‘ஒரு வாரத்துக்கு முன்பே கேரள அரசுக்கு எச்சரிக்கை அளித்தோம்’ - வயநாடு நிலச்சரிவு குறித்து மாநிலங்களவையில் அமித்ஷா விளக்கம்


புதுடெல்லி: இயற்கை பேரிடர் குறித்து ஒரு வாரத்துக்கு முன்பே கேரள அரசுக்கு மத்திய அரசு சார்பில் எச்சரிக்கை தகவல் தரப்பட்டது என வயநாடு நிலச்சரிவு பேரழிவு குறித்து மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று தெரிவித்தார்.

கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் கனமழை காரணமாக மலைக்கிராமங்களில் பெரும் நிலச்சரிவுகள் ஏற்பட்டு 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 200-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் சகதிகளில் புதையுண்டு அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

வீடுகள் மண்ணில் புதைந்து, சாலைகள், பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. இதனால் முண்டக்கை, சூரல்மலை உள்ளிட்ட பகுதிகள் நிலைகுலைந்துள்ளன. அங்கு ராணுவத்தின் 300 வீரர்கள், கடற்படை குழுவினர், தேசிய பேரிடர் மீட்புப் படையினர், இந்திய கடலோர காவல் படையினர் உள்ளிட்ட பல்வேறு குழுக்களைச் சேர்ந்தவர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் வயநாடு நிலச்சரிவு பேரழிவு விவகாரத்தில் மாநிலங்களவையில் கொண்டுவரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்தின்போது குறுக்கிட்டு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று பேசியதாவது:

“கனமழை காரணமாக வயநாட்டில் ஜூலை 30ம் தேதி ஏற்பட்ட இயற்கை பேரிடர் குறித்து ஜூலை 23ம் தேதியே கேரள அரசுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதே நாளில் தேசிய பேரிடர் மீட்புப் படையின் 9 குழுக்கள் அம்மாநிலத்திற்கு விரைந்தன. ஜூலை 24 அன்று மற்றொரு எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டது. ஆனாலும், கேரள அரசு ஆரம்ப எச்சரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை.

ஒடிசா, குஜராத் உட்பட பல மாநிலங்கள் புயல் போன்ற இயற்கை பேரிடர்களின் தாக்கத்தை குறைக்க, மத்திய அரசு விடுத்த முன்னெச்சரிக்கைகளுக்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டன. தேசிய பேரிடர் மீட்புப் படை குழுக்கள் அங்கு சென்ற பிறகாவது, கேரள அரசு உஷாராகி செயல்பட்டிருந்தால் இழப்புகளைக் குறைத்திருக்கலாம்.

இந்த சோகமான தருணத்தில் நரேந்திர மோடி அரசாங்கம், கேரள அரசு மற்றும் மாநில மக்களுடன் பாறை போன்று உறுதியாக நிற்கிறது. மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது.” இவ்வாறு அமித் ஷா பேசினார்.

x