சிறகை விரி உலகை அறி - 94. ‘9000 ஆண்டு குத்தகையில் தயாராகும் கின்னஸ் பியர்’


மது பீப்பாய்கள்

இடைவிடா இருமல். கண்ணுக்குள் தவழும் தூக்கத்தை கலைத்துப் போட்டு விளையாடியது இருமல். தலையைணையை மடித்து தலையை உயர்த்திப் படுத்தேன்; ஒருக்களித்து படுத்தேன்; சுவரில் சாய்ந்து அமர்ந்தேன். படுத்தால் இருமல் அமர்ந்தால் நிம்மதி. இரவெல்லாம் படுக்காமல் அமர்ந்திருந்தால் நிம்மதி கிடைத்துவிடுமா! தனி ஒருவனின் இருமலால் யாருக்கும் தொந்தரவில்லை என்பது மட்டுமே பெரிய ஆறுதலாக இருந்தது.

பயணம் புறப்படும்போதே, நண்பர் கொடுத்தனுப்பிய மருந்தை உள்நாக்கு நனைய 4 சொட்டு விட்டு படுத்தேன். மருந்தின் வீரியம் இருமலை நிறுத்திய சில விநாடிகளில் தூங்க ஆரம்பித்தேன். அறையின் வெப்பம் தாங்காமல் விழித்தபோது, மறுபடியும் 4 சொட்டு. அதிகாலை எழுந்து அயர்லாந்து நாட்டு தலைநகர் டப்ளின் செல்ல விமான நிலையம் சென்றேன்.

இந்தியக் கடவுச் சீட்டு உள்ளவர்களிடம் இங்கிலாந்து விசா இருந்தால், துருக்கி, அல்பேனியா, தாய்வான், கத்தார் உள்ளிட்ட 28 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும். மேலும், இங்கிலாந்து கூட்டமைப்பில் உள்ள, ஸ்காட்லாந்து, வேல்ஸ், மற்றும் அயர்லாந்து நாடுகளுக்கும் பயணிக்கலாம். லண்டன் விமான நிலையத்தில் நுழையும்போது காலை 6.30. ஆங்காங்கே பொன்மொழிகள் இருந்தன:

“உங்கள் மீது அக்கறை கொண்டுள்ள ஒருவர் எப்போதுமே இருக்கிறார்”.

“சரியாக இல்லாமல் இருப்பதுகூட சில வேளைகளில் சரிதான்”.

’துணியில்லா குடை’ மரங்கள்

டப்ளின் வரவேற்கிறது

டப்ளினில் பார்க்க வேண்டிய முக்கிய இடம், கின்னஸ் ஸ்டோர் ஹவுஸ். கூகுளில் வாசித்தபோதே, எதிர்பார்ப்பு எகிறியது. கின்னஸ் விருதுகள் அனைத்தும் ஒரே இடத்தில் இருக்கும், அனைத்தையும் பொறுமையாகப் பார்க்க வேண்டும். யாருக்கும் கிடைக்காத அரிய வாய்ப்பு என்று மகிழ்ந்தேன். பேரார்வம் தலைக்கு ஏறியது.

டப்ளினில் இறங்கி வெளியே வந்ததும் நகரத்துக்குச் செல்லும் பேருந்துகள் நின்றன. தனியார் பேருந்து என்பதால், அரசு பேருந்து தேடி, சிறிது தூரம் நடந்தேன். பேருந்துகள் வருவதும் போவதுமாக இருந்தன. எனக்கான பேருந்து வரவே இல்லை. மறுபடியும், விமான நிலைய வாசல் சென்றேன். நகரத்துக்குள் சென்று, 48 மணி நேரத்துக்குள் திரும்பி வருவதற்கான பயணச் சீட்டு வாங்கினேன். இயற்கையை ரசித்தபடி நகரத்தில் இறங்கினேன்.

