ராகுல் காந்தியை விமர்சித்த அனுராக் தாக்குருக்கு ஆதரவு தெரிவித்த பிரதமர் மோடி மீது காங்கிரஸ் உரிமை மீறல் புகார்


புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதத்தில் கடந்த 29-ம் தேதி பங்கேற்று பேசிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

இந்நிலையில், பாஜக எம்.பி.யும் முன்னாள் மத்திய அமைச்சருமான அனுராக் தாக்குர், நேற்று முன்தினம் மக்களவையில் பேசும்போது, “தனது சாதி பற்றி தெரியாதஒருவர் சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி பேசுகிறார். ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்க எதிர்ப்புதெரிவித்தவர் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி என்பதை இந்த அவைக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்” என தெரிவித்தார்.

இதையடுத்து, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அவையின் மையப்பகுதிக்குச் சென்று அனுராக் தாக்குருக்கு எதிராக கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவரது பேச்சை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

அப்போது அவையை நடத்திக் கொண்டிருந்த பாஜக உறுப்பினர் ஜெகதாம்பிகா பால், அனுராக் தாக்குர் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்குவது குறித்து பரிசீலிப்பதாக தெரிவித்தார். அத்துடன் ராகுல் காந்தி பேச அனுமதி அளித்தார்.

ராகுல் பேசும்போது, “நாங்கள் (எதிர்க்கட்சிகள்) ஆட்சிக்கு வந்தால்சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது தொடர்பான மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவோம்” என்றார்.

பின்னர் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் பேசும்போது, “அனுராக் அமைச்சராக பொறுப்பு வகித்துள்ளார். பெரிய கட்சியின் உறுப்பினராக உள்ளார். அவர் எப்படி ஒருவருடைய சாதி பற்றி கேட்கலாம்? இதை ஏற்க முடியாது” என்றார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் அனுராக் தாக்குர், அகிலேஷ் யாதவின் பழைய வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதில், ஒரு பத்திரிகையாளரிடம் பெயர் மற்றும்சாதி பற்றி அகிலேஷ் கேட்கிறார்.

இதனிடையே, அனுராக் தாக்குரின் பேச்சு அடங்கிய வீடியோவை பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதில், “என்னுடைய இளைய மற்றும் துடிப்பான சக உறுப்பினர் அனுராக் தாக்குர் பேசியுள்ள கருத்தை நீங்கள் அவசியம் கேட்க வேண்டும். இதில் உண்மையும் நகைச்சுவையும் கலந்திருக்கிறது. அதேநேரம், இண்டியாகூட்டணியின் கீழ்த்தரமான அரசியலை வெளிச்சம் போட்டு காட்டி உள்ளார்” என பதிவிட்டுள்ளார்.

சரண்ஜித் சிங் சன்னி புகார்: அனுராக் தாக்குர் பேசியதை ஆதரித்து பாராட்டு தெரிவித்த பிரதமர் மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் உரிமை மீறல் பிரச்சினையை எழுப்பி உள்ளன. பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. சரண்ஜித் சிங் சன்னி மக்களவை செயலாளரிடம் பிரதமர் மோடி குறித்து புகார் மனு அளித்துள்ளார்.

அதில், “மக்களவையில் அனுராக் தாக்குர் பேசிய சர்ச்சைக்குரிய கருத்துகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. எனினும், அதுகுறித்த வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்த பிரதமர் மோடி, அதுகுறித்து கருத்தும் தெரிவித்துள்ளார்” என கூறப்பட்டுள்ளது.

ஆனால், அவைக்குறிப்பில் இருந்து நீக்குவதற்கு முன்பே பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துவிட்டார் என பாஜகவினர் தெரிவித்துள்ளனர்

x