அனுராக் தாக்கூரின் சர்ச்சை கருத்தை பகிர்ந்த பிரதமர் மோடி: உரிமை மீறல் புகார் அளித்த காங்கிரஸ்


புதுடெல்லி: மக்களவையில் ராகுல் காந்தியின் சாதியை தொடர்புபடுத்தி பாஜக எம்.பி-அனுராக் தாக்கூர் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். அவை குறிப்பிலிருந்து நீக்கப்பட்ட இந்தக் கருத்தை கொண்ட உரையை, பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் பகிர்ந்ததைத் தொடர்ந்து அவருக்கு எதிராக காங்கிரஸ் உரிமை மீறல் புகார் அளித்துள்ளது.

மக்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்தின் போது பாஜக எம்.பி- அனுராக் தாக்கூர் பேசுகையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை, சாதியை மையப்படுத்தி சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். அனுராக் தாக்கூரின் இந்தப் பேச்சுக்கு அவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் ஆட்சேபனை தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.

அனுராக் தாக்கூரின் இந்த சர்ச்சைக்குரிய கருத்து, அவை குறிப்பிலிருந்து உடனடியாக நீக்கப்பட்டது. ஆனால், அனுராக் தாக்கூர் பேசிய கருத்துகளை, பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பகிர்ந்தார். அந்தப் பதிவில் பிரதமர், "எனது இளம் மற்றும் ஆற்றல் மிக்க சகா அனுராக் தாக்கூரின் இந்த உரையை அவசியம் கேட்க வேண்டும். உண்மைகள் மற்றும் நகைச்சுவையின் சரியான கலவை. இந்தியக் கூட்டணியின் மோசமான அரசியலை அம்பலப்படுத்துகிறது.” என குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்ட கருத்துகளை, பிரதமர் பொது வெளியில் பகிர்ந்தது நாடாளுமன்ற உரிமை மீறல் என காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. ஜலந்தர் காங்கிரஸ் எம்.பி- சரண்ஜித் சிங் சன்னி, இது தொடர்பாக மக்களவையின் பொதுச் செயலாளரிடம் அதிகாரப்பூர்வமாக புகார் அளித்துள்ளார்.

x