பையைச் சுமந்துகொண்டு கின்னஸ் ஸ்டோர் ஹவுஸ் நோக்கி நடந்தேன். குளிரை விரட்ட குளிராடையும், கையுறையும் அணிந்திருந்தேன். சாலையோர மரங்களில் மலர்களில்லை. பிஞ்சு இலைகளில்லை. பறவைக் கூடுகளில்லை. துணியில்லாத விரிந்த குடைபோல நின்றன. 'நிலத்துக்குள் தலையை புதைத்து வேர்களை வெளியில் காட்டுகிறதோ மரங்கள்' என்று நினைத்தேன்.

’கின்னஸ்’ வாயிலில்

பயனுரு பொருட்கள்

ஒரு கடையின் கதவுக்கு மேல், “பயன்படுத்தப்பட்ட ஆடைகள், பழைய பொருட்கள், குறைந்த மதிப்புள்ள பொருட்கள் வாங்குவதும் விற்பதும்” என்று எழுதியிருந்தது. அருகில் வரையப்பட்டிருந்த கை, “கீழே பாருங்கள்” என்று சொன்னதால் பார்த்தேன். “புன்னகையுங்கள், நீங்கள் டப்ளினில் இருக்கிறீர்கள்!” என்று எழுதி, சிரிப்பதுபோல அரை வட்ட கோடு போட்டு, “ஒரு மனிதரின் குப்பை, மற்றொரு மனிதரின் பொக்கிசம்” என்று குறிப்பிட்டிருந்தது. உள்ளே பார்த்தேன். படங்கள், புத்தகங்கள், கண்ணாடிகள், பொம்மைகள், ஆடைகள் உள்ளிட்டவை இருந்தன.

அழகிய நினைவுகள்

கற்கள் பதித்த பாதையின் நடுவில் தரையோடு இருந்த தொடர்வண்டி பாதையைத் தொடர்ந்து சென்றேன். எதிரில் இருந்த கருப்பு கதவில், கின்னஸ் எனும் மஞ்சள் நிற எழுத்து வரவேற்றது. சுற்றி முன் வாசலுக்குச் சென்றேன். முன்பதிவு தாளுடன் வரிசையில் நின்றேன். நிறைந்த இருளுக்குள் மெல்லிய வெளிச்சம் வழிகாட்டியது. கின்னஸ் விருதுகளைப் பார்க்கப்போகிற உற்சாகத்தில், முதுகிலிருந்த பையை சரிசெய்துகொண்டு பெரிய அறைக்குள் நுழைந்தேன்.

ஒன்றுமே புரியவில்லை. திரும்பும் திசையெங்கும் மதுக் குவளைகள் தொங்கின. மது போத்தல் திறப்பான்கள் இருந்தன. கை பைகள், குடைகள், புத்தகங்கள், பொம்மைகள், சாவி கொத்துகள், டி-ஷர்ட்கள், தேநீர் குவளைகள் உள்ளிட்ட அனைத்துமே மதுக்கூடத்தில் இருக்கின்ற உணர்வையே கொடுத்தன. “இது ஒரு கிட்டங்கி. 1902-ஜுலையில் கட்டத் தொடங்கினார்கள். 4 ஆண்டுகள் கழித்து திறக்கப்பட்டது. அன்றிலிருந்து, ஏறக்குறைய ஒரு நூற்றாண்டு, நொதித்தல் (Fermentation) இங்கே நிகழ்ந்தது.” எனும் குறிப்பை வாசித்தேன்.

கின்னஸ் தொழிற்சாலை

அட ஆமாங்க!

இது கின்னஸ் விருதுகள் பாதுகாக்கப்படும் இடமல்ல. கின்னஸ் பியர் தயாரிக்கப்பட்ட இடம். பல்ப் வாங்கிவிட்டேன். ஆனாலும், அது பிரகாசமான பல்ப்! புதியதை அறியும் வாய்ப்பு உருவானது.

