கேரளா நிலச்சரிவு குறித்து 5 நாட்களுக்கு முன்பே எச்சரிக்கப்பட்டது: மாநிலங்களவையில் அமித் ஷா தகவல்


புதுடெல்லி: கனமழை, வெள்ளம், நிலச்சரிவு இருக்கும் என கேரளாவுக்கு 5 நாட்களுக்கு முன்பாகவே எச்சரிக்கை விடுக்கப்பட்டது என்று மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாதெரிவித்தார்.

கேரளாவின் வயநாட்டில் நேற்று முன்தினம் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இந்நிலையில் அங்கு போர்க்கால அடிப்படையில் மீட்புப்பணி 2 வது நாளாக நடைபெற்று வருகிறது. ராணுவம், கடற்படை, தேசிய பேரிடர் மீட்புப்படை, மாநில பேரிடர் மீட்புப்படை, விமானப்படை, தீயணைப்புப் படையினர் உள்ளிட்டோர் மீட்பு பணியில் களம் இறங்கி உள்ளனர். இதனிடையே நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 224 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், மாநிலங்களவையில் வயநாடு நிலச்சரிவு தொடர்பான சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்துக்குப் பின்னர் மத்திய உள்துறை அமித்ஷா பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

வெள்ளம், கனமழை, நிலச்சரிவு குறித்து கேரளாவுக்கு 5 நாட்களுக்கு முன்பே மத்திய அரசு எச்சரிக்கையை வழங்கியது. மழை மற்றும் நிலச்சரிவு குறித்து கேரளாவுக்கு 2 முறை எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

மத்திய அரசு கொடுத்த எச்சரிக்கையை கேரள அரசு புறம் தள்ளியது ஏன்? மத்திய அரசின் எச்சரிக்கையைஏற்று செயல்பட்டிருக்க வேண்டும். 5 நாட்களுக்கு முன்னதாகவே எச்சரிக்கை விடுக்கப்பட்டதால்தான் தேசியபேரிடர் மீட்புப்படை முன்கூட்டியே அங்கு சென்றது. குஜராத் மாநிலத்தில் சூறாவளி ஏற்பட்டபோது 3 நாட்களுக்கு முன்பு எச்சரிக்கை வழங்கினோம். அதை குஜராத் அரசு தீவிரமாக எடுத்துக்கொண்டதால் ஒரு பசு கூட அங்கு இறக்கவில்லை.

இயற்கை பேரிடர் குறித்து 7 நாட்களுக்கு முன்பே எச்சரிக்கை வழங்கும் முதன்மையான 4 நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. இயற்கை பேரிடர் முன்னெச்சரிக்கை அமைப்பு சரியாக செயல்பட்டு வருகிறது.

மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 90 சதவீத தொகையை செலவழிப்பதற்கு மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை. எவ்வித அரசியல் வேறுபாடும் இன்றி கேரள மாநிலத்துக்கு மத்திய அரசு துணை நிற்கும். தயது செய்து மத்திய அரசு கொடுக்கும் எச்சரிக்கையை மாநிலஅரசுகள் படித்து பார்க்க வேண்டும்.

அந்த எச்சரிக்கைக்கு மதிப்புகொடுத்து மாநில அரசுகள் செயல்படவேண்டும். அப்படிச் செயல்படும் போது இயற்கை பேரிடரிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

ஆரஞ்சு எச்சரிக்கைதான் விடுக்கப்பட்டது: கேரள முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

வயநாடு மாவட்டத்தில் கனமழை தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கைதான் விடுத்தது. மத்தியஅமைச்சர் அமித் ஷா கூறியிருப்பது போல சிவப்பு எச்சரிக்கை விடுக்கவில்லை. ஆரஞ்சு எச்சரிக்கை என்பது 6 முதல் 20 செ.மீ. வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்பதை குறிக்கும். ஆனால், வயநாடு பகுதியில் 50 செ.மீ.க்கு மேல் மழை பெய்தது.

செவ்வாய்க்கிழமை நிலச்சரிவு ஏற்பட்ட பிறகுதான் வயநாடு மாவட்டத்துக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. எனினும், ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டுவதற்கு இது சரியான தருணம் அல்ல. எனவே, முன்கூட்டியே சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்த கருத்தை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியிலிருந்து இது வரை 1,592 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 82 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 2,017 பேர் தங்கி உள்ளனர். அவர்களுக்குதேவையான உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மீட்புப் பணியில் ஈடுபடுவதற்காக மேலும் 132 ராணுவ வீரர்கள் வந்துள்ளனர். மீட்புப் பணியில் 2 ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப் படுகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

x