வயநாடு நிலச்சரிவு: தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர், தாய் சடலமாக மீட்பு


வயநாடு: நிலச்சரிவில் சிக்கி மலையாள தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் மற்றும் அவரது தாயின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் நேற்று அதிகாலையில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இது மாவட்டத்தின் மேப்பாடி, முண்டக்கை டவுன் மற்றும் சூரல்மலா ஆகிய பகுதிகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. ஒரே நாளில் 300 மில்லி மீட்டர் அளவு மழை பெய்ததால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை தொடர்ந்து நிலச்சரிவும் ஏற்பட்டது. அத்துடன் பல இடங்களில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 164 ஆக உயர்ந்துள்ளது. முண்டக்கை பகுதியில் நடைபெற்று வரும் மீட்பு பணிகளில் இன்று 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதில் சூர்யா டிஜிட்டல் விஷன் தொலைக்காட்சியில் ஒளிப்பதிவு உதவியாளராக பணிபுரிந்த ஷிஜு உயிரிழந்துள்ளது தெரிய வந்துள்ளது. இதை கேரளாவின் திரைப்பட ஊழியர் சம்மேளனம் உறுதி செய்துள்ளது. நிலச்சரிவில் உயிரிழந்த ஷிஜு 'மாளிகைப்புரம்', 'அணியாதிபிரவு' மற்றும் 'அம்மக்கிளி' போன்ற பிரபலமான சீரியல்களில் பணியாற்றியவர் ஆவார்.

மேலும் ஷிஜுவின் தாயின் சடலமும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஷிஜுவின் சகோதரனும், மகளும் பேரழிவில் இருந்து தப்பித்து மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர், அதே நேரத்தில் அவரது தந்தை உட்பட மற்ற குடும்ப உறுப்பினர்களைக் கண்டறியும் முயற்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் ஷிஜுவின் பக்கத்து வீட்டில் வசித்த சக ஊழியர் படுகாயத்துடன் உயிர் பிழைத்துள்ளார். ஆனால், அவரது குடும்பத்தினரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

x