குத்தகை தொழிற்சாலை

மைய அறையில் ஒன்று கூடினோம். வழிகாட்டி வந்தார். “இந்த இடத்தில் செயல்பட்ட சிறிய மதுபான தொழிற்சாலையை ஆர்த்தர் கின்னஸ் (Arthur Guinness), 1759-ல், குத்தகைக்கு வாங்கினார். எத்தனை ஆண்டு குத்தகையாக இருக்கும் என நினைக்கிறீர்கள்?” என்று கேட்டார். 99, 200 என்று பலரும் சொன்னபோது, “9000 ஆண்டு குத்தகை” என்றார். விழி விரித்து வியந்தோம். “இதோ, இதுதான் குத்தகை ஆவணம்” என்று காட்டினார். பெரிய வட்ட வடிவ அமைப்பில், பல்வேறு மொழிகளில் ஆவணக் குறிப்பு இருக்க, ஆவண நகல் நடுவில் இருந்தது.

கின்னஸ் குத்தகை ஆவணம்

“கின்னஸ், தொடக்கத்தில் சாராயமும், பியரும் தயாரித்தார். 1799 முதல், அடர் கருப்பு நிற பியர் தயாரிப்பை தங்கள் நிறுவனத்தின் தனித்த அடையாளமாக்கினார். பின்னாட்களில், இது அயர்லாந்தின் மிகப் பெரிய மது தொழிற்சாலையாக உருவானது. தங்களுக்கென தனியாக தொடர்வண்டி வைத்திருந்தார்கள். 1860களில், இத்தொழிற்சாலை சிறிய நகரம் போல இயங்கியது. தொழிற்சாலையின் ஒரு பகுதியில் உள்ள கட்டிடத்தில்தான் நீங்கள் நிற்கிறீர்கள்” எனும் முன்னுரையுடன், “ஒவ்வொரு தளமாகச் செல்லுங்கள். எங்களது பியர் எப்படி தயாரிக்கப்படுகிறது என்பதை தெரிந்துகொள்ளுங்கள்” என்றார். நகரும் படியில் அடுத்த மாடிக்குச் சென்றேன்.

பியருக்கான மூலப்பொருட்கள்

“கின்னஸ் பியர் தயாரிக்க, இயற்கையான தண்ணீர், பார்லி, ஹோப்ஸ் செடி (Hops) மற்றும் ஈஸ்ட் ஆகிய மூலப்பொருட்களைப் பயன்படுத்துகிறோம். தரமானதைத் தேர்வு செய்கிறோம். பிறகு, எங்களது தனித்துவமான தயாரிப்பில் மிகச் சிறந்த பியர் உருவாகிறது.

விக்ளோ(Wicklow) மலையிலிருந்து தினமும் 8 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுத்துப் பயன்படுத்துகிறோம். அயர்லாந்தில் விளையும் பார்லியில், 1 லட்சம் டன் ஒவ்வோர் ஆண்டும் பயன்படுத்தப்படுகிறது.

ஹோப்ஸ்

ஹோப்ஸ் செடி, 15 அடி உயரம்கூட வளரும். பூமத்தியரேகையின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் மட்டும்தான் ஹோப்ஸ் வளரும். எனவே, ஆஸ்திரேலியா, செக் ரிபப்ளிக், ஜெர்மனி, யுனைட்டட் கிங்டம், அமெரிக்கா மற்றும் நியூஸ்லாந்திலிருந்து வாங்குகிறோம். தேர்ந்தெடுக்கப்பட்ட, அர்ப்பணிப்பு உணர்வுமிக்க அலுவலர்கள் ஹோப்ஸ் விதையை நசுக்கி அதன் அற்புதமான வாசனையும் தரத்தையும் அறிகிறார்கள்.

மதுவின் முக்கிய மூலக்கூறு ஈஸ்ட். முதலில் எகிப்தியர்கள் கண்டுபிடித்தார்கள். ஆர்த்தர் கின்னஸ் பயன்படுத்திய ஈஸ்டின் தொடர்ச்சிதான் கின்னஸில் இப்போதும் பயன்படுத்தப்படுவதாக நம்புகிறோம்.”

ஒவ்வொன்றாக வாசித்து வரும்போது, மேலிருந்து தண்ணீர் விழுவதைப் பார்த்தேன். நீல நிற வெளிச்சத்தில், நீர் போர்வை விரித்த உணர்வு எழுந்தது.

