பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கரின் தேர்ச்சி ரத்து: யுபிஎஸ்சி நடவடிக்கை


புதுடெல்லி: மத்திய அரசு பணியாளர் தேர்வா ணையம் (யுபிஎஸ்சி) நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறிய தாவது:

கடந்த 2022-ல் குடிமைப்பணி தேர்வு மூலம் பயிற்சி ஐஏஎஸ் அதிகாரியான பூஜா கேத்கர் (34) தனது அடையாளத்தை போலியாக மாற்றி தேர்வு விதிகளின் கீழ் அனுமதிக்கப்பட்ட வரம்பை மீறி மோசடி செய்தது தெரியவந்தது. இது குறித்து விளக்கம் அளிக்க பூஜா கேத்கருக்கு ஜுலை 30 வரை யுபிஎஸ்சி அவகாசம் அளித்திருந்தது.

ஆனால், கால அவகாசத்துக்குள் தன் தரப்பு விளக்கத்தை அளிக்க பூஜா கேத்கர் தவறிவிட்டார். இந்நிலையில், இதுவரைஅவர் தொடர்பாக கிடைக்கப்பெற்ற ஆவணங்களைத் தீவிரமாக ஆராய்ந்ததில், பூஜா கேத்கர் மீதான குற்றச்சாட்டுகள் உண்மையானவை என்பது தெளிவாகி உள்ளது. எனவே, பயிற்சி ஐஏஎஸ் அதிகாரியான பூஜா கேத்கரின் தேர்ச்சி ரத்து செய்யப்படுகிறது. அத்துடன் எதிர்காலத்தில் யுபிஎஸ்சி நடத்தும் எந்தவொரு தேர்விலும் பங்கேற்க அவருக்கு நிரந்தர தடை விதிக்கப்படுகிறது.

ஒரு விண்ணப்பதாரர் எத்தனை முறை யுபிஎஸ்சி தேர்வு எழுதலாம் என்கிற வரையறையை பூஜா கேத்கர் எத்தனை முறைமீறினார் என்பதைக் கண்டறிய முடியவில்லை. ஏனெனில் அவர்தன்னுடைய பெயரை மட்டுமல்லாமல் தனது பெற்றோரின் பெயர்களையும் போலியாக மாற்றி மோசடி செய்துள்ளார். இத்தகைய மோசடி இனி ஒருபோதும் நிகழாத வகையில் யுபிஎஸ்சி தேர்வு விதிகள் வலுவாக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

x