இளமை ததும்பும் திருவள்ளுவர்: இலங்கையில் புதிய உருவப்படம் வெளியீடு


இலங்கையில் வெளியிடப்பட்டுள்ள திருவள்ளுவர் உருவப்படம்

இளமையான, இன்னும் அழகான திருவள்ளுவர் உருவப்படத்தை இலங்கை யாழ்ப்பாணம் இந்து கல்லூரி வெளியிட்டிருக்கிறது.

திருவள்ளுவர் என்றாலே அறிவும், வயதும் முதிர்ச்சியான உருவம்தான் நம் நினைவுக்கு வரும். அது ஆர்.கே.வேணுகோபால் சர்மா என்பவரால் வரையப்பட்ட ஓவியம். திருக்குறளில் உள்ள கருத்துக்களின் அடிப்படையில் திருவள்ளுவர் எப்படி இருந்திருக்க வேண்டும் என்பதை நீண்ட ஆராய்ச்சிகளுக்கு பிறகு சிறிது சிறிதாக ஒன்று சேர்த்து, அவர் வரைந்த அந்த ஓவியம் தமிழ்நாடு அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அங்கீகரிக்கப்பட்டு இன்று எல்லா இடங்களிலும் இடம்பெற்றுள்ளது.

பாவேந்தர் பாரதிதாசன், கண்ணதாசன், அண்ணா, ஈ.வி.கே. சம்பத், கலைஞர் கருணாநிதி என்று அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அந்த ஓவியத்தைத்தான் இன்று நாம் அங்கீகரித்து போற்றி வணங்கிக் கொண்டிருக்கிறோம்.

தற்போது அதற்கு மாறாக இளமையும், அறிவுக் கூர்மையும், தீட்சண்யமும் தெரியும் வகையிலான இளமை ததும்பும் திருவள்ளுவர் உருவத்தை இலங்கையில் வரைந்திருக்கிறார்கள். யாழ்ப்பாணம் இந்து கல்லூரியில் நேற்று மாலை நடைபெற்ற நிகழ்வில் இந்த புதிய திருவள்ளுவர் உருவப்படம் வெளியிடப்பட்டிருக்கிறது.

வேணுகோபால் ஷர்மா வரைந்து ஏற்றுக் கொள்ளப்பட்டு இருக்கிற திருவள்ளுவர்

திருநீற்றழகு பொலிய, முக மலர்ச்சியோடு, ராஜரிஷியாக சடை, வெண்ணூல், உருத்ராக்ஷம், இரண்டு ஆடைகள் பூண்டு காட்சி தரும் திருவள்ளுவ நாயனாரை அவர்கள் வரைந்து வெளியிட்டிருக்கிறார்கள். காண்போரை கண் விரிய கவர்ந்திழுக்கும் அழகோடு அந்த உருவப்படம் அமைந்திருக்கிறது. புதிய திருவள்ளுவரின் உருவப்படம் மக்களால் ஏற்றுக் கொள்ளப்படும் என்ற நம்பிக்கையில் யாழ்ப்பாணம் இந்து கல்லூரி இந்த படத்தை வெளியிட்டு இருக்கிறது. இந்தப் படத்துக்கு என்ன எதிர்வினைகள் வரும் என்பது இனிமேல்தான் தெரியவரும்.

x