பல ஆண்களுடன் திருமணம்; பணம், நகைகளுடன் எஸ்கேப்: 6-வது நபருடன் வாழ்ந்த கோத்தகிரி பெண் சிக்கினார்


மகாலட்சுமி

பல ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்து, அவர்களிடமிருந்து பணம், நகைகளை திருடிச் சென்ற பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரியைச் சேர்ந்த மகாலட்சுமி (25) என்பவர் மேல்மலையனூர் அருகே சிறுதலைப்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த பூண்டியான் மகன் மணிகண்டன் என்பவரிடம் ஃபேஸ்புக் மூலம் அறிமுகமாகி, கடந்த 18.11.2023-ம் தேதி அவரை திருமணம் செய்து கொண்டிருக்கிறார். இருவரும் இணைந்து 28 நாட்கள் வாழ்ந்துள்ளனர்.

பின்னர் தன் சொந்த ஊருக்கு சென்று சொத்து சம்பந்தமான பிரச்சினையை சரிசெய்து விட்டு வருவதாக கூறி கடந்த டிசம்பர் மாதம் 14-ம் தேதி ஊருக்குச் சென்றவர் திரும்ப வரவில்லை. அதனால் மணிகண்டன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டபோது விரைவில் வந்து விடுவதாக கூறியுள்ளார். ஆனாலும் அவர் வரவில்லை. இதனால் அவர் செல்லும்போது 8 பவுன் நகை மற்றும் 1 லட்சம் பணம் ஆகியவற்றை கொண்டு சென்றதாக மணிகண்டன் சில நாட்களுக்கு முன் வளத்தி போலீஸில் புகார் தெரிவித்தார்.

இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு, உதவி காவல் ஆய்வாளர் விஸ்வநாதன் தலைமையிலான தனிப்படை போலீஸார் விசாரணை மேற்கொண்டபோது, மகாலட்சுமி முதன் முதலில் வேலூரில் ஒருவரை இதே பாணியில் திருமணம் செய்துகொண்டு தலைமறைவானதும், அதன்பின் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் அடுத்தடுத்து திருமணம் செய்துகொண்டதும் தெரியவந்தது.

தற்போது ஐந்தாவதாக மணிகண்டனை திருமணம் செய்துகொண்டு நகை, பணத்துடன் தலைமறைவாகி உள்ளார். அதன்பின்னர் கோயமுத்தூர் விமான நிலையம் அருகே சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு ஓட்டி வரும் சேலம் மாவட்டம், ஆத்தூர் குமாரபாளையத்தை சேர்ந்த சின்ராஜ் என்பவரை 6-வதாக திருமணம் செய்து கொண்டு வசித்து வந்ததையும் கண்டறிந்த போலீஸார் அங்கு சென்று மகாலட்சுமியை கைது செய்துள்ளனர்.

x