சிம்லா: வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு சோகம் தீரும் முன் இமாச்சல் பிரதேசத்தில் ஏற்பட்ட மேகவெடிப்பால் ஏற்பட்ட கனமழையில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளனர். 32 பேரை காணவில்லை என்ற அமைச்சர் ஜகத் சிங் நேகி தெரிவித்துள்ளார்.
கேரளாவில் பெய்த தொடர் கனமழை காரணமாக வயநாடு மலைப் பகுதியில் உள்ள சூரல் மலையில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. இந்த நிலச்சரிவில் பெண்கள், குழந்தைகள் உட்பட இதுவரை 280-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர், ராணுவம், தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இமாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்ட மேகவெடிப்பு காரணமாக 32 பேரைக் காணவில்லை என்ற அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து நேற்று முதல் கனமழை வரை பெய்து வருகிறது. இங்குள்ள சிம்லா மற்றும் மண்டியில் பெய்து வரும் கனமழைய காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் உணவு கிடைக்காமல் மக்கள் தவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிம்லா மாவட்டத்தில் உள்ள ராம்பூர் பகுதியில் உள்ள சமேஜ் காட் என்ற இடத்தில் நீர்நிலைத் திட்டம் அமைக்கப்பட்டு வருகிறது. அதன் அருகே மேக வெடிப்பில் ஏற்பட்ட கனமழையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் இருவர் உயிரிழந்துள்ள நிலையில், 32 பேரைக் காணவில்லை என்று இமாச்சலப் பிரதேச அமைச்சர் ஜகத் சிங் நேகி தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து மீட்பு பணிகளில் தேசிய பேரிடர் மீட்புப் படை, இந்தோ திபெத்திய எல்லைக் காவல் துறை, காவல்துறை மற்றும் ஊர்க்காவல் படையினர் ஈடுபட்டுள்ளனர் என்று சிம்லாவின் துணை ஆணையர் அனுபம் காஷ்யப் தெரிவித்தார், அதே நேரத்தில் சாலைகள் அடித்துச் செல்லப்பட்டதாகவும், அப்பகுதியில் உள்ள நீர் மின் திட்டமும் சேதமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் காணாமல் போனவர்களைக் கண்டறிய ஆளில்லா விமானங்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்று கூறிய அவர், மண்டியின் தல்துகோட், பதார் துணைப்பிரிவில் மற்றொரு மேக வெடிப்பு பதிவாகியுள்ளது என்று கூறியுள்ளார். இந்த பேரழிவில் வீடுகளும் சேதமடைந்துள்ளதாகவும், மாவட்ட நிர்வாகம் மற்றும் என்டிஆர்எஃப் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளதாகவும் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.