கேரளம்: நிலச்சரிவு ஏற்பட்டு பேரழிவைச் சந்தித்துள்ள வயநாடு வாடிக்கையாளர்களுக்கு இலவச டெலிகாம் சலுகைகளை வழங்குவதாக பாரதி ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது.
கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்த கனமழையால் மேப்பாடி பகுதியில் மலைப்பாங்கான பகுதிகளில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை, நூல்புழை என பல கிராமங்களில் காட்டாற்று வெள்ளம் சூழ்ந்து நிலச்சரிவு ஏற்பட்டதால், வீடுகள், மக்கள், கால்நடைகள், வாகனங்கள் மண்ணில் புதைந்தன. இந்த நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 280 தாண்டியுள்ளது. மேலும் 150-க்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போய் உள்ளனர். மோப்பநாய்கள் உதவியுடன் அவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக பலியானோர் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இந்த நிலையில், இயற்கை பேரழிவு ஏற்பட்டுள்ள வயநாட்டில் உள்ள தங்களது வாடிக்கையாளர்களுக்கு, இலவச டெலிகாம் சலுகைகளை வழங்குவதாக பாரதி ஏர்டெல் அறிவித்துள்ளது. ப்ரீபெய்டு மட்டுமல்ல, போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்கும் ஏர்டெல் செல்போன் சேவை அணுகலை நீட்டித்துள்ளது.
அதன்படி வயநாடு பேரழிவுக்குப் பிறகு செல்போன் ரீசார்ஜ் செய்ய முடியாத வாடிக்கையாளர்களுக்கு ரீசார்ஜ் முடிந்து விட்டால், மூன்று நாட்களுக்கு நீட்டிக்கப்பட்ட சேவைகளை வழங்கும். ஏர்டெல், வாடிக்கையாளர்கள் தினசரி 1 ஜிபி மொபைல் டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ் ஆகியவற்றைப் பெறலாம் என்று அறிவித்துள்ளது. இந்த சலுகைகள் கேரளாவில் உள்ள வயநாடு ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது