ராணுவ மருத்துவ சேவைகள் பிரிவின் முதல் பெண் தலைமை இயக்குநர் சாதனா சக்சேனா பதவி ஏற்பு


புதுடெல்லி: ராணுவ மருத்துவ சேவைகள் பிரிவின் முதல் பெண் தலைமை இயக்குநராக லெப்டினன்ட் ஜெனரல் சாதனா சக்சேனா நாயர் நேற்று பதவி ஏற்றார்.

இது தொடர்பாக மத்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: புனேயில் உள்ள ராணுவ மருத்துவக் கல்லூரியில் பட்டம்பெற்று 1985-ல் இந்திய விமானப்படையில் சாதனா சக்சேனா இணைந்தார். குடும்ப மருத்துவத்தில் முதுநிலைப் பட்டம், மகப்பேறு மற்றும் குழந்தை சுகாதார மேலாண்மையில் பட்டயம் ஆகியவற்றைப் பெற்ற இவர், டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் 2 ஆண்டுகள் பயிற்சி பெற்றார். ரசாயனம், உயிரி, கதிரியக்கவியல் மற்றும் அணு ஆயுதப்போர் தொடர்பாக இஸ்ரேல் பாதுகாப்பு படையில் பயிற்சி பெற்றுள்ளார்.

இதுபோக, சுவிட்சர்லாந்து நாட்டின் ஸ்பீஸ் நகரில் உள்ள ஸ்விஸ் ராணுவப் படையில் ராணுவ மருத்துவ அறநெறியில் சிறப்புப் பயிற்சி பெற்றுள்ளார்.

ஏர் மார்ஷலாக பதவி உயர்த்தப்பட்டபோது பாதுகாப்பு படையின் மருத்துவமனை சேவைகள் தலைமை இயக்குநராக பதவி வகித்த முதல் பெண் இவரே. அதேபோல், மேற்கு விமான மற்றும் பயிற்சிப் படையின் முதன்மை மருத்துவ அதிகாரியாக பணியாற்றிய முதல் பெண் அதிகாரி இவர்ஆவார். இந்திய விமானப்படையின் விசிஷ்ட சேவா பதக்கம் உட்பட பல பதக்கங்களை பெற்றுள்ளார். இவர் ராணுவ மருத்துவ சேவைகள் பிரிவின் முதல் பெண் தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

x