கூடுதல் பேரிடர் மேலாண்மை நிதியை பாரபட்சமின்றி மாநிலங்களுக்கு அரசு வழங்க வேண்டும்: மல்லிகார்ஜுன கார்கே  


கோப்புப்படம்

புதுடெல்லி: நாட்டின் பல்வேறு பகுதிகள் இயற்கை சீற்றங்களைச் சந்தித்து வரும் நிலையில், மோடி தலைமையிலான அரசு, கூடுதல் பேரிடர் மேலாண்மை நிதியை பாரபட்சமின்றி மாநிலங்களுக்கு வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெள்ளிக்கிழமை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் அவர், பேரிடர் மேலாண்மையை மேம்படுத்தவும், வெள்ளம், கனமழை, மேகவெடிப்பு மற்றும் வறட்சி போன்ற காலநிலை மாற்றத்தின் விளைவுகளை கையாளுவதற்கு அறிவியல் அணுகுமுறையினை பின்பற்றி நிலையான கொள்கைகளை உருவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் இந்தியில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: "உத்தராகண்ட் மாநிலத்தில் கனமழை, மேகவெடிப்பு மற்றும் நிலச்சரிவு காரணமாக பலர் உயிரிழந்திருப்பதாக வந்திருக்கும் செய்தி மிகவும் வருத்தம் அளிக்கிறது. பலர் காணமல் போயிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தக் கடினமான சூழ்நிலையில் நாங்கள் உத்தராகண்ட் மக்களுடன் உறுதுணையாக நிற்கிறோம். பாதிக்கப்பட்டவர்களுக்கு எங்களின் அனுதாபத்தினைத் தெரிவித்துக் கொள்கிறோம். ராணுவத்தினர் மேற்கொண்டு வரும் மீட்பு பணிகள் அம்மக்களுக்கு பாதுகாப்பினையும் நிவாரணத்தினையும் வழங்கும் என்று நம்புகிறோம்.

அரசு மற்றும் நிர்வாக அமைப்புகள் தங்களின் கடமையினை நிறைவேற்றி பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கி உதவிட வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

நாடு காலநிலை மாற்றத்துடன் போராடி வருகிறது. பல்வேறு மாநிலங்கள் வெள்ளம், கனமழை, மேகவெடிப்பு மற்றும் வறட்சி போன்ற அவசர சூழல்களைச் சந்தித்து வருகின்றன. இதற்கு அறிவியல் முறைகளைப் பின்பற்றி, உறுதியான கொள்கைகளை உருவாக்கி, அனைவரின் பங்களிப்புடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாம் நமது பேரிடர் மேலாண்மையையும் மேம்படுத்த வேண்டும். இவை அனைத்துக்கும் அரசின் நேர்மையான முன்முயற்சி அவசியமானதாகும். ஆண்டுதோறும் நிகழ்ந்து வரும் இந்த இயற்கை சீற்றங்களை எதிர்கொள்வதற்கு, மோடி தலைமையிலான அரசு அனைத்து மாநிலங்களுக்கும் பாரபட்சமின்றி கூடுதல் பேரிடர் மேலாண்மை நிதியினை வழங்க வேண்டும்". இவ்வாறு கார்கே தெரிவித்துள்ளார்.

உத்தராகண்ட்டில் இரவில் பெய்த மழையின் காரணமாக பல ஆறுகள் பெருக்கெடுத்து ஓடியதால் அங்கு வீடுகள் இடிந்து விழுந்தன. இதன் காரணமாக 14 பேர் உயிரிழந்துள்ளனர். பத்துக்கும் அதிகமானோர் காயமடமைந்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

x