புதுடெல்லி: ஒரு காலத்தில் இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு உலகின் கவலையாக இருந்தது. இன்று இந்தியா உலகளாவிய உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்புக்கான தீர்வுகளை கண்டுபிடித்து வருகிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
டெல்லியில் இன்று வேளாண் பொருளாதார நிபுணர்களின் 32-வது சர்வதேச மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் 75 நாடுகளைச் சேர்ந்த 1,000 பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், ' உணவு மற்றும் விவசாயம் பற்றிய எங்கள் பாரம்பரியங்களும் அனுபவங்களும் எங்கள் நாட்டைப் போலவே பழமையானவை. இந்தியாவின் விவசாய பாரம்பரியத்தில், அறிவியலுக்கும் தர்க்கத்திற்கும் முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. மருத்துவ குணங்கள் கொண்ட உணவை உட்கொள்ளும் ஆயுர்வேத விஞ்ஞானம் எங்களிடம் உள்ளது.
விவசாயத்தைப் பொருத்தவரை இந்தியாவில் இன்றும் நாங்கள் ஆறு பருவங்களை மனதில் வைத்துதான் திட்டமிடுகிறோம். எங்களிடம் 15 விவசாய காலநிலை மண்டலங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் தனித்த சிறப்புகளைக் கொண்டுள்ளது. இங்கிருந்து சுமார் 100 கிலோமீட்டர் பயணம் செய்தால் அங்கு விவசாயம் வேறுமாதிரி நடக்கும். இந்த பன்முகத்தன்மை இந்தியாவை உலகின் உணவுப் பாதுகாப்புக்கான நம்பிக்கைக் கீற்றை வழங்குகிறது.
இன்று இந்தியா உணவு உற்பத்தியில் உபரி நாடாக திகழ்கிறது. உலகின் மிகப் பெரிய பால், தானியங்கள், பருப்பு உற்பத்தியாளர்களாக நாங்கள் இருக்கிறோம். ஒரு காலத்தில் இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு உலகின் கவலையாக இருந்தது. இன்று இந்தியா உலகளாவிய உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்புக்கான தீர்வுகளை கண்டுபிடித்து வருகிறது.
தண்ணீர் பற்றாக்குறை மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவை ஊட்டச்சத்துக்கு ஒரு பெரிய சவாலாக உள்ளது. ஆனால் இதற்கு இந்தியாவிடம் ஒரு தீர்வு உள்ளது. சிறுதானியங்களை அதிக அளவில் உற்பத்தி செய்யும் நாடாக இன்று இந்தியா உள்ளது' எனத் தெரிவித்தார்.