சிறகை விரி உலகை அறி-96; மரண தண்டனையின் வரலாறு!


கில்மெய்ங்கம் சிறை

மரணம், தற்கொலை, கொலை எனும் ஏதோ ஒரு காரணத்தால் துடிக்கும் உயிர் அடங்குகிறது. கடைசி மூச்சு வெளியேறும் மரண நொடியில் பேரமைதி நிலவுவதை அருகிலிருப்பவர்கள் உணரலாம். தாங்களே தங்கள் மூச்சை நிறுத்துகிறவர்களின் இறுதி நொடியை அறிவார் யாருமில்லை. ஆனால், வஞ்சனையோ தண்டனையோ, கொலையில் தனி நபரும் மகிழ்கிறார், அரசாங்கமும் மகிழ்கிறது.

கலையின் வரலாறு தேடும் ஆய்வாளர்களுக்கு மத்தியில் கொலையின் வரலாறு தேடுகிறது கில்மெய்ங்கம் சிறை அருங்காட்சியகம். கணினி திரையில், ‘மரண தண்டனையின் வரலாறு’ விரிகிறது.

கில்மெய்ங்கம் சிறை மாதிரி

மரண தண்டனையின் வகைகள்

'மரண தண்டனை வழங்கும் வழக்கம் ஏறக்குறைய எல்லா சமூகங்களிலும் இருந்ததை ஆவணங்கள் உறுதிப்படுத்துகின்றன. குற்றவாளியை தூக்கிலிடுதல், சக்கரத்தில் கட்டி உருட்டுதல், கொதிக்கும் நீரில் போடுதல், தோலை உரித்தல், சிறிது சிறிதாக உடல் பாகங்களை வெட்டுதல், வயிற்றைக் கிழித்தல், சிலுவையில் அறைதல், கழுமரத்தில் இறக்குதல், உடல் மீது பெருங்கனத்தை வைத்து அழுத்துதல், கல்லெறிதல், தீ வைத்தல், உடல் உறுப்புகளைப் பிடுங்குதல், அறுத்தல், தலையை வெட்டுதல், கனமான கல்லைக் கட்டி நீரில் அமிழ்த்துதல், படகுக்குள் படுக்க வைத்து கைகளையும் கால்களையும் வெளியில் தொங்க விட்டு இறுகக் கட்டி தேன் புகட்டி பூச்சிகளை மொய்க்கவிடுதல்' என, மரண தண்டனையின் வகைகளை அறிந்தபோது எனக்குள் அச்சமே மேலெழுந்தது.

ஹமுராபி (சட்ட அமைச்சர்களின் அரசர், கி.மு. 1792 – 1750)

ஹமுராபி இயற்றிய சட்டங்கள், ஏழைகளையும் செல்வந்தர்களையும் சம அளவில் வைத்து தீர்ப்பளித்தது. வலுவுள்ளவர்களிடமிருந்து எளியவர்களைக் காப்பாற்றியது. 'கட்டிடம் சரியாக கட்டப்படாததால் வீட்டு உரிமையாளரின் குழந்தை உயிரிழந்தால், கட்டிடம் கட்டியவரின் மகன் அல்லது மகள் கொல்லப்பட வேண்டும்' என்கிறது ஹமுராபி சட்டத் தொகுப்பு.

திருவிவிலியம் (பழைய ஏற்பாடு, கி.மு.850)

கொலை மற்றும் விபச்சாரம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட குற்றங்களுக்கு மரண தண்டனையை பரிந்துரைக்கிறது. மற்ற மத்திய கிழக்கு நாடுகளின் சட்டங்களைப் போலவே, ‘கண்ணுக்கு கண்’ என்கிறது விவிலியத்தின் பழைய ஏற்பாடு.

