விஏஓ கொலை; மணல் மாஃபியாக்களுக்கு துணை போனதா காவல்துறை?


லூர்து பிரான்சிஸ்

தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலராக இருந்த லூர்து பிரான்சிஸை மணல் கடத்தல் கும்பல் அவரது அலுவலகத்திலேயே வைத்து துள்ளத், துடிக்க வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கி எடுத்திருக்கிறது.

கொல்லப்பட்ட விஏஓ லூர்து பிரான்சிஸ் குடும்பத்திற்கு முதல்வர் ஒரு கோடி நிவாரணமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். ஆனாலும் இந்தக் கொலையின் பின்னணியில் அரசுத்துறைகளின் மெத்தனமே பிரதானமாக இருப்பதாக பொருமல்கள் ஓங்கி ஒலிக்கின்றன.

மணல் கடத்தல் மாஃபியாக்கள் உயிர் குடித்த லூர்து, தனக்கு இருக்கும் ஆபத்தை முன்னரே யூகித்திருக்கிறார். அதனால் தான் தனக்கு உரிய பாதுகாப்பும், பணியிட மாறுதலும் கேட்டு காவல் துறையிடமும், மாவட்ட நிர்வாகத்திடமும் மனுமேல் மனுவாக கொடுத்திருக்கிறார். அதற்கான பரிகாரம் ஏதும் கிடைக்காத நிலையில் தான் படுகொலையாகி இருக்கிறார் லூர்து. அந்தவகையில் இந்தக் கொலைக்கு காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியமே முதல்காரணம் என பகிரங்கமாகவே குற்றம்சாட்டுகிறார்கள் வருவாய்த்துறை ஊழியர்கள். இதுகுறித்து பிரேமலதா என்ற விஏஓ பேசும் ஆடியோவும் இப்போது வைரல் ஆகிவருகிறது.

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி நதி கரையோரப் பகுதிகளில் மணல் கடத்தலை தடுத்த, தடுக்க முயற்சித்த பலரும் கொல்லப்படுவது தொடர்கதையாகி வருகிறது. நெல்லை மாவட்டம், மிட்டாதார்குளம் பகுதியில் குமார் என்னும் 22 வயது இளைஞர் கொலையில் தொடங்கி, நீண்ட பட்டியலைப் படிக்கின்றனர் சூழல் ஆர்வலர்கள்.

லூர்து பிரான்சிஸ் மிரட்டப்படுவதும், குறிவைக்கப்படுவதும் இது முதல்முறை அல்ல என்கிறார்கள். அவர் இதுதொடர்பாக கொடுத்த புகாரும் கிடப்பில் கிடந்ததன் மர்மம் தெரியவில்லை. தூத்துக்குடியில் லூர்து பிரான்சிஸின் பிரேதப் பரிசோதனைக் கூடத்திலும் ஊடகவியலாளர்கள் அவரது குடும்பத்தினரை சந்தித்துவிடாத வண்ணம் தடுக்கும் வேலையை செவ்வனே செய்தனர் சில காக்கிகள்!

வருவாய்த்துறையினர் போராட்டம்

லூர்து பிரான்சிஸின் உறவினர்கள் சிலரிடம் பேசினோம். ”முதலில் ஆதிச்சநல்லூரில் விஏஓ-வாக இருந்தார் லூர்து. அப்போது, ஆதிச்சநல்லூரில் கிடைத்த அரிய பொருள்களைக் கொண்டு அங்கு தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதற்காக, விஏஓ-வான லூர்து பிரான்சிஸ் 4 இடங்களைத் தேர்வு செய்து கொடுத்தார். அதில் ஒரு இடம் அரசு புறம்போக்கு. அந்த இடத்தை ஒரு தந்தையும், மகனும் ஆக்கிரமிப்பு செய்து இருந்தனர்.

கடைசியில் வேறு இடத்தில் தான் அருங்காட்சியகம் அமைக்க முடிவெடுக்கப்பட்டது என்றாலும் தங்கள் வசம் இருந்த நிலம் பறிபோய்விட்டதே என்ற அச்சத்தில் அப்போதே ஆக்கிரமிப்பாளர்கள் அரிவாளால் லூர்து பிரான்சிஸை வெட்டினர். நேர்மையாகப் பணி செய்ததால் லூர்து பணிக்குச் செல்லும் இடங்களில் எல்லாம் குறிவைக்கப்படுவது தொடர்ந்து நிகழ்ந்த வண்ணமே இருந்தது.

