நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள்கள், மதிப்பெண் பட்டியல் ஆகியவை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு மே 5-ம் தேதி நடைபெற்றது. 4,750 மையங்களில் நடைபெற்ற இந்த தேர்வை 23,33,297 மாணவர்கள் எழுதினர். இதன் முடிவுகள் ஜூன் 4-ம் தேதி வெளியான நிலையில், சில மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கியது, வினாத்தாள் கசிவு உட்பட பல்வேறு குளறுபடிகள் நடந்தது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதனையடுத்து இந்த தேர்வை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பலர் மனுக்கள் தாக்கல் செய்தனர். இதனைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவின்படி, கருணை மதிப்பெண்களை ரத்து செய்து நீட் தேர்வு முடிவுகளை ஜூலை 26-ம் தேதி தேசிய தேர்வு முகமை வெளியிட்டது. இதன் அடிப்படையில் நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத் தாள்கள், மதிப்பெண் பட்டியல் ஆகியவற்றை மத்திய அரசின் ‘உமாங்க்’ மற்றும் ‘டிஜிலாக்கர்’ இணைய தளங்களில் தேசிய தேர்வு முகமை பதிவேற்றம் செய்துள்ளது. அதன்படி, நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களின் மதிப்பெண் சான்றிதழ் மற்றும் ஓஎம்ஆர் விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கூடுதல் விவரங்களை இணையத்தில் அறிந்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.