கைதிகளின் குறிப்புகள்

பிளேட்டோ (மெய்யியலாளர், கி.மு.428 – 328)

“உங்கள் செயல்களை விமர்சிப்பவர்களை கொலை செய்வதன் வழியாக உங்களால் அமைதியாக இருக்க முடியும் என நினைப்பீர்களேயானால், உங்கள் சிந்தனை இன்னும் பக்குவப்படவில்லை என்று பொருள். இதில் ஒரு பயனும் இல்லை. இது உங்களுக்கு எவ்வித பெருமையும் தராது. மற்றவர்களின் வாயை அடைப்பது அல்ல, மாறாக, உங்களால் முடிந்தவரை உங்களை நீங்களே நல்லவராக மாற்றிக்கொள்வதுதான் சிறந்த வழி”

அரிஸ்டாட்டில் (மெய்யியலாளர்,கி.மு. 384- 322)

“குற்றத்துக்குப் பதிலாக குற்றமிழைப்பது தங்களது உரிமை என மனிதர்கள் நினைக்கிறார்கள். அதைச் செய்ய முடியாதபோது, தங்கள் சுதந்திரத்தை இழந்துவிட்டதாக உணர்கிறார்கள்.”

திரகோனியன் சட்டம் (கி.மு. 7)

எந்தக் குற்றம் செய்தாலும், உதாரணமாக சிலைகளை வழிபட்டால் அல்லது பழங்களைத் திருடினால்கூட மரண தண்டனை வழங்கப்பட்டதாக, உரோமை வரலாற்று ஆசிரியர் புளூடார்க் (Plutarch) குறிப்பிடுகிறார். பின்நாட்களில், தங்களது பேச்சால் மற்றவர்களைத் தவறாக வழிநடத்தியவர்களுக்கும் மரண தண்டனை விதித்திருக்கிறார், சொலோன் (கி.மு.6).

பழங்கால ரோம் (கி.பி. 5)

கடன் கொடுக்கும் சிலரிடமிருந்து, பெருமளவு கடன் பெற்று கொடுக்க இயலாதவர்களைத் துண்டு துண்டாக வெட்டி, யார் யாரிடம் எவ்வளவு கடன் பெற்றார்களோ, அத்தொகைக்கு ஏற்ப உடலை பங்கிட்டு கொடுத்தார்கள். திருடர்களை சிலுவையில் அறைந்து கொன்றார்கள்.

பிரான்சிஸ் பேகன் (மெய்யியலாளர் மற்றும் அரசியல்வாதி, கி.பி. 1561 – 1626)

நவீன அறிவியல் சிந்தனையின் முன்னோடிகளில் ஒருவர் பிரான்சிஸ் பேகன். அரசர் முதலாம் ஜேம்ஸ் அரசவையில் அட்டர்னி ஜெனரலாக இருந்தார். மரண தண்டனை குறித்த மாற்று பார்வையை முன் வைத்தார். “ஒரு மனிதன் பழிவாங்கும்போது அவனும் குற்றவாளியாகிறான். கடந்து செல்லும்போது உயர்ந்தவனாகிறான்” என்றார்.

பிளைஸ் பாஸ்கல்

பிளைஸ் பாஸ்கல் (மெய்யியலாளர், கணிதவியலாளர் மற்றும் இயற்பியலாளர், கி.பி. 1623- 1662)

மேற்கத்திய அறிவுலக வரலாற்றில் மிகச் சிறந்த சிந்தனையாளர்களுள் ஒருவர் பிளைஸ் பாஸ்கல். மரண தண்டனைக்கு எதிராக உறுதியுடன் நின்றார். “அநியாயமான செயலால் இறப்பதைவிட, நீதியால் இறப்பது மிகவும் இழிவானது”; “குற்றங்களைத் தடுக்க கண்டிப்பாக மரண தண்டனை கொடுத்துதான் ஆக வேண்டுமா? ஒருவரை கெட்டவராக மாற்றுவதற்குப் பதிலாக இருவரையும் கெட்டவராகவே இது மாற்றும்” என்றார்.

ரூசோ (மெய்யியலாளர் மற்றும் அரசியல் கோட்பாட்டாளர், கி.பி. 1712-1778)

“சட்டங்களை மதிப்பதுதான், அனைத்து சட்டங்களிலும் முதன்மையானது. தங்களுக்குக் கிடைக்காத மரியாதையைப் பெறுவதற்காக சிற்றறிவு கொண்டவர்களால் உருவாக்கப்பட்ட பயனற்ற ஒன்றுதான் தண்டனை.”

