கர்நாடகாவில் போலீஸ் இன்றும் துப்பாக்கிச்சூடு: கொள்ளையன் படுகாயம்


ஹூப்ளி:திருட்டு மற்றும் கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளியை போலீஸார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த சம்பவம் ஹூப்ளியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் ஹூப்ளியைச் சேர்ந்தவர் சோனு நாயக். திருட்டு மற்றும் கொள்ளை வழக்குகளில் போலீஸாரால் தேடப்பட்டு வந்த இவர் மீது திருட்டு மற்றும் கொள்ளையென 12 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரை கைது செய்ய போலீஸார் வலைவீசி தேடி வந்தனர்.

இந்த நிலையில், கடக் மாவட்டத்தில் உள்ள ஹூப்ளியில் உள்ள எம்டிஎஸ் காலனி அருகே சோனு நாயக் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து ஹூப்ளி புறநகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் எம்.எஸ். ஹூகர் தலைமையில் போலீஸார், சஞ்சய் நாயக்கை இன்று காலை சுற்றி வளைத்தனர். அப்போது போலீஸாரை கற்களால் தாக்கி விட்டு சோனு நாயக் தப்ப முயன்றார். அப்போது இன்ஸ்பெக்டர் ஹூகர் துப்பாக்கியால் கொள்ளையன் சோனு நாயக்கை சுட்டார். இதில் காலில் குண்டு காயம் அடைந்த சோனு நாயக் கைது செய்யப்பட்டார். சம்பவ இடத்தை காவல் ஆணையர் என்.சசிகுமார் பார்வையிட்டார். துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த சோனு நாயக் கிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கர்நாடகாவில் கடத்த சில நாட்களாக ரவுடிகளை போலீஸார் சுட்டுப் பிடித்து வருகின்றனர். கடக் மாவட்டத்தில் லக்குண்டி கனகினஹலா சாலையில் பதுங்கியிருந்த ரவுடி சஞ்சய் கொப்பாவை போலீஸார் பிடிக்கச் சென்றனர். அப்போது அவர் தாக்கியதில் காவலர் பிரகாஷ் காயமடைந்தார். இதனால் தற்காப்பிற்காக எஸ்.ஐ சங்கமேஸ் சிவயோகி துப்பாக்கியால் சுட்டத்தில் ரவுடி சஞ்சய் கை மற்றும் கால்களில் காயம் ஏற்பட்டது. இவர் மீது கொள்ளை, கொலை முயற்சி உள்ளிட்ட 12 வழக்குகள் பதிவு செய்ய்ப்பட்டுள்ளன. காயமடைந்த காவலர் பிரகாஷ், ரவுடி சஞ்சய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதே போல ஆனேக்கல் நகராட்சி உறுப்பினர் ரவி என்ற ஸ்கிராப் ரவியை கொலை செய்த ரவுடி ஜேகே என்ற கார்த்திக்கை போலீஸார் நேற்று சுட்டுப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

x