வயநாடு நிலச்சரிவில் சிக்கியோருக்கு 100 வீடுகள் கட்டித் தரப்படும்: கர்நாடக அரசு உறுதி


பெங்களூரு: வயநாடு நிலச்சரிவில் சிக்கி வீடுகளை இழந்த மக்களுக்கு 100 வீடுகள் கட்டித் தரப்படும் என கர்நாடக அரசு உறுதி அளித்துள்ளது. நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுடன் துணை நிற்பதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 350-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 200-க்கும் மேற்பட்டோரை காணவில்லை. ஐந்தாவது நாளாக இன்று மீட்புப் பணிகள் தொடர்ந்து வருகிறது.

கேராவின் வயநாடு மாவட்டத்தில் தொடா் கனமழையால் கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூலை 30) அதிகாலை இரண்டு பெரும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. முண்டக்கை, சூரல்மலை உள்ளிட்ட பல மலைக் கிராமங்களில் வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த மக்கள் உயிரோடு மண்ணில் புதைந்து மண்ணோடு மண்ணாக மாய்ந்தனர். இந்த நிலையில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டுக்கு கர்நாடக அரசு துணை நிற்கும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், ‘வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் பலர் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கின்றனர். இந்த நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு எங்களது ஆதரவை அளிப்போம். வயநாடு நிலச்சரிவு பேரிடரில் பாதிக்கப்பட்டோரின் துயர் துடைக்கும் விதமாக கர்நாடக அரசு சார்பில் நூறு வீடுகள் கட்டித் தட்டித்தரப்படும். ஒன்றாக இணைந்து நம்பிக்கையை கட்டியெழுப்பி மீட்டெடுப்போம்' என்று அவர் பதிவிட்டுள்ளார்.

x