பாஜக எம்.பி.க்கள் எண்ணிக்கை சரிந்தும் பிரதமர் மோடி அரசு பாடம் கற்கவில்லை: சோனியா காந்தி சரமாரி குற்றச்சாட்டு


புதுடெல்லி: ‘‘மக்களவைத் தேர்தலில் பாஜக.வுக்கு எம்.பி.க்களின் எண்ணிக்கை குறைந்த பிறகும், பிரதமர் மோடி அரசு பாடம் கற்கவில்லை. இன்னும்மாயையில் இருக்கிறது’’ என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா குற்றம் சாட்டினார்.

காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற எம்.பி.க்கள் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சி யில் சோனியா காந்தி பேசியதாவது:

முதலில் கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு,பெரு வெள்ளத்தில் இறந்தவர்களுக்காக நாம் அஞ்சலி செலுத்துவோம். இயற்கை பேரிடரால் அங்கு மக்கள் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உதவிகளை கேரள மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

இயற்கை பேரிடரால் நாடு முழுவதும் பலர் உயிரிழக்கின்றனர். அதேவேளையில் அரசு நிர்வாகத் திறமையின்மையால் ரயில் விபத்துகளில் பலர் உயிரிழப்பது வேதனை அளிக்கிறது.

மக்களவைத் தேர்தலில் பாஜக எம்.பி.க்களின் எண்ணிக்கை சரிந்தபிறகு, அந்தக் கட்சி பாடம் கற்றுக்கொள்ளும் என்று நம்பினோம். ஆனால், பிரதமர் மோடி அரசுஇன்னும் மாயையில் உள்ளது. மத்திய பட்ஜெட், மணிப்பூர் வன்முறை, சாதிவாரி கணக்கெடுப்பு,ஜம்மு காஷ்மீரில் சமீபத்தில் நடைபெற்ற தாக்குதல் போன்றவிஷயங்களை கையாள்வதில்மத்திய அரசு பாரபட்சமாக நடந்துகொள்கிறது. பட்ஜெட்டில் விவசாயிகளின் கோரிக்கைகள், இளைஞர்களின் எதிர்பார்ப்புகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக பட்ஜெட்டில் ஏமாற்றம்தான் கிடைத்திருக்கிறது.

நாட்டில் கோடிக்கணக்கான மக்கள் விலைவாசி உயர்வாலும், வேலைவாய்ப்பின்மையாலும் அவதிப்படுகின்றனர். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு தயங்குகிறது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாததால், தற்போது நாட்டில் உள்ள மக்கள்தொகையை அறிய முடியவில்லை. குறிப்பாக பட்டியலின மக்கள் மற்றும் பழங்குடியின மக்களின் நிலை குறித்து அறிய முடியவில்லை. மத்தியில் உள்ள அரசு மக்களை இனரீதியாக பிரித்து அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.

இந்த வேளையில் நமது கட்சிதொண்டர்கள், நிர்வாகிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். மக்களவைத் தேர்தலில் செயலாற்றியது போலவே, வருகிற மாநில தேர்தல்களிலும் இணைந்து பணியாற்றுங்கள். அப்படி செயல்படும் போது தேசிய அளவில் அரசியல் மாற்றங்கள் ஏற்படும். இவ்வாறு சோனியா காந்தி பேசினார்

x