என் வாழ்நாளில் இத்தகைய கோர சம்பவத்தை கண்டதில்லை: வயநாடு நிலச்சரிவு குறித்து பெண் மருத்துவரின் வேதனை பகிர்வு


வயநாடு: வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் சடலங்களைப் பிரேத பரிசோதனை செய்து வரும்அரசு மருத்துவர் ஒருவர் கூறியது:

பிரேத பரிசோதனை எனக்கு புதிதல்ல. ஆனால், இந்த முறை, முதல் சடலத்தைக் கண்டதுமே இத்தகைய சூழலைக் கையாளும் மனோதிடம் எனக்கில்லை என்று எனக்கு நானே கூறிக்கொண்டேன். அந்த அளவுக்கு உருக்குலைந்த நிலையில் உயிரிழந்தவரின் உடல் வந்து சேர்ந்தது. இரண்டாவதாக, 1 வயது குழந்தையின் சடலத்தைக் கண்டதும் மனம் நொறுங்கிப் போனது.

அந்த பச்சிளம் குழந்தைக்கு நிச்சயமாக என்னால் பிரேத பரிசோதனை செய்ய முடியாது என்றேமனம் குமுறியது. ஏதோ ஒரு மருத்துவமனைக்குத் தப்பியோடி அங்குஉயிரோடு இருப்பவர்களை பராமரித்துக் காக்கும் பணியைச் செய்வோமே என்று தோன்றியது. ஆனால், முதல் தினமே வேறுவழியின்றி 18 பேருக்கு பிரேத பரிசோதனை செய்ய வேண்டியதாயிற்று.

பிரேத பரிசோதனை அறையில் 8 மேஜைகள் வைக்கப்பட்டிருந்தன. நிலச்சரிவினால் அசம்பாவிதம் ஏற்பட்டதுமே மாநிலத்தின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து தடயவியல் நோயியல் நிபுணர்கள் விரைந்து வந்து எங்கள் பிரேத பரிசோதனை அறையில் குழுமி இருந்தனர். எல்லோரும் சேர்ந்து இரவு 11:30 வரை நசிந்துபோன 93-க்கும் மேற்பட்ட உடல்களை ஆய்வு செய்தோம்.

என் வாழ்நாளில் இத்தகைய கோர சம்பவத்தைக் கண்டதில்லை. இப்படிப்பட்ட சடலங்களை கைதேர்ந்த மருத்துவர்கள்கூட பரிசோதனை செய்ய நடுநடுங்குவதைக் கண்கூடாகக் காண்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

x