வயநாட்டில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் காங்கிரஸ் சார்பில் கட்டித்தரப்படும்: ராகுல் காந்தி அறிவிப்பு


வயநாடு: நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டில் காங்கிரஸ் சார்பில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டித்தரப்படும் என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

கேரளாவின் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 350 வீடுகள் சேதமடைந்துள்ளன. இங்கு மீட்புபணியில் பாதுகாப்பு படைகளை சேர்ந்த 1,600 பேர் ஈடுபட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளை மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் நேற்று முன்தினம் பார்வையிட்டனர். நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களையும் சந்தித்து பேசினர். இந்நிலையில் அவர் வயநாட்டில் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:

கேரளா இதற்கு முன்பு ஒரே பகுதியில் மிகப் பெரிய சோகத்தை கண்டதில்லை. இது கொடூரமான சோகச் சம்பவம். பாதிக்கப்பட்ட இடங்களை நாங்கள் நேரில் சென்று பார்த்தோம். நிவாரண முகாம்களில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து பேசினோம். எனது தந்தை படுகொலை செய்யப்பட்டபோது ஏற்பட்ட அதே வேதனையை, இங்கு ஏற்பட்ட பாதிப்புகளை பார்க்கும்போது உணர்ந்தேன்.

இங்குள்ள நிலைமையை ஆய்வு செய்தோம். பஞ்சாயத்து மற்றும் உள்ளூர் நிர்வாகத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினோம். இங்கு ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் வீடுகள் சேதம் பற்றி அவர்கள் விளக்கினர். வயநாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முடிந்தளவில் உதவுவதாக கூறியுள்ளோம்.

இங்கு 100-க்கும் மேற்பட்ட வீடுகள் காங்கிரஸ் சார்பில் கட்டித் தரப்படும். வயநாட்டில் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து டெல்லியிலும், மாநில முதல்வரிடமும் பேச உள்ளேன். இவ்வாறு ராகுல் கூறினார்.

x