லூர்து பணிசெய்த கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலகத்தின் கீழ் வரும், முறப்பநாடு, கலியாவூர், அகரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் தாமிரபரணி ஆற்றுப்படுகை உள்ளது. அங்கெல்லாம் மணல் திருட்டு அதிகமாக நடப்பதாகவும், இதன் பின்னணியில் ராமசுப்பிரமணியன் என்ற ராமசுப்பு இருப்பதாகவும் விஏஓ என்ற முறையில் எழுத்துபூர்வமாக புகார் கொடுத்திருந்தார் லூர்து. அந்த ராமசுப்பு மீது கொலை, கொலை முயற்சி, கொலை மிரட்டல் உள்பட 12 வழக்குகள் ஏற்கெனவே நிலுவையில் உள்ளன. அப்படி இருந்தும் அவர் மீது உரிய நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை. அதுவும் இந்தப் படுகொலைக்குக் காரணமாகிவிட்டது” என்றனர் உறவினர்கள்.

கள ஆய்வில் தாமிரபரணி பாதுகாப்பு இயக்கத்தினர்

தாமிரபரணி பாதுகாப்பு இயக்கம் என்ற அமைப்பினர் இந்தக் கொலை தொடர்பாக கள ஆய்வு செய்து தூத்துக்குடி ஆட்சியரிடம் புகார் மனு கொடுத்துள்ளனர். அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் அய்கோவிடம் பேசினோம்.

“நாங்கள் செய்த கள ஆய்வில் முறப்பநாடு போலீஸாருக்கு மணல் கடத்தல் கும்பலோடு மிக நெருங்கிய தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவர்களும், உளவுப் பிரிவு போலீஸாரும் மணல் கடத்தல் கும்பலிடம் தொடர்ந்து லஞ்சம் பெற்றுள்ளனர். அவர்கள் ஆசியுடனேயே மணல் கடத்தல் ஜரூராக நடந்து வந்துள்ளது. ராமசுப்புவால் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக விஏஓ-வான லூர்து கொடுத்த புகாரின் பேரில் ஏப்ரல் 13-ம் தேதியே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அவர் கைது செய்யப்படவில்லை. இன்னும் சொல்லப்போனால் எங்கள் விசாரணையில் போலீஸார் அவரைக் கைது செய்யாமல் இருக்கவும் கையூட்டுப் பெற்றதுடன் லூர்து கொடுத்த புகார் பற்றியும் எதிரியிடமே சொல்லியுள்ளனர். இதுதான் விரோதமாக மாறியுள்ளது. புகார் கொடுத்ததால் தான் இந்தக் கொலை. அதுவும் காவல்துறை மெத்தனமாகக் கையாண்டதன் பலன் இது.

இந்தக் கொலையில் முழுக்க முழுக்க போலீஸாருக்கும் தொடர்பு இருக்கிறது. முறப்பநாடு காவலர்களின் தனிப்பட்ட செல்போன் எண்ணில் இருந்து கொலையாளி ராமசுப்புவுக்கு எத்தனை அழைப்புகள் எந்தெந்த நேரத்தில் சென்றுள்ளது எனவும் ஆய்வு செய்ய வேண்டியது அவசியம். இதையெல்லாம் தான் ஆட்சியருக்கும் புகாராகக் கொடுத்துள்ளோம்” என்றார் அவர்.

இந்தக் கொலையில் தொடர்புடைய ராமசுப்பிரமணியன், மாரிமுத்து ஆகிய இரண்டு நபர்களை தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர். லூர்து பிரான்சிஸ் கொலையைக் கண்டித்து தமிழகம் முழுவதும் வருவாய்த்துறைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தி இருக்கிறார்கள்.

கைதான ராமசுப்பிரமணியன்

முறப்பநாடு காவல்துறையின் மெத்தனமே லூர்து பிரான்சிஸின் கொலைக்குக் காரணம் எனச் சொல்லப்படும் குற்றச்சாட்டு குறித்து நெல்லை சரக டிஜஜி-யான பிரவேஸ்குமாரிடம் பேசினோம்.

