகாத நிலையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மீண்டும் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது.

கர்நாடகாவில் முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்குள்ள யாதகிரி சைபர் கிரைம் போலீஸ் நிலைய எஸ்.ஐ.பரசுராம்(34). இவர் கடந்த 2-ம் தேதி இரவு திடீரென உயிரிழந்தார். சைபர் க்ரைமில் இருந்து, டவுன் போலீஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்ய, யாதகிரி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ சன்னரெட்டி பாட்டீல் துன்னுார், அவரது மகன் பாம்பண்ண கவுடா ஆகியோர், எஸ்.ஐ பரசுராமிடம் 30 லட்சம் ரூபாய் கேட்டு நெருக்கடி கொடுத்ததுடன், சாதியைச் சொல்லி திட்டியதாகவும் பரசுராமின் மனைவி ஸ்வேதா புகார் அளித்தார். அததுடன் தனது கணவரை தற்கொலைக்குத் தூண்டியதாக புகாரில் தெரிவித்திருந்தார்.

இதன்படி எம்எல்ஏ சன்னரெட்டி பாட்டீல், பாம்பண்ண கவுடா மீது, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவானது. இந்த நிலையில், பெங்களூரு சிசிபி போலீஸ் இன்ஸ்பெக்டர் திம்மேகவுடா சரணடைந்தார். இந்த வழக்கை சிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ராமநகரா மாவட்டம், பிடாடி அருகே கும்பல்கோடு காவல் நிலையம் பகுதியில் உள்ள ஒரு மரத்தில் ஒருவர் இன்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தகவல் அறிந்த போலீஸார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தற்கொலை செய்தவரின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது தற்கொலை செய்தவர் பெங்களூரு சிசிபி போலீஸ் இன்ஸ்பெக்டர் திம்மேகவுடா என்பது தெரிய வந்தது. அவர் எதற்காக தற்கொலை செய்தார் என்பது குறித்து பிடாதி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காவல் துறையில் கடந்த 20 ஆண்டுகளாக பணியாற்றி வந்த திம்மேகவுடா பெங்களூரு, ராம்நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பணிபுரிந்தார். சில மாதங்களுக்கு முன்புதான் அவர் பெங்களூரு சிசிபிக்கு மாற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

x