வால்ட்டேர் (மெய்யியலாளர் மற்றும் நையாண்டி எழுத்தாளர், கி.பி. 1694-1778)

மறுமலர்ச்சி காலத்தைச் சேர்ந்த வால்ட்டேர், மரண தண்டனை மீதான மனிதாபிமான நிலைப்பாட்டை ஆதரித்தார். “குற்றமற்ற ஒருவரைக் கண்டனம் செய்வதைவிட, குற்றவாளியைக் காப்பாற்றுவது நல்லது”; “குற்றத்தை பயம் வெற்றி கொள்கிறது. அதுதான் அதன் தண்டனை” என்றார்.

செசர் பெக்காரியா

செசர் பெக்காரியா (குற்றவியல் நிபுணர் மற்றும் சட்ட நிபுணர் கி.பி. 1735-1794)

ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் தண்டனைச் சட்டங்களில் மாற்றம் ஏற்பட இவருடைய எழுத்து வழிகாட்டியாக அமைந்தது. குற்றங்களைத் தடுப்பதற்கான வழிமுறையாக, கல்வியை முன்னிலைப்படுத்திய தொடக்கக்கால அறிஞர்களுள் ஒருவர் செசர். “கொலையைத் தடுப்பதற்காக, கொலையைக் கண்டிக்கின்ற வெறுக்கின்ற ஒரு சமூகம், எல்லாரும் அறியும்படி தானே கொலை செய்வது அபத்தம் இல்லையா?” என்று கேட்டார்.

இம்மானுவேல் காண்ட் (மெய்யிலாளர், கி.பி. 1724- 1804)

நவீன காலத்தின் மிகவும் செல்வாக்கு மிக்க சிந்தனையாளர்களுள் ஒருவரான காண்ட், “நியாயமும் நீதியும் அழிந்தால், உலகில் மனித உயிருக்கு எந்த மதிப்பும் இருக்காது. எனவே, குற்றம் செய்தவர் யாராக இருந்தாலும் கண்டிப்பாக அவர் சாக வேண்டும்” எனும் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார்.

ஜெர்மி பெந்தம் (மெய்யியலாளர் மற்றும் சட்ட நிபுணர், கி.பி. 1748- 1832)

“எல்லாத் தண்டனையும் குற்றம்; எல்லாத் தண்டனையும் தன்னிலே தீயது” என்றார். இவருடைய சீர்திருத்த எழுத்துக்களால் ஈர்க்கப்பட்ட இங்கிலாந்து, ஒருசில குற்றங்களுக்குத் தவிர மற்ற அனைத்து குற்றங்களுக்கும் மரண தண்டனையை ரத்து செய்தது.

ஆயர் டெஸ்மண்ட் டுட்டு

டெஸ்மண்ட் டுட்டு (ஆயர், இறையியலாளர் மற்றும் சமூக செயற்பாட்டாளர், கி.பி. 1931- 2021)

தென்னாப்பிரிக்க ஆங்கிலிக்கத் திருச்சபையின் ஆயர் இவர். “கொலை செய்த ஒருவனிடம், ‘உங்கள் மீது எங்களுக்கு அக்கறையுள்ளது என்பதை உங்களுக்குக் காட்ட விரும்புகிறோம். எனவே உங்களையும் நாங்கள் கொல்லப் போகிறோம்’ என சொல்வது ஆபாசமானது” என்றார்.

ஆதரவும் எதிர்ப்பும்

உலகில் பாதிக்கும் மேற்பட்ட நாடுகள் மரண தண்டனை வழங்குவதை முற்றிலும் தடை செய்திருக்கின்றன; சட்டப்படி தடை செய்யாவிட்டாலும், பல ஆண்டுகளாக மரண தண்டனை நிறைவேற்றாத நாடுகளும் இருக்கின்றன.

சிறைச்சாலை

மரண தண்டனையை ஆதரிப்பவர்கள்;

· “மனிதரின் உயிருக்காக அவரவர் சகோதரரிடம் உயிரை நான் ஈடாகக் கேட்பேன்” (தொடக்கநூல் 9:5) மற்றும் “மனிதரைச் சாகடிப்பவர் எவரும் கொல்லப்பட வேண்டும்” (விடுதலைப்பயணம் 21:12) எனும் திருவிவிலியப் பகுதிகளை அடிப்படை ஆதாரமாகக் கொண்டுள்ளார்கள்.

