விழாவுக்கு ஸ்டாலினை அழைத்தால் பாஜக மேடை ஏறி பேசுவேன்!


பாதிரியார் அமலதாஸ்

விரைவில் நடக்க உள்ள தூத்துக்குடி கத்தோலிக்க மறைமாவட்டத்தின் நூற்றாண்டு விழாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலினை அழைக்க ஆயர் ஸ்டீபன் முடிவுசெய்த நிலையில், “மு.க.ஸ்டாலினை அழைத்தால் அண்ணாமலை முன்பு பாஜகவில் இணைவேன்” என சரவெடியைக் கொளுத்திப் போட்டிருக்கிறார் கத்தோலிக்க பாதிரியார் அமலதாஸ். ஏன் இத்தனை ஆவேசம்? காமதேனுவுக்காக அவரிடம் பேசினோம்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்

முதல்வர் என்ற முறையில் மு.க.ஸ்டாலினை அழைப்பது ஒன்றும் தவறில்லையே... அதை ஏன் எதிர்க்கிறீர்கள்?

முதல்வரை மட்டும் அழைப்பது எப்படி சரியாகும்? அவர் திமுக தலைவர் என்பதை நீங்கள் வசதியாக மறந்துவிடுகின்றீர்கள். அழைத்தால் அனைத்துக் கட்சிகளையும் அழைக்க வேண்டும் என்பதுதான் எனது நிலைப்பாடு. ஒருவரை மட்டுமே அழைப்பது தவறானது.

நான் 46 ஆண்டுகளாக பல தேவாலயங்களில் கத்தோலிக்க பாதிரியராக இருந்திருக்கிறேன். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருச்சபை விதிகளின்படி ஓய்வுபெற்றேன். என்னைப் பொறுத்தவரை பாதிரியாருக்கு ஓய்வு என்பதே கிடையாது. இது ஓய்வற்ற இறைப்பணி. இப்போது இன்னாசியார்புரம் பகுதியில் உள்ள தேவாலயத்திலும் திருப்பலி நிறைவேற்றுகிறேன். என் மனதின் அடி ஆழத்தில் இருந்து ஒரு பாதிரியாரின் மனசாட்சியின் குரலாகச் சொல்கின்றேன்; இந்த விழாவுக்கு ஸ்டாலினை மட்டும் அழைக்கக்கூடாது. அதற்கு அவர் தகுதி அற்றவர்.

முதல்வர் என்பது கட்சித் தலைவர் பதவி என்பதைக் கடந்த முக்கியப் அரசுப் பதவி அல்லவா?

மு.க.ஸ்டாலினை சிறுபான்மையினரின் பாதுகாவலர் என நினைத்துக்கொண்டு அழைக்கின்றார்கள். அவர் அப்படி அல்ல. அவரது செயல்பாடுகளும், நடவடிக்கைகளும் முதல்வர் என்னும் எண்ணத்தையே எனக்கு உருவாக்கவில்லை. தேர்தல் வாக்குறுதியில் மதுக்கடைகள் அனைத்தும் மூடப்படும் என்றார். ஆனால் மூடினாரா? தமிழ்நாட்டில் இப்போது பெண்களுக்குப் பிரத்யேக பார் எல்லாம் வந்துவிட்டது.

மதுவை எதிர்த்த ராஜாஜி, அண்ணா, காமராஜர் ஆண்ட மண் இது. மு.க.ஸ்டாலின் பொறுப்பற்ற மது வியாபாரி என்றுதான் நான் அளவீடு செய்வேன். மது வியாபாரியை மட்டுமே அழைப்பதைத்தான் எதிர்க்கிறேன்.

திமுகவை சிறுபான்மையினரின் காவலர் இல்லை என்கிறீர்கள். அப்படியானால் பாஜக மைனாரிட்டிகளின் துணைவனா?

