புதுடெல்லி: வியட்நாம் பிரதமர் பாம் மின் சின் மூன்று நாட்கள் அரசு முறை பயணமாக டெல்லி வந்துள்ளார். அவர் நேற்று பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். அப்போது இரு நாடுகளிடையே வேளாண்மை, வர்த்தகம் தொடர்பாக பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பின்னர் இருவரும் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டியளித்தனர்.
அப்போது பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது: கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா,வியட்நாம் இடையிலான வர்த்தகம் 85% அதிகரித்து உள்ளது. வேளாண்மை, வர்த்தகம், வானொலி, தொலைக்காட்சி சேவைதொடர்பாக இரு நாடுகளிடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.
வரும் 2047-ம் ஆண்டில் வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்க இலக்கு நிர்ணயித்து உள்ளோம். இதேபோல வரும் 2045-ம் ஆண்டில் வளர்ச்சி அடைந்த வியட்நாமை உருவாக்க அந்த நாடு இலக்கு நிர்ணயித்து இருக்கிறது. இந்த லட்சிய கனவுகளை, நனவாக்க இரு நாடுகளும் இணைந்து செயல்படும்.
எரிசக்தி மற்றும் தொழில்நுட்பத்தில் இரு நாடுகள் இடையிலான ஒத்துழைப்பு மேலும் விரிவுபடுத்தப்படும். இந்தியா, வியட்நாம் இடையே 50 நேரடி விமான சேவைகள் இயக்கப்படுகின்றன. பசிபிக் கடல் பிராந்தியத்தில் தடையற்ற கப்பல் போக்குவரத்தை உறுதி செய்ய இரு நாடுகளும் உறுதி பூண்டுள்ளன. வியட்நாமின் கடல்சார் பாதுகாப்புக்காக இந்தியா சார்பில் 300 மில்லியன் அமெரிக்கடாலர் கடன் உதவி வழங்கப்படும். தீவிரவாதத்தை கட்டுப்படுத்துவதில் இரு நாடுகளும் இணைந்து செயல்படும். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
வியட்நாம் பிரதமர் பாம் மின் சின் கூறியதாவது: கரோனா பெருந்தொற்று காலத்தில் இந்தியா செய்த உதவியை மறக்க முடியாது. அந்த இக்கட்டான நேரத்தில் கரோனா தடுப்பூசிகள், மருந்துகளை வியட்நாமுக்கு இந்தியா தாராளமாக வழங்கியது. அதற்காக இந்தியாவுக்கு மனதார நன்றி தெரிவித்து கொள்கிறேன். சர்வதேச வர்த்தகத்தில் இந்திய- பசிபிக் கடல் பிராந்தியம் முக்கிய இடம் வகிக்கிறது. இந்த பிராந்தியத்தில் சுதந்திரமான கடல் போக்குவரத்தை உறுதி செய்ய இரு நாடுகளும் இணைந்து செயல்படும்.
உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளின் பட்டியலில் இந்தியா5-வது இடத்துக்கு முன்னேறி உள்ளது. பிரதமர் மோடியின் தலைமை,இந்திய மக்களின் கடின உழைப்பால் இந்த சாதனை படைக்கப்பட்டு இருக்கிறது.
இந்தியா, வியட்நாம் இடையே பழங்காலம் முதலே தொடர்பு இருக்கிறது. ஆசியாவின் கிழக்கு நாடுகளுக்கு இந்தியா முன்னுரிமை அளிக்கிறது. இதில் வியட்நாம் முக்கிய இடம் வகிக்கிறது. வியட்நாமுக்கு அரசு முறை பயணம் மேற்கொள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கிறேன்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பிரம்மோஸ் ஏவுகணை: தென்சீனக் கடல் பகுதியில் சீனாவுக்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. சீனாவின் அச்சுறுத்தலை சமாளிக்க இந்தியாவிடம் இருந்து பிரம்மோஸ் ஏவுகணைகளை பிலிப்பைன்ஸ் வாங்கி உள்ளது.
இதேபோல தென்சீனக் கடல் எல்லை தொடர்பாக வியட்நாமுக்கும் சீனாவுக்கும் இடையே நீண்ட காலமாக பதற்றம் நீடித்து வருகிறது. எனவே பிலிப்பைன்ஸை போன்று இந்தியாவிடம் இருந்து பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்க வியட்நாம் அரசு திட்டமிட்டு உள்ளது. அதோடு இந்தியாவின் ஆகாஷ் ஏவுகணைகளை வாங்கவும் அந்த நாடு அதிக விருப்பம் தெரிவித்துள்ளது.
இந்திய, வியட்நாம் பிரதமர்கள் சந்திப்பின்போது பிரம்மோஸ், ஆகாஷ் ஏவுகணைகள் தொடர்பாக விரிவான ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன