பிரதமர் மோடி அபாரம் - உலகின் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடம்!


டெல்லி: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் புதிதாக தேர்வான இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ஆகியோரை பின்னுக்குத் தள்ளிவிட்டு, பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் உலகின் பிரபலமான தலைவராக தேர்வாகியுள்ளார்.

மார்னிங் கன்சல்ட் என்ற நிறுவனம் உலகளாவிய பிரபல தலைவர்கள் யார் என்ற கருத்துக் கணிப்பை கடந்த ஜூலை 8-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை ஒரு வார காலம் நடத்தியது. அதன்படி, இந்திய பிரதமர் நரேந்திர மோடி 69 சதவீதம் பேரின் ஒப்புதலுடன் முதலிடத்தைப் பிடித்தார். மெக்சிகோ ஜனாதிபதி ஆண்ட்ரெஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடோர் 63 சதவீதம் பேரின் ஒப்புதலுடன் இரண்டாவது இடம் பிடித்தார்.

இதற்கு முந்தைய சில கருத்துக் கணிப்புகளிலும், பிரதமர் மோடி உலக தலைவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில், தற்போது அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு 39 சதவீதமும், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் 29 சதவீதமும், இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மருக்கு 45 சதவீதமும், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுக்கு வெறும் 20 சதவீதம் மட்டுமே ஆதரவு கிடைத்துள்ளது. ஆனால் பிரதமர் மோடி 69 சதவீதம் ஆதரவை பெற்றுள்ளது கவனம் பெற்றுள்ளது.

ஜூலை 2024 நிலவரப்படி ஆதரவு சதவீதத்தின் அடிப்படையில், மிகவும் பிரபலமான 10 உலகத் தலைவர்கள் பட்டியல்:

1) இந்திய பிரதமர் நரேந்திர மோடி (69 சதவீதம்)
2) மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரஸ் மானுவல் லோபஸ் ஒப்ரடோர் (63 சதவீதம்)
3) அர்ஜென்டினா அதிபர் ஜேவியர் மிலே (60 சதவீதம்)
4) சுவிட்சர்லாந்து ஃபெடரல் கவுன்சிலர் வயோலா அம்ஹெர்ட் (52 சதவீதம்)
5) அயர்லாந்தின் சைமன் ஹாரிஸ் (47 சதவீதம்)
6) இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் (45 சதவீதம்)
7) போலந்தின் டொனால்ட் டஸ்க் (45 சதவீதம்)
8) ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோனி அல்பனீஸ் (42 சதவீதம்)
9) ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் (40 சதவீதம்)
10) இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி (40 சதவீதம்)

இப்பட்டியலில் இடம்பெற்றுள்ள டாப் 25 நாடுகளில், செக் குடியரசு பிரதமர் பெட்ர் ஃபியாலா, தென் கொரிய அதிபர் யூன் சுக்-யோல் மற்றும் ஜப்பானின் ஃபுமியோ கிஷிடா ஆகியோர் கடைசி மூன்று இடங்களில் உள்ளனர்

x