பாஜகவும் சிறுபான்மையினர் காவலர் இல்லைதான். அங்கும் சில மதவெறியர்கள் இருக்கிறார்கள். அவர்கள் யூடியூப் தளங்களில் பேசும்போதெல்லாம் மோகன் சி லாசரஸ், தினகரனையெல்லாம் விமர்சிப்பது நூறு சதவீதம் உண்மைதான். அவர்கள், பனிமயமாதா கோயிலில் சப்பரம் எடுக்கிறார்கள். எங்களைப் பார்த்து நகல் எடுக்கிறார்கள் என்றெல்லாம் பேசும்போது நடுநிலையான கிறிஸ்தவர்களின் உணர்வுகளையும் சேர்த்தே புண்படுத்துகின்றார். அதை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

கேரளத்தில் ஒரு பிஷப், ரப்பர் விலையைக் கூட்டித்தந்தால் பாஜகவுக்கு வாக்களிப்போம் என்றார். நீங்களும் பாஜக புகழ்பாடுவது போல் தெரிகிறதே?

பிஷப் சலுகைக்காக பேசி உள்ளார். நான் எந்தச் சலுகையும் கோரவில்லை. சலுகைக் கிடைப்பதற்காக வாக்களிப்பேன் எனச் சொல்வதே கோழைத்தனம் தான். சலுகையே வேண்டாம் என்பவன் தான் வீரமகன். இந்த மக்களைக் காக்க மதுக்கடைகளைத் திறக்கமாட்டோம் என பாஜக ஒரு ஸ்டாண்ட் எடுத்து தேசம் முழுவதும் மதுவிலக்கைக் கொண்டுவந்தால் நானும் ஓட்டுப்போடுவேன்.

நான் முத்தையாபுரம் பகுதியில் பாதிரியாராக இருந்தபோது திருச்செந்தூர் கோயிலுக்கு பாதயாத்திரை சென்ற இந்து சகோதரர்கள் தங்குவதற்கு தேவாலயப் பள்ளிக்கூடத்தில் இடம் கொடுத்தவன். அது எதிர்ப்பையும் மீறி நடந்தது. இன்னொரு முறை நடைபயணத்தின் போது களைப்பாக உணரும் பக்தர்களை என் வீட்டுக்கே அழைத்துவந்து ஜூஸ் போட்டுக் கொடுத்திருக்கின்றேன்.

பாஜகவில் இணைவேன் என நீங்கள் சொன்னதற்கு திருச்சபையின் ரியாக் ஷன் எப்படி இருந்தது?

எங்கள் பிஷப்பே, ஒரு கத்தோலிக்க பாதிரியார் பாஜகவில் இணைவேன் என எப்படிச் சொல்லலாம் எனத் தூண்டி விடுகின்றார். சலுகைக்காக கேரள பிஷப் வாக்களிக்கத் தயார் என சொல்லியிருப்பதை நினைவூட்டுகின்றேன். நான் அவரைப் போல் சலுகை கோரவில்லை. கொள்கை அடிப்படையில் திருச்சபை செல்லும்பாதை சரியில்லை என்பதால் பாஜகவில் இணைவேன் என்கிறேன்.

இவர்களின் கருத்துப்படி பாஜக சாத்தானின் கட்சி என்றால், திமுக தேவதூதனின் கட்சியா? பாஜக 50 சதவீதம் கேடு கெட்ட கட்சி என்றால்... திமுக 80 சதவீதம் கேடு கெட்ட கட்சி. அப்படியானால் எதைத் தேர்ந்தெடுப்பேன். நீங்களே முடிவுசெய்யுங்கள்.

நீங்கள் திருச்சபைக்குள் குழப்பம் செய்வதாக சிலர் எண்ணுகிறார்கள் போல் தெரிகிறதே?

