புதுடெல்லி: ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீட்டு பிரீமியங்கள் மீதான ஜிஎஸ்டி-யை நீக்குமாறு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீட்டு பிரீமியங்கள் மீதான ஜிஎஸ்டி-யை நீக்குமாறு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு, பாஜக மூத்த தலைவரும், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சருமான நிதின் கட்கரி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
"ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவ காப்பீட்டு பிரீமியங்கள் இரண்டிற்கும் 18 சதவீத ஜிஎஸ்டி வரிவிதிப்பின் கீழ் உள்ளன. ஆயுள் காப்பீட்டு பிரீமியத்தின் மீது ஜிஎஸ்டி விதிப்பது என்பது வாழ்க்கையின் நிச்சயமற்ற தன்மைகளுக்கு வரி விதிப்பதற்கு சமம். குடும்பத்திற்கு சில பாதுகாப்பை வழங்குவதற்கான, வாழ்க்கையின் நிச்சயமற்ற தன்மைகளின் அபாயத்தை ஈடுசெய்யும் நபருக்கு, இந்த அபாயத்திற்கு எதிராக காப்பீடு வாங்குவதற்கான பிரீமியத்தின் மீது வரி விதிக்கப்படக்கூடாது என நாக்பூர் கோட்ட ஆயுள் காப்பீட்டுக் கழக ஊழியர்கள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இதேபோல், மருத்துவ காப்பீட்டு பிரீமியம் மீதான 18 சதவீத ஜிஎஸ்டி சமூக ரீதியாக அவசியமான இந்த பிரிவின் வணிகத்தின் வளர்ச்சிக்கு ஒரு தடை என நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆயுள் காப்பீடு மூலம் சேமிப்புக்கு வேறுபட்ட சிகிச்சை, மருத்துவ காப்பீட்டு பிரீமியத்திற்கான வரி விலக்குகளை மீண்டும் அறிமுகப்படுத்துதல், பொது மற்றும் துறை பொது காப்பீட்டு நிறுவனங்களின் ஒருங்கிணைப்பு தொடர்பாக காப்பீட்டுக் கழக ஊழியர்கள் அமைப்பு சில கருத்துகளை முன்வைத்துள்ளது.
மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு, ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீட்டுப் பிரீமியத்தின் மீதான ஜிஎஸ்டி-யைத் திரும்பப் பெறுவதற்கான ஆலோசனையை முன்னுரிமையின் அடிப்படையில் பரிசீலிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்" இவ்வாறு நிதின் கட்கரி அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.