புதுடெல்லி: தமிழக மீன்பிடி படகின் மீது இலங்கையின் கடற்படை கப்பல் மோதிய சம்பவம் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது. வியாழக்கிழமை நடந்த இந்த சம்பவத்தின் மீது வெளியுறவுத் துறை அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
இது குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’கச்சத்தீவுக்கு வடக்கே 5 கடல் மைல் தொலைவில் இலங்கை கடற்படை கப்பல் ஒன்றும் இந்திய மீன்பிடி படகு ஒன்றும் இன்று அதிகாலை மோதிக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படகில் இருந்த நான்கு இந்திய மீனவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொருவர் காணாமல் போயுள்ளார். மீனவர்களில் இருவர் மீட்கப்பட்டு காங்கேசன்துறை கரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர். காணாமல் போன இந்திய மீனவரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் உடனடியாக காங்கேசன்துறைக்கு விரைந்துசென்று மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு அனைத்து உதவிகளையும் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இன்று காலை டெல்லியில் உள்ள இலங்கை தூதகர அதிகாரியை வெளிவிவகாரத் துறை அமைச்சகத்துக்கு அழைக்கப்பட்டு இந்த சம்பவம் தொடர்பாக கடும் எதிர்ப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், உயிரிழப்பு குறித்து எங்கள் அதிர்ச்சியையும் வேதனையையும் வெளிப்படுத்தினோம். கொழும்பில் உள்ள நமது தூதகர அதிகாரியும் இன்றே இலங்கை அரசாங்கத்திடம் இந்த விஷயத்தை எழுப்பவுள்ளார்.
மீனவர்கள் தொடர்பான பிரச்சினைகளை மனிதாபிமான முறையில் கையாள வேண்டியதன் அவசியத்தை இந்திய அரசு எப்போதும் வலியுறுத்தி வருகிறது. அந்த வகையில் இரு அரசுகளுக்கும் இடையே நிலவும் புரிந்துணர்வுகள் கண்டிப்பாக கடைபிடிக்கப்பட வேண்டும். இப்படிப்பட்ட நிகழ்வுகள் மீண்டும் மீண்டும் நிகழாமலும் அல்லது பலத்தை பயன்படுத்தாமலும் இருப்பதை உறுதி செய்ய அதிகபட்ச முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இந்திய மீனவர்களின் பாதுகாப்புக்கு அரசாங்கம் அதிக முன்னுரிமை அளிக்கிறது. இந்திய மீனவர்கள் தொடர்பான பிரச்சினைகள் இலங்கைத் தலைமையிடம் தொடர்ச்சியாக எழுப்பப்பட்டு வருகின்றன" என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.