நான் என் மனதுக்கு தோன்றுவதை வெளிப்படையாகச் சொல்கின்றேன். மற்றவர்கள் முதுகுக்குப் பின்னால் முதுகு கடிப்பார்களே தவிர வெளிப்படையாகப் பேசமாட்டார்கள். அவ்வளவுதான். கிறிஸ்தவர்கள் மிகவும் நல்லவர்கள். தேவனின் மீது மாறாத அன்புகொண்டவர்கள். ஆனால், மோகன் சி லாசரஸ், பால் தினகரன் போன்றவர்களின் போலித்தனங்களை எதிர்க்கின்றேன். இவர்கள் இந்துக்களையும் நாலுமாவடி வாருங்கள் என்கின்றனர். ‘கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உன்னை மறவேனே’ என்னும் பாடலைப் போட்டு நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தே உங்கள் நம்பிக்கைப்படி பிரார்த்தனை செய்யலாமே என்கின்றேன். ஏன் அங்கே ஓடவேண்டும்? கிறிஸ்தவம், இந்து எல்லாம் சகோதர மதங்கள் தான். இங்கு பிரிவினைக்கு இடம் இல்லை என்பது என் நிலைப்பாடு.

நான் கிறிஸ்தவத்தில் குரங்குச் சேட்டை செய்வோரை தான் எதிர்க்கின்றேன். மதவெறி இல்லாமல் இயேசு சொன்ன அன்பை விதைப்போம் என்பது என் நிலைப்பாடு. நான் பணிசெய்த தேவாலயங்களில் எல்லாம் இப்படித்தான் என் உரை இருந்தது. என்னைப் புரிந்துகொண்டு பங்குமக்களும் பெரும் ஆதரவுதந்தனர்.

திமுகவைப் போல் பாஜகவையும் இப்படி விமர்சனம் செய்வீர்களா?

அதையும் விமர்சிக்கின்றேனே... அதன் போக்கையும் விமர்சனம் செய்கின்றேன். ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு தடி எதற்கு என்கிறேன். ஆயரிடம் நான் சொல்வது, ஸ்டாலினை மட்டும் கூப்பிட்டால், அதற்கு கத்தோலிக்க கிறிஸ்தவர்களும் தலையாட்டி பொம்மைகளாக ஆமாம் போடுவார்கள். ஆனால், அப்படிப்பட்ட கத்தோலிக்கர்களை நம்புவதை விட பாஜகவை நம்புவேன். இந்நேரத்தில் முதல்வரை அழைப்பதில் ஏதேனும் சலுகை கேட்கத்தான் அழைக்கிறார்களோ என்னும் சந்தேகமும் வருகின்றது.

பாஜக அழைத்தால் அந்தக் கட்சிக்குப் போவீர்களா?

நிச்சயமாகப் போகமாட்டேன். என்னுடைய கிறிஸ்தவ சபையில் இருந்துகொண்டே பாஜக கொள்கையை தூக்கிப் பிடிப்பேன். மது வியாபாரியை ஆதரிக்கும் திமுகவைவிட கலாச்சாரம், பண்பாட்டைக் காப்பதில் பாஜக முன்வரிசையில் நிற்கிறது. பண்பாட்டுக்கு விரோதமான காதலர் தினத்தை பாஜக விரும்பாது. இந்திய நாட்டின் பண்பாட்டின் காப்பகமாக பாஜக உள்ளது. காந்தி நினைவிடத்திற்கு செல்லும்போது போப்பாக இருந்த இரண்டாம் ஜான்பாலே செருப்பைக் கழற்றிவிட்டுச் சென்றார். ஆனால் ஆயர்கள் செருப்போடுதான் பூஜை கொடுக்கின்றனர். ஸ்டாலினை கூப்பிட்டே தீருவோம் என்றால் நான் பாதிரியராக இருந்துகொண்டே பாஜக மேடைகளில் முழங்கினால்கூட ஆச்சரியம் இல்லை.

500 மதுக்கடைகள் மூடப்படும் என சட்டப் பேரவையில் சொல்லியிருக்கிறார்களே கவனித்தீர்களா?

அவர்கள் தேர்தல் வாக்குறுதியில் சொன்னது பூரண மதுவிலக்குத்தானே! ஓ...இப்போது நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் வருகிறது அல்லவா? புனித வெள்ளிக்குக்கூட டாஸ்மாக் கடையை மூட அவர்களுக்கு மனம் வரவில்லையே!

x