வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டோருக்கு 100 வீடுகளை காங்கிரஸ் கட்டித்தரும் - ராகுல் காந்தி உறுதி


கேரளா: வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு காங்கிரஸ் சார்பில் 100 வீடுகள் கட்டித்தரப்படும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலத்தில் கடந்த 30ம் தேதி அதிகாலையில் வயநாடு மாவட்டம் மேப்பாடி அடுத்த சூரல்மலை பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் மேப்பாடி, சூரல்மலை, முண்டக்கை, வைத்திரி, வெள்ளேரிமலை, பொத்துகலு உள்ளிட்ட கிராமங்கள் கடுமையாக பதிக்கப்பட்டன. தற்போதைய நிலவரப்படி இந்த நிலச்சரிவில் சுமார் 316 சடலங்கள் மீட்கப்பட்டிருக்கின்றன என கேரள அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட சூரல்மலை பகுதிக்கு மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, அவரின் சகோதரி பிரியங்கா ஆகியோா் நேற்றுப் நேரில் சென்று பாா்வையிட்ட நிலையில், இன்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களை ராகுல் காந்தி சந்தித்து வருகிறார்.

வயநாட்டில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, “நேற்று முதல் நான் இங்கே இருக்கிறேன். நான் நேற்று சொன்னது போல், இது ஒரு பயங்கரமான சோகம். நேற்று நாங்கள் பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்றோம். முகாம்களுக்கு சென்றோம். அங்குள்ள நிலைமையை மதிப்பீடு செய்தோம்.

இன்று பேரூராட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினருடன் ஆலோசனை நடத்தினோம். எதிர்பார்க்கும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை, சேதமடைந்த வீடுகளின் எண்ணிக்கை மற்றும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அவர்கள் எங்களிடம் கூறினர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு முடிந்த எல்லா வகை உதவிகளையும் அளிக்க நாங்கள் இருக்கிறோம். இங்கு 100க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டித்தர காங்கிரஸ் உறுதியளிக்கிறது.

கேரளாவில் இதுபோன்ற ஒரு சோகம் வேறு எங்கும் நிகழ்ந்ததில்லை என்று நினைக்கிறேன். இதுதொடர்பாக மத்திய அரசிடமும், கேரள முதல்வரிடமும் வலியுறுத்த உள்ளேன். இப்போதைக்கு நமது முன்னுரிமை, தேடுதல்தான். இன்னும் உயிரோடு யாரேனும் இருக்கிறார்களா என்பதை தீவிரமாக தேட வேண்டும்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு அளிப்பது என்பது மிகவும் முக்கியமான விஷயம். பாதிக்கப்பட்ட மக்களில் பலர், மீண்டும் அங்கே செல்ல விரும்பவில்லை என என்னிடம் தெரிவித்தனர். எனவே, அவர்கள் பாதுகாப்பான இடங்களில் மறுகுடியமர்த்தப்பட வேண்டும். அவர்களை மீண்டும் அங்கே செல்ல வலியுறுத்தக்கூடாது. இது குறித்தும் கேரள அரசிடம் வலியுறுத்த உள்ளேன்” என அவர் தெரிவித்தார்.

x