திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி தில்லு தாஜ்புரியா கொலையால் திஹார் சிறை மீண்டும் சர்ச்சைக்கு உள்ளாகி விட்டது. இந்த விவகாரத்தில் தமிழக போலீஸார் ஏழு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு தமிழகத்திற்கு திரும்ப அனுப்பப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் தமிழக சிறப்புக் காவல் படையினர் பார்த்துவந்த இப்பணியை செய்ய, வேறு எந்த இந்தி பேசாத மாநிலங்களும் இதுவரை முன்வரவில்லை எனத் தெரிகிறது.
ஆசியாவின் மிகப் பெரியதான திஹார் சிறைச்சாலை, அதன் கைதிகளால் திஹார் ஆசிரமம் என்றும் அழைக்கப்படுகிறது. இதற்கு அதன் கைதிகளை பல்வேறு வகையில் பயிற்சிகளுடன் மீண்டும் பொதுவாழ்க்கைக்கு மாற்றுவதுதான் அதற்கு காரணம்.
இந்த சிறையின் பாதுகாப்புப் பணியில் மத்திய பாதுகாப்பு படைகளான சிஆர்பிஎப், ஐடிடிபிபி மற்றும் டெல்லி காவல்துறையின் ஆயுதப்படைகளும் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் அனைவரையும் மிஞ்சும் வகையில் தமிழக சிறப்பு காவல் படையினரும் அங்கு சிறப்பாகப் பணியாற்றுகின்றனர்.
சார்லஸ் சோப்ராஜ் எனும் சர்வதேச தொடர் கொலையாளி திஹார் சிறையில் இருந்து தப்பிய நிலையில். டெல்லி அரசு, கடந்த 1986-ல் தமிழக காவல் படையினரை திஹார் பாதுகாப்பு பணியில் அமர்த்தியது. கைதிகள் மற்றும் காவலர்களுக்கு இடையில் உருவாகும் நட்பை தடுக்க தமிழக காவல்துறையின் உதவி நாடப்பட்டது.
டெல்லி சிறையின் திஹார், ரோஹினி மற்றும் மண்டோலி ஆகிய மூன்று வளாகங்களில் பாதுகாப்பு பணியில் தமிழக சிறப்பு காவல் படையினர் உள்ளனர். தற்போது சிறையில் நடந்த தில்லு தாஜ்புரியா கொலையால் தமிழக காவல்துறையினரின் சிறப்புப்பணி கேள்விக் குறியதாகிவிட்டது. தில்லு கொலையை தடுக்காமல் வேடிக்கைப் பார்த்ததாக ஏழு காவலர்கள் தமிழகத்திற்கு திருப்பப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கைக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே இதுபோல் சில சம்பவங்களிலும் சிக்கிய பணியிடை நீக்கமான தமிழக காவல்படையினர் இதுபோன்ற சம்பவங்களில் தாங்கள் பலிகடாவாக்கப்படுவதாகப் புகார் கூறுகின்றனர். இது குறித்து ‘காமதேனு’ இணையத்திடம் அவர்கள் கூறியதாவது., ‘தில்லுவை படுகொலை செய்யப்பட்ட நிலையில் தான் எங்கள் முன் கொண்டு வந்தனர். அப்போது, சிறைக் காவலர்களுடன் டெல்லி ரிசர்வ் படையினரும் இருந்தனர். இதில் எவர் மீதும் எடுக்கப்படாத நடவடிக்கை எங்கள் மீது மட்டும் பாய்கின்றன. இதற்கு அவர்களுக்கான சங்கங்களால் கிடைக்கும் பாதுகாப்பு காரணமாக உள்ளது.
எங்களுக்குத்தான் கேட்கவே யாரும் இல்லாமல் தவிக்கிறோம். இதற்கு முன்பான சில சம்பவங்களிலும் நாங்கள் பணியிடை நீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளோம். இத்தனைக்கும் இதர படைகளை போன்ற வசதிகளும் இங்கு எங்களுக்கு கிடைப்பதில்லை'' எனப் புலம்பினர்.
இப்பணியில் இந்தி பேசாத மாநில காவல்துறை மட்டுமே பணியமர்த்தும் நிலை உள்ளது. இதற்காக புதுச்சேரி காவல்துறை உட்பட பல்வேறு மாநில காவல்துறையினரிடமும் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் இதுவரை வேறு எந்த மாநிலமும் பாதுகாப்பு பணியை ஏற்க தயாராக இல்லை என்று கூறப்படுகிறது.
எது எப்படியோ தில்லு தாஜ்புரியா கொலைக்கு பின் தமிழக காவல்படை தனக்கான முக்கியத்துவத்தை திஹாரில் நிலைநிறுத்த வேண்டியக் கட்டாயத்திற்கு உள்ளாகி விட்டது. எனவே, தமிழகக் காவல்படையினரின் திஹார் பணி மீது தமிழக அரசு அதிக கவனம் செலுத்துவது அவசியம் என்கிறார்கள்.