“ஏப்ரல் 13-ம் தேதியே லூர்து பிரான்சிஸ் கொடுத்த புகாரின் பேரில் முறப்பநாடு காவல்நிலையத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்துவிட்டனர். போலீஸார் தன்னைக் கைதுசெய்துவிடுவார்கள் என்ற அச்சத்தில் ராமசுப்பிரமணியனும், மாரிமுத்துவும் கேரளத்தில் தலைமறைவாக பதுங்கி இருந்தனர். இந்நிலையில் தான் அங்கிருந்து இங்கு வந்து இந்தக் கொலையைச் செய்திருக்கிறார்கள். உடனடியாக நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு, குற்றவாளிகள் இருவரையும் கைது செய்துவிட்டோம்” என்றார்.

முறப்பநாடு காவல் நிலையத்திற்கும், லூர்து பிரான்சிஸ் கொல்லப்பட்ட கிராம நிர்வாக அலுவலகத்திற்கும் இடையே 150 மீட்டர் இடைவெளிதான். போலீஸுக்குச் செல்லப்பிள்ளையாக ராமசுப்பிரமணியன் இருந்ததால் தான், இவ்வளவு நெருக்கத்தில் காவல்நிலையம் இருந்தும் கொலை தாண்டவம் ஆடியுள்ளார் என்கின்றார்கள் உள்நடப்பு அறிந்தவர்கள்.

அதேசமயம், காவல்துறையில் உயர் பொறுப்பில் இருக்கும் சிலரின் அழுத்தத்தின் காரணமாகவும் குற்றவாளிகள் மீது கரிசனம் காட்டும் சூழலில் முறப்பநாடு காக்கிகள் இருந்ததாகவும், மேலிட அழுத்தத்தால் அவர்கள் தன்னிச்சையாக செயல்படமுடியாமல் தவித்ததாகவும் இன்னொரு தரப்பில் சொல்கி்றார்கள்.

“கவுன்சிலிங், காலிப்பணியிடங்கள், பணி மூப்பு இந்த மூன்றின் அடிப்படையில் தான் கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிட மாறுதல் கோரமுடியும். இந்த மூன்று நிலைகளிலும் லூர்து பிரான்சிஸ்ஸுக்கு முன்பு சிலர் இருந்ததால் அடுத்த சுற்று வரும்போது அவருக்கு பணியிட மாறுதல் கிடைக்கும் சூழல் இருந்தது” என விளக்கம் கொடுத்திருக்கிறார் தூத்துக்குடி ஆட்சியர் செந்தில்ராஜ்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்

அச்சுறுத்தல் புகாரில் அலட்சியம் காட்டாமல் காவல் துறையினர் முன்கூட்டியே உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் லூர்து பிரான்சிஸ் காப்பாற்றப்படிருப்பார். லூர்து ஒரு உதாரணம் தான். இதேபோல் தாமிரபரணி படுகையில் திருட்டுத்தனமாக மணல் அள்ளும் மாஃபியாக்கள் இன்னும் பல இடங்களில் பதுங்கி இருக்கிறார்கள். அவர்களுக்கு மத்தியில் தான் நேர்மையான அதிகாரிகள் சிலர் தங்களது பணியைச் செய்துகொண்டிருக் கிறார்கள். லூர்த்து பிரான்சிஸ் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் அதிர்ச்சி அலைகள் அடங்குவதற்குள்ளாகவே சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகாவில் விஏஓ வினோத்குமாரை மணல் கடத்தல் புள்ளியான முத்துராஜ் என்பவர் வழிமறித்து அறிவாளால் வெட்டப் பாய்ந்திருப்பது இன்னும் அதிர்ச்சியளிக்கிறது.

இதுகுறித்தெல்லாம் உயர்மட்டக் குழு அமைத்து உரிய விசாரணை நடத்தி மணல் மாஃபியாக்களின் ஆக்டபஸ் கரங்கள் அடியோடு முறிக்கப்பட வேண்டும். அதுபோல, கனிம வள சுரண்டலுக்குத் துணை போகும் காவல் துறையினர் உள்ளிட்ட அரசுத் துறை சார்ந்தவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இவற்றைச் செய்தால் மட்டுமே மணல் மாஃபியாக்களின் அச்சுறுத்தல்களில் இருந்து லூர்து பிரான்சிஸ் மாதிரியான நேர்மையான அரசு ஊழியர்களைக் காப்பாற்ற முடியும்!

x