· "ஒருவரின் உயிரை எடுப்பதைவிட வேறு பெரிய தண்டனை எதுவும் கொடுக்க இயலாது. எனவே இதுவே சிறந்த தண்டனை” என வாதிடுகிறார்கள்.

கைதிகளின் கடின உழைப்பைச் சொல்லும் சிற்பம்

மரண தண்டனையை எதிர்ப்பவர்கள்;

· “பாலினம், இனம் அல்லது வர்க்கம் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் நியாயமற்ற முறையில் மரண தண்டனைகள் நிறைவேற்றப்படுகின்றன.

· மரண தண்டணை நிறைவேற்றப்பட்டுவிட்டால், உயிரைத் திரும்ப பெற இயலாது. குற்றமற்றவருக்கு மரண தண்டனை நிறைவேற்றும் அபாயம், எப்போதுமே ஆபத்தானது.

· வெள்ளை இனத்தவர்களைவிட மற்ற இனத்தவர்களுக்கே அதிக அளவு மரண தண்டனை விதிக்கப்படுகிறது.

· செல்வந்தர்களைவிட ஏழைகள்தான் அதிகளவில் மரண தண்டனைக்கு உள்ளாகிறார்கள்.

· பெண்கள் அரிதாகவே மரண தண்டனைக்கு உள்ளாகிறார்கள்” என்கிறார்கள்.

· மேலும், “ஒருவர் கொலை செய்யும்போது, அச்செயலை குற்றம் என்று சொல்லி தார்மீக ரீதியாக வெறுக்கும் ஒரு சமூகம் மற்றோர் உயிரை எடுப்பதற்கு எப்படி சம்மதிக்கிறது?

· குற்றத்தைக் குறைப்பதில், அதிக நாட்கள் சிறையில் வைத்திருப்பதைவிட, மரண தண்டனைக்கு பெரும் பங்கு இருப்பதற்கான எவ்வித ஆதாரமும் இல்லையே” என வாதிடுகிறார்கள்.

சிறையினுள் கைதி வரைந்த ஓவியம், கதவு துவாரத்தில் தெரிகிறது

நிறைவேற்றப்பட்ட தண்டனை

1796-இல் கில்மெய்ங்கம் சிறை தொடங்கப்பட்டது முதல், 1868 வரை பலரும் பார்க்கும்படி மரண தண்டனையை நிறைவேற்றினார்கள். இங்குள்ள ஆவணங்களின்படி, இச்சிறையில் 140 கைதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. பொது இடத்தில் தூக்கிலிடும் முறை 1868-இல் தடைசெய்யப்பட்ட பிறகும் 11 பேர் தூக்கிலிடப்பட்டுள்ளார்கள்.

பெரும்பாலான பெண்களை, சிறை நுழைவாயிலின் உள் பக்கம் தூக்கிலிட்டார்கள். ஆனால், தாங்கள் தங்கியிருந்த வீட்டு உரிமையாளரைக் கொலை செய்த குற்றத்துக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட, பிரிஜித் பட்டர்லி (19), மற்றும் பிரிஜித் எனிஸ் (21) இருவரை மட்டும் 1821-இல், 3 ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் முன்னிலையில் தூக்கிலிட்டார்கள்.

தூக்கிலிடப்படுவதற்கு முந்தைய நாட்களில், இருவரும் எழுப்பிய அவலக்குரல் பலரையும் அச்சத்துக்கு உள்ளாக்கியதால், சிறை பொறுப்பாளர், ஜார்ஜ் டுன், சிஸ்டர்ஸ் ஆஃப் சேரிட்டி சபை அருள்சகோதரிகளைத் தினமும் வரவழைத்து ஆறுதல் சொல்ல வைத்திருக்கிறார்.

தூக்குக் கயிறு இறுகும் நொடிவரை ஆறுதல் தொடர்ந்திருக்குமா! தெரியலையே!

(பாதை விரியும்)

x