நீல வெளிச்சத்தில் தண்ணீர்

பியர் தயாரித்தல்

மூலக்கூறுகள் பற்றி அறிந்த பிறகு, பியர் செய்முறை பற்றியும், தொடக்க காலத்தில் அவர்கள் பயன்படுத்திய கருவிகள் பற்றியும் அறிந்தேன். பார்லியை சரியான பதத்தில் வறுப்பது மிகவும் முக்கியம். சொந்தமாக வறுத்து பியர் தயாரிக்கும் சில நிறுவனங்களுள் கின்னசும் ஒன்று. ஒவ்வோர் ஆண்டும், 21 ஆயிரம் டன் வறுக்கிறார்கள். ஒருமுறை, பார்லியை கொட்டி வறுக்கத் தொடங்கினால், பக்குவம் வர இரண்டரை மணி நேரம் ஆகும். நவீன தொழில்நுட்பம் வருவதற்கு முன்பாக, பெரிய பீப்பாய்களைப் பயன்படுத்தியுள்ளார்கள். பணியாளர்கள், கண் கொத்தி பாம்பு போல மிகவும் கவனமாக, பதம் பார்த்து இறக்கியுள்ளார்கள்.

வறுபடும் பார்லி

அருங்காட்சியகத்தில், ஒரு குவளையில் வெளிர் நிறத்தில் 0 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் பார்லி இருக்கிறது. வறுபட தொடங்கியதும், 190 செல்சியஸில், நிறம் மாறியிருப்பதைப் பார்க்கிறோம். 225 செல்சியஸில், முழுவதும் வறுபட்டதுபோல தெரிகிறது. உற்று நோக்கினால் இன்னும் தேவைப்படுகிறது. 232 செல்சியஸில், முழுமையாக வறுபட்டதைக் காட்டுகிறார்கள்.

மற்றொரு தளத்தில், பீப்பாய்கள் அடுக்கப்பட்டுள்ளன. சில பீப்பாய்களின் மூடியில் கணினி திரை உள்ளது. கடந்த கால வரலாற்றைச் சொல்கிறார்கள். இவ்வளாகத்தில் பீப்பாய் செய்ய மட்டுமே, 300 பேர்வரை ஒரே நேரத்தில் வேலை செய்துள்ளார்கள். அதன் பயனாக, 2 லட்சத்து 50 ஆயிரம் பீப்பாய்களை பிரமிட் போல அடுக்கி வைத்திருந்த படத்தைப் பார்த்தேன். ஒவ்வொரு வேலைக்கும் நிபுணத்துவமும் துல்லியமும் அவசியமல்லவா, பீப்பாய் செய்யும் வேலைக்கு வந்தவர்களுக்கு 7 ஆண்டுகள் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

விளம்பர புதுமை

விலங்குகளை வைத்து, விளம்பரப்படுத்துவதிலும் கின்னஸ் முத்திரை பதித்ததை பார்த்தேன். (1) பியர் குவளையைக் காணாமல் தேடிய ஒருவர் முதலையின் வாயைத் திறக்கிறார். வியக்கிறார். உள்ளே இருக்கிறது குவளை. (2) கின்னஸ் பியர் குடித்த ஒருவர், குதிரை வண்டியில் குதிரையை அமர வைத்து வண்டியை தான் இழுத்துச் செல்கிறார்.

கின்னஸ் விளம்பரம்

ஒவ்வொரு தளமாகப் பார்த்துவிட்டு கடைசியில், 7-வது மாடிக்குச் சென்றேன். பயணிகளுடன் சேர்ந்து நகரின் அழகை ரசித்தேன். அனைவருக்கும் சுவைக்க பியர் கொடுத்தார்கள். சுவைத்தேன். காக்கா முட்டை பீட்சா போலவே, அப்படி ஒன்றும் ருசியில்லை. பாதியை வைத்துவிட்டு, கீழிறங்கினேன்.

(பாதை விரியும்)

x